ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
ஈராக் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்பு, ஊழலை ஒழித்தல், பொதுமக்கள் பாதுகாப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முக்கிய நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டு போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசினர். தொடர்ந்து வன்முறை வெடித்ததால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தினர். அரசின் இந்த செயலுக்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்தது.
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றபோது, மர்ம மனிதர்கள் சிலர் உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதல்கட்ட செய்தி வெளியானளது.
இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal