குடும்ப அரசியல் செய்கின்றார்கள் என எதிரணியினர் என்ன தான் மக்கள் மத்தியில் ராஜபக் ஷ அணியினரை பற்றி விமர்சனம் செய்தாலும் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதையெல்லாம் காதில் போடாமல் கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தனர் மக்கள்.
எதிர்பார்த்தது போலவே தான் ஜனாதிபதியானவுடன் அண்ணன் மஹிந்தவை பிரதமராக்கினார் ஜனாதிபதி கோத்தாபய. தனது மற்றுமொரு அண்ணன் சமல் ராஜபக் ஷவை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக்கினார். மக்களின் மெளனம் தொடர்கிறது. தேர்தல் காலத்தில் எதிரணியிடமிருந்து ஒலித்த குடும்ப அரசியல் கோஷங்களை இப்போது காணமுடியவில்லை.
தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் வேட்பாளராக பல நிகழ்வுகளில் பங்கு கொண்ட கோத்தாபய ராஜபக் ஷவிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவரால் பதில் கூற முடியவில்லை. அதற்கு பதில் கூறி சமாளித்தவர் அவரது சகோதரர் மஹிந்த. இந்த சம்பவங்களை கூட எதிரணியினர் தமது பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர்.
கோத்தாபய ஜனாதிபதியானாலும் கூட அவரை வழிநடத்துபவராக அவரது அண்ணன் மஹிந்தவே இருக்கப்போகின்றார் என்றெல்லாம் எதிரணியினர் மேடைகளில் பேசி மக்கள் மனதை மாற்ற முயற்சி செய்தனர். எனினும் அவர்கள் எதிர்பார்த்தது ஒன்றும் இடம்பெறவில்லை. ஆனால் இந்த விமர்சனங்களையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத ஜனாதிபதி கோத்தாபய, தற்போது தனது தனித்துவமான செயற்பாடுகளால் மக்களை ஈர்த்து வருகிறார் .
தன்னால் தனித்து இயங்க முடியும் என்றும் தனது அண்ணன் மஹிந்தவை பின்பற்றி அவரைப்போன்றதொரு அரசியலை செய்யத்தேவையில்லை என்றும் அவர் பல விடயங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இதில் பிரதானமாக மக்களை கவர்ந்த விடயம் அநாவசிய செலவுகளையும் வீண் விரயங்களையும் கட்டுப்படுத்துதல் ஆகும். மஹிந்த ஆட்சி காலத்தில் அவர் விமர்சிக்கப்பட்டதற்கு பிரதான காரணமே அவரினதும் அவர் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆடம்பர செலவுகள் தான். இதிலிருந்து விலகி நிற்க கோத்தாபய முடிவு செய்திருக்கிறார்.
வெளிநாட்டு கொள்கைகளிலும் தனித்துவம்
இதே வேளை தான் ஜனாதிபதியானவுடன் இலங்கையுடனான தனது வெளிநாட்டு கொள்கைகளிலும் சற்று இறுக்கத்தை கோத்தாபய கடைபிடிக்கின்றாரோ எனக் கூறத்தோன்றுகிறது. தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா சென்றிருந்த கோத்தாபய அங்கு பிரதமர் மோடி உட்பட பல இந்திய பிரமுகர்களை சந்தித்திருந்தார். மோடியின் பிரதான கோரிக்கையே தேர்தலுக்குப்பின்னர் இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்களின் சமத்துவம், நீதி, கெளரவம், அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க முயற்சிகளை புதிய ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்பதாகும்.
அதாவது 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது முக்கியம் என்பதாகத்தான் மோடியின் எதிர்பார்ப்பு இருந்தது. அதை மறைமுகமாகவும் அதே வேளை இராஜதந்திர அணுகுமுறையிலும் கோத்தாபயவிடம் வலியுறுத்தியிருந்தார் பிரதமர் மோடி. இதற்கு ஜனாதிபதி கோத்தாபயவிடமிருந்து நேரடியாக என்ன பதில்கள் வெளிப்பட்டிருக்கும் என்பது எவருக்கும் தெரிந்திருக்காது. கூடுதலாக கதைப்பதை விட செயற்பாட்டில் அதிக அக்கறை காட்டும் ஒருவராகவே கடந்த காலங்களிலும் கோத்தாபய நோக்கப்பட்டிருக்கிறார். எனினும் மரியாதை நிமித்தம் அவர் பிரதமர் மோடியிடம் அது குறித்து பரிசீலிக்கலாம் அல்லது அதற்கீடான மாற்றுத்திட்டங்கள் பற்றி கதைப்போம் என்று கூறியிருக்கலாம். அதற்கு அடுத்ததாக அவர் இந்திய ஊடகங்களிடமே இவ்விடயம் பற்றி மனந்திறந்து கதைத்திருந்தார். இதை இந்திய அரசாங்கத்துக்கு வழங்கிய செய்தியாகவும் நாம் கொள்ளலாம். பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோத்தாபய புது டெல்லியில் வைத்து தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியின் போது 13 ஆவது திருத்தச்சட்டத்தில் சில விடயங்களை அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது தமிழர் வாழும் பிரதேசங்களில் அபிவிருத்தியைப்பற்றியே தான் யோசிப்பதாகவும் குறித்த பகுதிகளில் அபிவிருத்தி பற்றி பெரும்பான்மையினரும் அக்கறை கொண்டிருப்பதாகவும் அரசியல் வேறு அபிவிருத்தி வேறு என்று பொருள்பட பேசியுள்ளார்.
கடந்த காலங்களில் கடும் போக்காளராக சித்திரிக்கப்பட்டிருந்தாலும் சிங்கள மக்களின் கணிசமான வாக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய, அம்மக்களின் இன உணர்வுகளை சீண்டிப்பார்க்க முடியாத பலகீனமானவராகவே இவ்விடயத்தில் விளங்குகிறார். 13 ஆவது திருத்தச்சட்டத்தை சிங்கள மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது என்றும் அவர் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது 13 ஆவது திருத்தச்சட்டத்தைப்பற்றி பேசியதை விட இது சற்று மாறுப்பட்ட கருத்தாகும். பல சந்தர்ப்பங்களில் மஹிந்த 13 பிளஸ் பற்றியே சர்வதேசத்துக்கும் கூறி வந்தார். தாம் அதற்கு அப்பால் செல்லவே விரும்புகிறோம் என்று கூறி வந்த மஹிந்த தனது ஆட்சிக் காலத்தில் அதை இம்மியளவும் அமுல்படுத்தவில்லை. அதேவேளை இத்திருத்தச்சட்டத்தின் படி மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் நேரடியாக கூறியிருக்கவில்லை.
ஆனால் ஜனாதிபதி கோத்தாபய மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதற்குப் பதிலாக மாற்று யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறியதோடில்லாமல் 13 பிளஸ் என்று எங்கேயும் கூறவில்லை. அவர் தமிழ் மக்கள் பிரதேசங்களில் அபிவிருத்தியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அதில் காரணங்களில்லாமலில்லை. துரித அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பு , பொருளாதார மீட்சி போன்ற விடயங்களில் முன்னேற்றம் காணப்பட்டால் இந்த அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தைப் பற்றி ஏன் மக்கள் யோசிக்கின்றார்கள் என அவர் சிந்தித்திருக்கலாம். அது தான் உண்மையும் கூட. அதிகாரப் பகிர்வின் மூலம் இந்த மக்கள் அரசியல் ரீதியான உரிமைகளை மட்டுமே பெறுவார்கள். அதன் மூலம் இவர்களுக்கு பொருளாதார மீட்சியினைப் பெற்றுக்கொடுக்க குறித்த மக்களின் பிரதிநிதிகள் இடம்கொடுப்பார்களா என்பதும் நிச்சயமில்லை. ஏனென்றால் அவர்களின் அரசியல் ஸ்திரத்திற்கு இந்த மக்களுக்கு ஏதாவதொரு பிரச்சினை காலங்காலமாக இருக்க வேண்டுமே?
எது எப்படியானாலும் இறுதி யுத்தத்திற்குப்பிறகு அதிகாரப் பகிர்வு குறித்த வடக்கு, கிழக்கு வாழ் சிறுபான்மை மக்களின் மனப்போக்கு எப்படியானது என்பது குறித்து இம்மக்களின் பிரதிநிதிகள் ஆராய்ந்திருக்கவில்லை. பல சேதங்கள் இழப்புகளுக்குப் பிறகும் இந்த அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமது பிரதிநிதிகள் ஏன் பிடிவாதமாக இருக்கின்றனர் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஒரு விடயத்தையே வலியுறுத்தி அரசியல் செய்து கொண்டிருப்பது என பிரதிநிதிகள் யோசிக்க வேண்டிய காலம் வந்திருக்கின்றது. ஏனென்றால் எந்நிலையிலும் அதிகாரப் பகிர்வு பற்றி புதிய ஜனாதிபதி பேசப்போவதில்லை. இனப்பிரச்சினை விவகாரம் குறித்த தீர்வுகள் பற்றி அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே எங்கும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் பேச்சுக்கு தயாராக இருக்கிறோம் என்றும் சாதகமாக பதில் இருந்தால் ஆதரவு அளிப்பது பற்றி யோசிக்கலாம் என்றும் தமிழ்த்தரப்பினர் இன்னும் பேசிக்கொண்டிருந்தால் நடக்கப்போவது ஒன்றுமில்லை.
தனது பத்திரிகை பேட்டி ஒன்றின் மூலம் இந்திய அரசாங்கத்துக்கே சில விடயங்களை கூறியுள்ள ஜனாதிபதி இங்கு தமிழ்த் தரப்புடன் அவர்கள் கூறும் விடயங்களை காதில் போட்டுக் கொள்வாரோ தெரியவில்லை. தான் சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற அடிப்படையில் 13 ஆவது திருத்தம் தொடர்பாகவோ அல்லது அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவோ பேசப்போவதில்லை என்பதை அவர் இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கை தமிழ்ப் பிரதி
நிதிகளுக்கும் தான் மறைமுகமாகக் கூறியுள்ளார். குறித்த பத்திரிகை பேட்டியில் அவர் இலங்கை தமிழ் தலைவர்களைப் பற்றி விமர்சிக்கவும் தவறவில்லை. அரசியல் விவகாரங்களைப் பற்றி தன்னால் கலந்துரையாட முடியும் என்று தெரிவித்த அவர் கடந்த 70 வருடங்களாக தமிழ்த்தலைவர்கள் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தை மட்டுமே இந்த மக்களுக்காக கூறி காலத்தை கடத்தி விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் கூறிய அந்த அதிகாரப் பகிர்வு பற்றி இறுதியில் ஒன்றுமே நடக்கவில்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்திருந்தார். எனவே இவரது காலகட்டத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது மைனஸாகவே இருக்கப்போகின்றது என்பது தெளிவாகின்றது.
மேலும் தான் எப்போதும் வெளிப்படையான ஒருவர் என்பதையும் முடியாத காரியங்களை அப்படியே தெரிவிக்கும் ஒரு நபர் என்பதையும் தனது இந்திய விஜயத்தின் போது கோத்தாபய நிரூபித்துள்ளார். ‘எம்மால் சில விடயங்களை செய்ய முடியாதிருந்தால் அது பற்றி நேர்மையாக புது டெல்லிக்கு கூற முடியும் என நான் கருதுகிறேன் ‘ என அவர் ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தமை முக்கியமானது.
இதேவேளை இந்திய விஜயத்திற்குப்பிறகு ஜனாதிபதி கோத்தா இந்தியா சீனா ஆகிய இருநாடுகளுக்கும் ஒரு முக்கிய விடயத்தை வலியுறுத்தி தமது நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ‘ பூகோளத்தின் பெரும் சக்திகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை எங்கள் மீது நம்பிக்கை வைத்து இறையாண்மை மிக்க ஒரு நாடாக எங்களின் தனித்துவத்திற்கு மதிப்பளித்து, எமது எதிர்காலத்தின் மீது முதலிட வருமாறு அழைத்திருக்கின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்.
இறையாண்மை மிக்க நாடாக எங்கள் தனித்துவத்திற்கு மதிப்பளித்து என்றால் எம்மை சுயாதீனமாக இயங்க விடுங்கள் என்பதே அதன் பொருள். இருந்தாலும் சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என இந்தியா கூறியது மட்டுமல்லாது இலங்கைக்கு உடனடியாக பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிதி உதவியையும் வழங்கியுள்ளமை முக்கிய விடயம்.
அதை விட ஜனாதிபதிக்கு எதிர்பாராத ஒரு அன்பளிப்பையும் பிரதமர் மோடி வழங்கியிருந்தார். அதாவது ஜனாதிபதி கோத்தாபய இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய போது இந்தியாவில் அவர் மேற்கொண்ட இராணுவ பயிற்சியில் பங்கு கொண்டவர்களின் படம் அது. அந்த அன்பளிப்பிலும் அரசியல் இல்லாமலில்லை. ஒரு இராணுவ அதிகாரியான அனுபவத்திலேயே அவர் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியிருந்தார். அதுவே விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பல வியூகங்களை வகுக்க அவருக்கு பேருதவி புரிந்தது. மட்டுமன்றி இறுதி யுத்த நேரத்தில் இந்தியாவும் இலங்கைக்கு உதவிய ஒரு நாடு. பெரும்பான்மை மக்கள் கோத்தாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு அதுவும் ஒரு காரணம். ஆகவே யுத்த வெற்றியில் மட்டுமல்லாது ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கும் இந்தியா பின்புலத்தில் இருந்துள்ளது என்பதை உணர்த்தும் செய்தியாக அந்த படத்தை பிரதமர் மோடி வழங்கியிருக்கலாம்.
– சிவலிங்கம் சிவகுமாரன்