அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருந்தது.
ஆனால் அந்த கோரிக்கையை இதுவரைக்கும் தெற்கின் பெரும்பாலான சிங்கள சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையிலேயே தற்போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஞானசார தேரர் கூறியுள்ளார்.
மேலும் அவர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை ஞானசார தேரருக்கு வந்தது வரவேற்கதக்க விடயமாகும். இந்த சிந்தனை அனைத்து தெற்கு சமூகத்தினரிடமும் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
இது ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினையாகும். இந்த அரசியல் சார்ந்த பிரச்சினையை அரசியல் ரீதியாகவே நோக்க வேண்டும். இதனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கண்கொண்டு பார்க்ககூடாது என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.
எனினும் ஆணைக்குழுக்கள் நியமிப்பது ஒரு கண்துடைப்பு செயலாகும். கடந்த காலங்களில் எத்தனையோ ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் எந்த அரசாங்கத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம்” என மேலும் தெரிவித்தார்.