பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு வழங்கிய தீர்ப்பு ! -இறுதி தீர்மானம்

பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய பெரும்பாலும் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் கலந்துரையாடி தீர்மானம் எட்டவுள்ளனர்

இதனிடையே, புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு தொடர்ந்தும் ராஜதந்திர வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது அரசியல் ரீதியானது என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ, அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் கடந்த தினம் ஒன்றில் தீர்ப்பளித்திருந்தது. 2018ம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகரத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் அவர் சைகை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.