அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்ற வட்டத்தில் இருந்து தமிழ்த்தரப்பு வெளியில் வரவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. அரசியல் தீர்வு காண்பது அவசியம்; மிக மிக அவசியம். அந்த வகையில் அரசியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசியல் தீர்வே முடிவானது என்ற வட்டத்தில் தமிழ்த் தலைமைகள் மூழ்கி இருந்தன.
இந்த அரசியல் நம்பிக்கையை தமிழ்த் தரப்பு யுத்தத்திற்கு முன்னரும் கொண்டிருந்தது. பின்னரும் பற்றியிருந்தது. இறுக்கமாகப் பற்றியிருந்தது. இந்த நம்பிக்கை மீதான பற்றுதலே, இணக்க அரசியலில் இருந்து விலகி, அதனை எதிர்ப்பரசியலில் ஈடுபடச் செய்திருந்தது. அதுவும் தீவிரமாக ஈடுபடச் செய்திருந்தது.
சாத்வீகப் போராட்டங்களும், ஆயுதப் போராட்டமும் அரசியல் தீர்வுக்குரிய சாதகமான வழித் தடத்தைத் திறப்பதற்கு உதவவில்லை. இந்தப் போராட்டங்களின் ஊடாக அரசியல் தீர்வுக்காக அரசு மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு இரு தரப்பினரையும் நகர்த்திச் சென்றன.
அந்த அழுத்த முயற்சிகள் பேச்சுவார்த்தை என்ற புள்ளியை நோக்கி இரு தரப்பினரையும் நகர்த்திச் சென்றனவே தவிர, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய உள பூர்வமான – இதயசுத்தியுடன் கூடிய இணக்கப்பாட்டிற்குக் கொண்டு செல்லவில்லை. இதனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதைப் போன்று தோற்றம் தந்தனவே தவிர வெற்றியளிக்கவில்லை. பலன்களும் ஏற்படவில்லை.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த்தரப்பு தன்னை ஒன்றிணைந்த ஓர் அரசியல் சக்தியாக மாற்றிக்கொள்ளத் தவறிவிட்டது. அத்தகைய ஒரு சக்தியாக அரசியல் தீர்வு என்ற இலக்கை நோக்கி சாமர்த்தியமாகக் காய் நகர்த்தல்களை அது மேற்கொள்ளவில்லை.
யுத்தத்தில் பயங்கரவாதத்தை இல்லாமல் ஒழித்துவிட்டதாகக் கூறினாலும், விடுதலைப்புலிகள் ஆயுத பலத்துடன் மீண்டும் தலையெடுத்துவிடுவார்கள் என்ற அரசியல் ரீதியான அச்சத்தை மக்கள் மத்தியில் பேணுவதிலேயே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி இருந்தது.
பதிலில்லா கேள்விகளும் பொறுப்பு தவறிய நிலைமையும்
விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அல்லது மீள் ஒன்றிணைவு என்று புலிப்பூச்சாண்டி நடவடிக்கைகளை முன்னெடுத்து, வடக்கையும் கிழக்கையும் அந்த அரசு ராணுவ மயப்படுத்தி இருந்தது. ஒரு பக்கம் ராணுவ சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் மக்களைத் தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்திருப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவை அரசாங்கத்திற்குத் தெரியாத நடவடிக்கைகளாகவே காட்டப்பட்டிருந்தன. ராணுவமயப்படுத்தப்பட்டிருந்த சூழலில் அந்த நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு எவ்வாறு தெரியாமல் போனது? ஏன் அவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தி மக்களுடைய அச்சத்தையும் பீதியையும் போக்கவில்லை என்பது பதிலில்லாத கேள்விகளாகத் தொக்கி நின்றன.
அடையாளம் தெரியாத கொள்ளைக் கூட்டத்தினருடைய கொள்ளைச் சம்பவங்கள், கிறிஸ் பூதத்தின் நடமாட்டம் போன்ற செயற்பாடுகள் தமிழ் மக்களைத் தொடர்ச்சியான அச்ச நிலையில் வைத்திருப்பதற்கு உதவியாக இருந்தன.
ராணுவத்துக்குத் தெரியாமல் எந்தவொரு நிகழ்வும் இடம்பெறக் கூடாது. அது குடும்ப நிகழ்வாக இருக்கலாம் அல்லது பொது நிகழ்வாக இருக்கலாம். அனைத்துச் செயற்பாடுகளும் அந்தந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான ராணுவத்தினருக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியப்படுத்த வேண்டும் என்பது எழுதாத சட்டமாக நடைமுறையில் இருந்தது.
இவ்வகையான இராணுவ கெடுபிடிகளுடன் கூடிய அச்சுறுத்தல்கள், கொள்ளையர்களின் கைவரிசை மற்றும் கிறிஸ் பூதத்தின் நடமாட்டம் என்பவற்றினால் பீதி உணர்வே மக்களை ஆட்சி செய்தன. அரசியல் நிகழ்ச்சிநிரல் ஒன்றைப் பின்னணியாகக் கொண்டிருந்த இந்த அச்சம் நிறைந்த சூழலை, ஆழ ஊடுருவி நோக்கி சரியான வழிமுறையில் மக்களை வழிநடத்துகின்ற பொறுப்பை தமிழ் அரசியல் தலைமைகள் கோட்டைவிட்டிருந்தன.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண முற்படவில்லை. யுத்தம் மூள்வதற்கு அடிப்படை காரணமாகிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வின் மூலம் அரசு முடிவு கண்டிருக்க வேண்டும்.
தீவிர யுத்த மோதல்கள் இடம்பெற்ற வேளை, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தி அரசியல் தீர்வு காணப்படும் என்ற அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். ஆனால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அரசியல் தீர்வு காண்பதில் அரசு அக்கறை செலுத்தவில்லை.
கல்லில் நார் உரிக்கும் காரியம்
இந்திய அரசின் துணையை நாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கத்தை நெட்டித் தள்ளியிருந்த போதிலும், ஆக்கபூர்வமாக அதனை நடத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படியே நடைபெற்றது. ஒரு வருட காலம் நீடித்த அந்தப் பேச்சுவார்த்தையை அரசு தன்னிச்சையாக முறித்த போதிலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே பேச்சுவார்த்தையைக் குழுப்பியடித்தது என குற்றம் சுமத்தியது.
தமிழ்த்தரப்புக்கே அரசியல் தீர்வு தேவை. அது தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அந்த வகையில் அது அதி முக்கியத்துவம் பெற்றிருந்தது. அரசாங்கத்துக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. அதற்கான நிர்ப்பந்தமும் அரசுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.
அரசாங்கத்தின் இணக்கமில்லாத நிலையிலேயே அரசியல் தீர்வுக்கான அந்தப் போச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது என்பது கல்லில் நார் உரிப்பதைவிட கடினமான காரியமாக இருந்தது. அத்தகைய கடுமையான சூழலிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியது. இதனை மறுப்பதற்கில்லை.
ஆனாலும் கடும் போக்கையும் கடும் நிலைப்பாட்டையும் கொண்டிருந்த அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்கான அகப்புற அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையே சார்ந்திருந்தது; சார்ந்திருக்கின்றது என்பதையும் மறுத்துரைக்க முடியாது. யுத்தம் முடிவடைந்த சூழலில் அதற்கான வாய்ப்புக்கள் சர்வதேச அளவில் சாதகமாக இருந்தன. அந்த சாதகமான நிலைமையை தமிழ்த்தரப்பினரால் ராஜதந்திர அணுகுமுறையுடன் கையாள முடியாமல் போய்விட்டது. களத்தில் உள்ள தரப்பினருக்கும், புலத்தில் உள்ள தரப்பினருக்கும் இது பொதுவான பொறுப்பாக இருந்தது.
யுத்தமோதல்களின்போது யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து – பொறுப்பில் இருந்து ஐ.நா. தவறிவிட்டது என்பதை அந்தச் சபையே ஏற்றுக் கொண்டிருந்தது. சர்வதேச நாடுகளும் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதில் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தன.
யுத்த வெற்றியில் திளைத்திருந்த அரசாங்கம் கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததுடன், விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முழுமையான பயங்கரவாத நடவடிக்கையாகச் சித்திரித்து, அதன் அடிப்படையில் யுத்த மோதல்களை தனக்குச் சாதகமான முறையில் பயன் படுத்திக் கொண்டது. இதன் காரணமாகவே அது போர்க்குற்றச் சாட்டுக்களுக்கு ஆளாக நேரிட்டது.
ஒரே பார்வை
ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்தத்தினால் அழிந்து போன வடக்கையும் கிழக்கையும் புனரமைத்து சீர்செய்ய வேண்டிய கட்டாயக் கடமையை, அபிவிருத்தி என்ற போர்வையில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இதனை சுய அரசியல் லாபத்துக்காக வடக்கிலும் கிழக்கிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டதாகவும், இத்தகைய அபிவிருத்திச் செயற்பாடுகள் தெற்கில் மேற்கொள்ளப்படவில்லை என்ற ஒப்பீட்டு பிரசாரத்தையும் அது மேற்கொண்டிருந்தது.
யுத்தத்தினால் வடக்கு–கிழக்குப் பிரதேசங்கள் மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய பிரதேசங்களும் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருந்தன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேபோன்று யுத்தத்தினால் நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூகக் கட்டமைப்புக்களும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கட்டியெழுப்புவதுடன், முறையான அபிவிருத்திச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய தேசிய மட்டத்திலான தேவையை உணர முடிகின்றது.
ஆனால் அரசியல் ரீதியான விடயங்களுக்கு அரசியல் ரீதியான அபிவிருத்தியும் – அரசியல் ரீதியான தீர்வுச் செயற்பாடுகளும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், சமூக மேம்பாடு என்பன அந்தந்தத் துறைக்கு ஏற்ற வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் – அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகள் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். முன்னெடுக்கப் படவும் வேண்டும்.
இந்த விடயத்தில் அரச தரப்பினர் யுத்தத்தின் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் சரியான முறையில் – நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றே கூற வேண்டும். மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அதனையொட்டிய அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இல்லையென்று கண்மூடித்தனமாக மறுக்க முடியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் – பாதிக்கப்படாதவர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், – பாதிக்கப்படாத பிரதேசங்கள் என்ற தொகுப்பு நிலையில் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் பாதிக்கப்படாத பிரதேசங்களையும் அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்படாத மக்களையும் ஒரே பார்வையில் சமத்துவ நோக்கில் வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான் தேசிய அபிவிருத்தி என்ற போர்வைக்குள் தனது எதிர்கால நடவடிக்கைகள் அமைந்திருக்கும். ஆட்சி செயற்பாடுகள் இடம்பெறும் என்று புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தொனி செய்திருக்கின்றார்.
இரு தரப்பும் ஒரு புள்ளியில் சந்திக்க முடியுமா…..?
அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்பன பத்தாம்பசலித்தனமான கோரிக்கைகள். அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். அதற்கு அனைத்து மக்களும் குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் அதிலும் தமிழ் மக்களும் தன்னுடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இரண்டு நிலைப்பாடுகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் கிடையாது. அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்ற குறுகிய நீண்டகால நிலைப்பாட்டைத் தமிழ்த்தரப்பு கைவிட வேண்டும். பொருளாதார அபிவிருத்தியே அவசியம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களினதும், தமிழ்ப் பிரதேசங்களினதும் அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும். என்ற நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
அபிவிருத்தி மட்டுமே இலக்கு என்ற கடும் நிலைப்பாட்டில் அரசு நிற்கின்றது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடும், தமிழ் மக்களின் தமிழ்த்தேசியம் சார்ந்த தாயகம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி என்ற தமிழர்களின் தனித்துவத்துக்கான அரசியல் தீர்வு நிலைப்பாடும் ஒரு புள்ளியில் இணக்க முறையிலான சந்திப்புக்கு வழி வகுக்கமாட்டாது.
இதுவே ஜனாதிபதியாக, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சிங்கள பௌத்த தேசியப் போக்குடைய பேராதரவினால் தெரிவு செய்யப்பட்ட பின்னரான நாட்டின் அரசியல் யதார்த்தம்.
இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிக நன்றாகவே உணர்ந்துள்ளது. எதிர் காலத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் கூட்டமைப்பு பரிசீலிக்கும் என்று அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து இதனைத் தெளிவாக்கி உள்ளது.
அமைச்சுப் பதவிகளை ஏற்பது என்பது தமது மக்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசுகளில் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்று இந்த வகையிலேயே செயற்பட்டிருந்தனர். தமது மக்களுடைய வாழ்க்கையை இதன் மூலமே அவர்கள் மேம்படுத்தியிருந்தனர்.
முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றிருந்த தருணங்களில் தமது மக்களின் நன்மைகளை கருத்திற்கொண்டு செயற்படுவதிலேயே கூடுதல் குறியாக இருந்தனர். இதனால் முஸ்லிம் மக்களுடன் வாழ்ந்த போதிலும் தமிழ் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஒரு வகையில் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் அமைச்சர்கள் தமிழர்களைப் புறந்தள்ளிச் செயற்படுவதிலேயே கவனமாக இருந்தனர்.
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும்
வடக்கிலும் பார்க்க கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதில் முஸ்லிம் அமைச்சர்களும் அதிகாரம் பெற்றிருந்தவர்களும் கூடிய கவனம் செலுத்தி இருந்தனர். இதனால் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நிலவிய நல்லுறவும் நல்லிணக்கமும் தகர்ந்து போயின. இன முறுகல் நிலைமை தலையெடுத்தது.
இதன் காரணமாகவே ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத நிலைமையை முன்னாள் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரும் மஹிந்த ராஜபக்ஷ அணியில் இணைந்து முக்கிய அரசியல் புள்ளியாகக் கருதப்படுபவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான கருணா அம்மான் என்ற வினாயகமூர்த்தி முரளிதரன் வரவேற்றுள்ளார்.
புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் இடம்பெறாதிருப்பதைத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்ற வகையிலும் அவர் கருத்துரைத்துள்ளார்.
அரசியல் ரீதியாக சிறுபான்மை இன மக்களுக்கு அதிகார நிலைகளில் இடமளிக்கப்படமாட்டாது என்பதே புதிய அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகத் தெரிகின்றது. புதிய அரசு தற்காலிகமானது. பொதுத் தேர்தல் வரையுமே இந்த அரசு நிலைத்திருக்க முடியும். பொதுத்தேர்தலில் மக்கள் வழங்குகின்ற ஆணையை அனுசரித்து, அதன் ஊடாகப் புதிய அமைச்சரவை அமைக்கப்படும்போது, அது எத்தகைய நிலைப்பாட்டில் அமைந்திருக்கும் என்பதை இப்போது எதிர்வு கூற முடியாது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். புதிய அரசாங்கம் ஜனாதிபதி கோத்தபாய தனது நிறைவேற்று அதிகார வல்லமையைக் கொண்டு நியமித்துள்ளார். பொதுத் தேர்தல் எத்தகைய தீர்ப்பை வழங்கும் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூற முடியாது. ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியீட்டியதைப் போலவே, பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன மிகப் பெரும்பான்மையான வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி உள்ளது.
அத்தகைய ஒரு நிலைமை உருவாகுமானால், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் நிச்சயமாக இன்னும் அதிகமாக ஓரங்கட்டப்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனாலும் அப்போதைய அரசியல் நிலைமைக்கு ஏற்ற வகையில் அத்தகைய நிலைமை ஏற்படாமலும் போகலாம்.
இத்தகைய பின்னணியிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது தொடர்பில் பரிசீலனை செய்யும் என்ற கருத்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்றது.
அமைச்சுப் பதவிகளை ஒருபோதும் ஏற்பதில்லை. அரசியல் தீர்வின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே பிரதான நோக்கம். அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது என்பது, இப்போதைய அரசியல் யதார்த்த நிலைமையைத் தெட்டத் தெளிவாகக் காட்டியுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மாற்றுத் தலைமையொன்றைக் குறிவைத்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் இப்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாகவே, அரசியல் தீர்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆக, அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் ஒன்றையொன்று தழுவி முன்னோக்கிச் செல்லுமா அல்லது ஒன்றையொன்று விழுங்க முற்பட்டு குழப்பமான நிலைமைதான் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பி.மாணிக்கவாசகம்