17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ சார்பில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும், 12-ந் தேதி, கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. 19-ந்தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில், 75 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது.
விழாகுறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:- சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா, கலைவாணர் அரங்கிலும், நிறைவு விழா தேவி தியேட்டரிலும் நடக்கிறது. தமிழ் படங்களின் பிரிவில் திரையிட சமர்பிக்கப்பட்ட, 19 படங்களில், 12 படங்கள் தேர்வாகியுள்ளன. தமிழில், ஒத்த செருப்பு, அடுத்தசாட்டை, அசுரன், பக்ரீத், ஹவுஸ்ஓனர், ஜிவி, கனா, சீதக்காதி, மெய், பிழை, சில்லுகருப்பட்டி, தோழர் வெங்கடேசன் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
விழாவில், முதல் படமாக, பால்மே தி ஆர், தி பாராசைட் படங்கள் திரையிடப்படுகின்றன. இதில், ஜெர்மனி, ஹங்கேரி, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், தைவான் நாடுகளின் படங்களும் திரையிடப்படும். சர்வதேச அளவில் கவனம் பெற்ற பல படங்கள் இதில் இடம் பெறும். இந்த விழாவில் முதல் முறையாக, அசர்பைசான் நாட்டின், தி பிரா படமும், நியூசிலாந்தின், தி ஸ்ட்ரே உள்ளிட்ட படங்களும் திரையிடப்படுகின்றன.
அதே போல, அசாமி, குஜராத்தி மொழிப் படங்களும், இருளர்களின் மொழியில் உருவான, நேதாஜி படமும் திரையிடப்படுகின்றன. படங்கள் தேவி, தேவி பாலா, அண்ணா, காசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் பிலிம்சென்டர் ஆகிய இடங்களில் திரையிடப்பட உள்ளன. விழாவில், 90 வயதிலும் நடித்துக் கொண்டிருக்கும், சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.