ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேறியாக சென்றால் பெரும் சலுகை கிடைக்குமா?

ஆஸ்திரேலிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் வேலை, ஓட்டுநர் உரிமம், 70,000 டாலர்கள் உதவி, மேலும் பல சலுகைகளை பெறலாம் என போலியாகப் பரப்பப்பட்ட பேஸ்புக் பதிவு 49,000 மேற்பட்டோர்களால் பகிரப்பட்டுள்ளது.

“நீங்கள் வட கொரிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் 12 ஆண்டுகள் கடுமையான வேலையை தண்டனையாக பெற நேரிடும், ஈரானிய எல்லையை கடந்தால் காலவரையின்றி சிறையில் வைக்கப்படுவீர்கள், ஆப்கான் எல்லையை கடந்தால் நீங்கள் சுடப்படுவீர்கள்….வெனிசுலா எல்லையை கடந்தால் நீங்கள் உளவாளியாக முத்திரைக் குத்தப்படுவீர்கள்…அதுவே ஆஸ்திரேலிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் சலுகையை பெறுவீர்கள்,”என அப்போலி பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய எல்லையை சட்டவிரோதமாக கடப்பவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படும் சட்டநடைமுறை ஆஸ்திரேலிய அரசால் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சூழலில், இப்பதிவு போலியானது என நிரூபணமாகியுள்ளது. போலி செய்திகளை கண்டறியும் விதமாக உலக செய்தி நிறுவனமான ஏ.எப்.பி இதனை அம்பலப்படுத்தியுள்ளது.

“ஆஸ்திரேலிய அரசின் கொள்கை உறுதியாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வர எவர் முயன்றாலும் ஒருபோதும் அவர் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்,” என ஆஸ்திரேலிய உள்துறை அலுவலகத்தின் பேச்சாளர் கூறியுள்ளார். “சட்டவிரோதமாக வருபவர் எவராக இருந்தாலும் அவர் உடனடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்.”

கடல் வழியாக வர முயற்சிப்பவர்களை தடுக்கும் விதமாக ஆகஸ்ட் 2012யில் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய தீவு நாடுகளில் தஞ்சக்கோரிக்கையாளர்களை சிறை வைக்கும் நடைமுறையை ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லர்ட் மீண்டும் அறிமுகப்படுத்தினார். இந்த நாடுகளில் உள்ள முகாம்களே ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

அத்துடன், கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்த ஆஸ்திரேலிய அரசு சட்டவிரோதமாக வந்த பல வெளிநாட்டு தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தியுள்ளது. இந்த கொள்கையின் நீட்சியாக ஆட்கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகளில் பல நாடுகளைச் சேர்ந்த 614 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் மற்றும் இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.