ஆஸ்திரேலியாவை எச்சரிக்கிறார் இயன் சேப்பல்!

எங்கள் மண்ணில் இரண்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார் இயன் சேப்பல்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகளில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிசிசிஐ தலைவர் கங்குலி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒரே தொடரில் இரண்டு போட்டிகள் என்பது கொஞ்சம் அதிகப்படியானது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடு வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்துவது, அதற்கே பாதகமாக அமைந்து விடும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி 2020-21-ல் ஆஸ்திரேலியா வரும்போது இரண்டு போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. எனினும், தந்திரம் என்னவோ ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது. தற்போது இந்திய அணி வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளது. விராட் கோலி உலகின் சிறந்த கேப்டன் என்பதை காண்பித்து வருகிறார். இதனால் தந்திரம் தங்கள் பக்கமே திரும்பி பாதகமாக வாய்ப்புள்ளது’’ என்றார்.