மேற்கு ஆஸ்திரேலியாவும் கருணைக்கொலைக்கு பச்சைக்கொடி!

விக்டோரிய மாநிலத்துக்கு அடுத்ததாக மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் கருணைக்கொலைக்கு அனுமதியளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

லேபர் கட்சியின் ஆட்சிக்கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் செனட் அவை நேற்று வியாழக்கிழமை 24-11 என்ற பெரும்பான்மையுடன் கருணைக்கொலைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்றியது. 

சமர்ப்பிக்கப்பட்ட சட்டமுன்வடிவின் 184 சரத்துக்களில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 55 திருத்தங்களின் பின்னர் இந்தச்சட்டம் செனட் அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

இதையடுத்து இறுதி அனுமதிக்காக மீண்டும் கீழவைக்கு(House of Representatives) அனுப்பப்படும் இச்சட்டம் அடுத்த 18 மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரகாரம், பாரதூரமான நோய்த்தாக்கத்தின் வலியுடன் போராடிக்கொண்டு, இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிரோடிருப்பதற்கான மருத்துவ உத்தரவாதம் வழங்கப்பட்ட – 18 வயதுக்கு மேற்பட்ட – நோயாளிகள், தங்களை கருணைக்கொலை செய்யக்கோருவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.