மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி, நியூசிலாந்தில் நடைபெறும் Word Christchurch எழுத்தாளர் விழாவில் பங்கெடுத்திருக்கிறார்.
‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலிற்காக பரவலாக அறியப்படும் பூச்சானி, ஒரு மாத பார்வையாளர் விசாவில் நியூசிலாந்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“இங்கு என்னை சாலையில் கண்டவர்கள் என்னை வரவேற்றனர்,” என்கிறார் பூச்சானி ஒருவர். “நீங்கள் தான் நான் தொலைக்காட்சியில் கண்டவரா?” எனக் கேட்டார்.
“இருக்கலாம்,” என்றேன். அவர் எனக்கு நூறு டாலர்களை கையில் வைத்தார். அதை என்னால் மறுக்க முடியவில்லை.
“மனுஸ்தீவிலிருந்து பல படங்களை கொண்டு வந்துள்ளேன். பல மரணங்கள், தற்கொலைகளை கண்டுள்ளேன்,” என்கிறார் குர்து அகதியான பூச்சானி.
பெஹ்ரூஸ் பூச்சானி சென்றுள்ள கிறிஸ்ட்சர்ச் நகரனமானது, அகதிகளை வரவேற்கும் புகழ்பெற்ற நகரமாக அறியப்படுகின்றது.
2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்ட 100 தஞ்சக்கோரிக்கையாளர்களை நியூசிலாந்து ஏற்றுக்கொண்ட போது,
இந்த நகரின் மேயர் லியானி டல்ஜியல் அப்போது குடியேற்றத்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். இதனால் பூச்சானிக்கும் இங்கு தஞ்சமளிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.
அண்மையில், பெஹ்ரூஸ் பூச்சானி குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “நியூசிலாந்துக்கு செல்லும் தனிநபர் குறித்து தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார் நியூசிலாந்து பிரதமர். அதனால் அது அவர் மற்றும் அவர்களின் குடியேற்றத்துறை அமைச்சரின் பிரச்னை. இதற்கு நான் கருத்து தெரிவிக்க வேண்டிய தேவையில்லை,” என்றார். நியூசிலாந்தில் அகதி பூச்சானிக்கு தஞ்சம் வழங்கப்பட்டால் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது,“அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார். அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்,” எனக் கூறியிருந்தார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.
Eelamurasu Australia Online News Portal