2019 இல் உலக நாடுகளில் 250 பத்திரிகையாளர்கள் சிறையில்!

2019 இல் தங்கள் எழுத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு மிகவும் அதிகமானதாக காணப்படுகின்றது.

சீனா பத்திரிகைகள் மீதான தனது இரும்புப்பிடியை மேலும் கடினமாக்கியுள்ளஅதேவேளை  துருக்கி சுயாதீன செய்தியிடலை முற்றாக தடை செய்துள்ள நிலையிலேயே இந்த சூழ்நிலை காணப்படுகின்றது.

மேலும் சிறையிலிருந்து விடுதலையான பத்திரிகையாளர்கள் நீதிமன்ற விசாரணைகளையும் மேல்முறையீடுகளையும் எதிர்கொண்டு காத்திருக்கின்றனர்.

ஏதேச்சதிகாரமும், ஸ்திரமற்ற தன்மையும், ஆர்ப்பாட்டங்களும் பல பத்திரிகையாளர்கள் மத்திய கிழக்கில் சிறைகளில் வாடும் நிலையை உருவாக்கியுள்ளது.குறிப்பாக சவுதி அரேபியாவில் இந்த நிலை காணப்படுகின்றது,உலகில் பத்திரிகையாளர்கள் அதிகளவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடுகளில் மூன்றாவதாக சவுதி அரேபியா காணப்படுகின்றது, எகிப்தும் அதே நிலையில் உள்ளது.

பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு மேற்கொண்ட வருடாந்த ஆய்வின் போது 250 பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளிற்காக  சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 2018 இல் 255பேர் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தனது ஆய்வினை வெளியிட ஆரம்பித்த பின்னர்  அதிகளவு பத்திகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டாக 2017 காணப்படுகின்றது- குறிப்பிட்ட வருடத்தில் 273 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பத்திரிகையாளர்களை சிறையில் அடைக்கும் நாடுகளில் சீனா,துருக்கி சவுதி அரேபியா எகிப்து ஆகியன முன்னணியில் உள்ளன இந்த நாடுகளை போன்று எரித்திரியா வியட்நாட் ஈரான் போன்றவையும் அதிகளவில் பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்துள்ளன.

கடந்த வருடங்களை போல அனேகமான பத்திரிகையாளர்கள்  அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிழையான  செய்திகளிற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் 30 ஆக அதிகரித்துள்ளது, கடந்த வருடம் 28 ஆக காணப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை எகிப்தின் அப்தெல் சிசியின் அரசாங்கமே அதிகமாக பயன்படுத்துகின்றது.2012 இல் இந்த குற்றச்சாட்டின் கீழ் ஒரேயொரு பத்திரிகையாளரே சிறையில் அடைக்கப்பட்ட நிலை காணப்பட்டது ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஒடுக்குமுறை அரசாங்கங்களான சிங்கப்பூர் ரஸ்யா போன்றனவும் போலிச்செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான  சட்டங்களை இயற்றியுள்ளன.

கடந்த நான்கு வருடங்களில் முதல் தடவையாக பத்திரிகையாளர்களை அதிகளவு சிறையில் அடைத்த நாடாக துருக்கி காணப்படாதமை இந்த வருடம் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.ஆனால் இந்த எண்ணிக்கை குறைவை வைத்துக்கொண்டு துருக்கியில் ஊடகவியலாளர்களின் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது என்ற முடிவிற்கு வரமுடியாது.

கடந்த வருடம் 68 பத்திரிகையாளர்கள் துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டனர்,இந்த வருடம் 47 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,இது சுயாதீன ஊடகங்களிற்கு எதிராக துருக்கியின் தயீப் எர்டோகன் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதை புலப்படுத்தியுள்ளது, 100ற்கும் மேற்பட்ட சுயாதீன ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ,பல பத்திரிகையாளர்களிற்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை துருக்கி அரசாங்கம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் ஊடக நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் காரணமாகபெருமளவு பத்திரிகையாளர்கள் நாடு கடந்தும்,வேலையற்றவர்களாகவும், சுயதணிக்கையை பின்பற்றக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர்.

துருக்கியில், இன்னமும் சிறையில் அடைக்கப்படாத நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் நீதிமன்ற விசாரணைகளையும் மேல் முறையீடுகளையும் எதிர்கொண்டுள்ளதால் சிறையில் அடைக்கப்படக்கூடிய ஆபத்தை எதிர்கொள்கின்றனர்,சிலர் தலைமறைவான நிலையில் தண்டனை விதிக்கப்பட்டு துருக்கிக்கு சென்றால் கைதுசெய்யப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

விசாரணை காரணமாக எப்படி தான் விடுவிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்பதை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவிடம் எடுத்துரைத்த செமிகா சகின் என்ற பத்திரிகையாளர் தனக்கு அதிகாரிகள் இலத்திரனியல் கருவியை பொருத்தாதன் காரணமாக தான் சுதந்திரமாக உள்ளபோதிலும் எந்தவேளையிலும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

1990களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு கணக்கெடுக்க ஆரம்பித்த பின்னர் அதிகளவு பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்த நாடு என்ற பெருமையற்ற கௌரவத்திற்காக சீனாவுடன் துருக்கி போட்டிபோட்டு வந்துள்ளது.

2019 இல் சீனாவில் 48 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது.2018 இல் காணப்பட்டதை விட ஒருவர் அதிகமாகும்.

சீனா ஜனாதிபதி நாட்டின் மீதான அரசியல் கட்டுப்பாட்டினையும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாட்டினையும் இறுக்கமாக்கி வருவதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்படும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

சீனாவின் ஊடகங்களிற்கு புலனாய்வு செய்தியாளராக பணியாற்றிய சுயாதீன பத்திரிகையாளர் சோபியா குயிகின் என்பவர் கடந்த ஒக்டோபரில் கைதுசெய்யப்பட்டார், அவரது புளொக் ஹொங்கொங்கின் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவாக செயற்படுகின்றது என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பிரச்சினைகளை தூண்டுகின்றார் என்ற குற்றச்சாட்டு அவரிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. தங்களிற்கு அச்சுறுத்தலானவர்கள் என  கருதுபவர்களிற்கு எதிராக- அரசாங்கத்தை விமர்சிப்பவர்களிற்கு எதிராக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுவது வழமை.

மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பு முகாம்களிற்கு அனுப்பப்பட்டுள்ள சின்ஜியாங் மாநிலத்தில் பல பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவிலும் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்படுவது அதிகரித்துள்ளது.பத்திரிகையாளர்களாக பணிபுரிவதை நிறுத்தியுள்ள பல பத்திரிகையாளர்களும் சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

2019 இல் சவுதி அரேபியாவில் 26 பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர்,அதிகாரிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை,18 பேரிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை,இவர்களில் இருவருக்கு எதிராக அவசரஅவசரமாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் பத்திரிகையாளர் ஒருவரிற்கு எதிராக வன்முறையுடன் கூடிய துஸ்பிரயோகம் பயன்படுத்தப்பட்டது,

எகிப்தின் தலைநகரில் செய்தியாளர் இஸ்ரா அப்தெல்பட்டா பயணம் செய்த காரை பின்தொடர்ந்த இனம்தெரியா நபர்கள் அவரை வாகனத்திலிருந்து இழுத்து தாக்கினார்கள் என அவருடன் பயணம் செய்த சக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்த பெண் பத்திரிகையாளர் தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்காததால்  தான் மீண்டும் தான் தாக்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

2019 இல் அதிகளவு ஆர்ப்பாட்டங்களை சந்தித்த ஈரானில் 11 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காஸ் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து இணையங்கள் முடக்கப்பட்டமைக்கு எதிராக டுவிட்டரில் சுதந்திர உலகமே என டுவிட்டரில் பதிவு செய்த பிரபல பொருளாதார செய்தியாளர் முகமட் மொசாட் கைதுசெய்யப்பட்டார்.

ரஸ்யா ஏழு பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்துள்ளது.