இலங்கையின் வடக்கு–கிழக்கு பகுதிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கொண்டிருக்கும் மனப்பாங்கு இந்தியாவினால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்கின்ற அதேவேளை அதிகார பரவலாக்கத்திற்கு மேலாக பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அவரது விருப்பம் புதுடில்லிக்கும் சென்னைக்கும் கவலை தருவதாக இருக்கும்.
மேலும் தமிழர் பிரச்சினை இருதரப்பு உறவுகளை மீண்டும் பாதிக்கக்கூடிய “ஒரு வெடிகுண்டாக” தொடர்ந்திருக்கும் தமிழர் பிரச்சினையிலும் ஏனைய விவகாரங்களிலும் இரு நாடுகளும் பொதுவான நிலைப்பாட்டை கண்டறிய வேண்டியிருக்கும் என்றும் இந்தியாவின் முக்கியமான ஆங்கில தேசிய பத்திரிகைகள் அவற்றின் ஆசிரிய தலையங்கங்களில் குறிப்பிட்டுள்ளன.
த இந்து, இந்துஸ்தான் டைம்ஸ், டெகான் ஹெரால், இந்தியன் எக்ஸ்பிரஷ் ஆகிய பத்திரிகைகளே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் இந்திய விஜயம் குறித்து தமது ஆசிரிய தலையங்கங்களில் சுட்டியிருக்கின்றன.
அந்த ஆசிரிய தலையங்கங்களில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் தற்போது தோன்ற ஆரம்பித்திருக்கும் நன்மையமான சூழ்நிலை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இருநாட்டு தலைவர்களும் நடைமுறை சாத்தியமானதும் இருதரப்பு நலன்களுக்கும் உகந்ததுமான அணுகுமுறையினை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் பொதுவான அம்சமாக காணப்படுகிறது.
த இந்து பத்திரிகை
த இந்து பத்திரிகை “சமாதானத்தை வென்றெடுத்தல், கோத்தபாயவின் இந்திய விஜயம் குறித்து” என்ற தலைப்பில் எழுதியிருப்பதாவது,
இலங்கையின் புதிய ஜனாதிபதி கடந்த வாரம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம், பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் நடத்திய பேச்சுக்களும் இருதரப்பு உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு இரு நாடுகளும் முன்னுரிமை கொடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.
இலங்கையும் இந்தியாவும் நெருக்கமாக அடுத்தடுத்து உள்ள நாடுகள் என்ற காரணத்தினாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதும் சிக்கலானதுமான மக்களின் வரலாற்றினை கொண்டவை என்ற காரணத்தினாலும் உறவு முறைகளில் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகளை ராஜபக் ஷ நன்கு அறிவார்.
கடந்த கால பிரச்சினைகள் போன்று மீண்டும் உருவாவதைத் தடுப்பதற்கு இந்தியாவுடன் தொடர்ச்சியானதும் உறுதியானதுமான தொடர்பாடலை தான் விரும்புவதாக
த இந்து பத்திரிகைக்கு புதுடில்லியில் அளித்த நேர்காணலில் ராஜபக் ஷ தெளிவாக கூறியிருந்தார். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நல்லிணக்க செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்ட வேகம் குறித்து இந்தியாவுக்கு இருந்த விசனம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகம் மற்றும் இராணுவ தொடர்புகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்காக சீனாவின் முதலீடுகள் வரவேற்கப்பட்டமை இந்திய திட்டங்களுக்கான அனுமதி வழங்குவதில் காட்டப்பட்ட தாமதம் தொடர்பான அதிருப்தி மற்றும் இருதரப்பு பிரச்சினைகள் கடந்த 10வருடங்களில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகளில் அடங்குகின்றன.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவின் தோல்வி உட்பட உள்நாட்டு அரசியலில் இந்திய புலனாய்வு நிறுவனங்கள் பாத்திரமொன்றை வகிக்கின்றன என்ற சந்தேகம் கொழும்பில் நீடித்திருக்கின்றது. பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவும் நடத்திய ஒருமணி நேர சம்பாஷணையில் சகல பிரச்சினைகள் தொடர்பிலும் ஓரளவு தெளிவு ஏற்பட்டிருக்கின்றது என்று தெரிகிறது. புதிய ஒரு எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் இருவரும் நாட்டம் கொண்டுள்ளார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருதரப்பினரும் நெருக்கமாக சேர்ந்து பணியாற்றியதற்கு பிறகு இப்போது புதிய அச்சுறுத்தல்கள் குறிப்பாக இந்திய தொடர்புகளை கொண்டதும் இஸ்லாமிய அரசுடன் இணைந்ததுமான குழுவொன்றின் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து தோன்றியிருக்கின்றன என்ற யதார்த்தமும் இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அபிவிருத்திக்காக 40கோடி அமெரிக்க டொலர் உதவியுடன் சேர்த்து பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 5கோடி அமெரிக்க டொலர் நிதியும் வழங்குவதாக இந்தியா விடுத்த அறிவிப்பு இரு நாடுகளினதும் பாதுகாப்பை பிரிக்க முடியாது என்பதற்கு நிரூபணமாகும். கூடுதலான அளவுக்கு உயர்மட்ட தொடர்புகளின் தேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி என்ற வகையில் தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லிக்கு வந்தார். தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு தலைவராக மோடி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திய ராஜபக் ஷ அதற்கான அழைப்பினையும் விடுத்தார்.
ஆனால் புதுடில்லியின் அக்கறைகளை இலங்கையின் புதிய அரசாங்கம் எந்தளவிற்கு கரிசனையுடன் கையாளும் என்பதை அடுத்த சில மாதங்களில் இடம்பெறும் நிகழ்வுப் போக்குகளே வெளிக்காட்டும். வடக்கின் உட்கட்டமைப்பு திட்டங்களும் திருகோணமலை துறைமுக திட்டம், மத்தள விமான நிலைய அபிவிருத்தி ஆகியவற்றுக்கான உட்கட்டமைப்புக்களுக்கான அனுமதிக்கு அப்பால் சீனாவிற்கு மீள் செலுத்த வேண்டிய கடன்களையும் அதன் முதலீடுகளையும் கோத்தபாய ராஜபக் ஷ எவ்வாறு ஒழுங்கமைப்பார் என்பதையும் பொறுத்தே அவர் மதிப்பிடுவார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு வாக்களிக்காத சிறுபான்மையின மக்கள் வாழ்கின்ற அபிவிருத்தியடையாத வடக்கு– கிழக்கு பகுதிகள் தொடர்பில் ராஜபக் ஷவின் மனப்பாங்கு உன்னிப்பாக அவதானிக்கப்படும். அதிகார பரவலாக்கத்திற்கு மேலாக அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான அவரது விருப்பம் புதுடில்லியும் சென்னையும் கவலை கொள்வவதற்கான ஒரு காரணியாக அமையும்.
தமிழர்களுக்கு கௌரவமும் சமாதானமும் சமத்துவமும் நீதியும் கிடைப்பதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. 3தசாப்தகால போரின்போது மோசமான இழப்புக்களை சந்தித்த தமிழர்களின் பகுதிகள், இலங்கையின் எஞ்சிய பகுதிகள் பொருளாதார அபிவிருத்தி குறைந்த பகுதிகளாகவே இருந்து வருகின்றன. போர் ஒன்றில் வரையறுக்கப்பட்டதும் குறுகியதுமான காலகட்டத்துக்குள் வெற்றியடைந்து விடலாம். ஆனால் சமாதானத்தை வென்றெடுப்பதில் மக்களின் மனக்காயங்களை குணப்படுத்துவதிலும் பல தசாப்தங்களை குறிக்கின்ற விரிவான செயன்முறையாகும். இலங்கையின் இச்செயன்முறையினை இந்தியா மிக உன்னிப்பாக அவதானிக்கும்.
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை
“டில்லியின் கொழும்பு சவால்” என்ற மகுடத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் எழுதியிருக்கும் ஆசிரிய தலையங்கம் வருமாறு,
இந்தியா தானாகவே முந்திக்கொண்டு கடைப்பிடித்த அணுகுமுறை இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பிறகு இருவாரங்களுக்குள் குறைந்த காலகட்டங்களுக்குள்ளாக அவர் முதன்முதலாக வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு வந்தடைந்த இடமாக புதுடெல்லி விளங்குகிறது. கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்று மறுநாளே வெளியுறவு அமைச்சர் சிவசங்கர் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், ராஜபக் ஷ சகோதரருடன் புதிய ஆரம்பம் ஒன்றை செய்வதற்கான புதுடில்லியின் விருப்பத்தை தெரிவிப்பதற்கும் கொழும்புக்கு விஜயம் செய்தார்.
இந்தியா தனக்கு விருப்பமானவர்களுக்கு முட்டு கொடுப்பதற்கு பதிலாக அயல் நாடுகளில் மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் புதிய அணுகுமுறையினை கடைப்பிடிக்கின்றது. கோத்தபாயவுக்கு இந்தியா நீட்டிய நேசக்கரம் இந்த புதிய அணுகுமுறையாகும். தனது அரசாங்கத்தை பொறுத்தவரையில் இந்தியாவோ முன்னுரிமைக்குரியதாக இருக்கும் என்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் பணியில் குறுக்கே நிற்க ஒரு 3ஆம் சக்திக்கு அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியதன் மூலமாக ஜனாதிபதி ராஜபக் ஷவும் கூட சரியான செய்தியையே விடுத்தார். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் கோத்தபாயவுடனும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக் ஷவுடனும் புதுடில்லி முன்னர் கசப்பான உறவுமுறைகளை கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று நோக்கப்பட்டார். இந்தியாவுடனான தார்ப்பரியங்கள் தனது சகோதரர் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்துக்கு உரியவை என்பதை இந்திய ஊடகவியலாளர்களுடனான சம்பாஷணைகளில் ஏற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக் ஷ பாக்கிஸ்தான் அல்லது சீனா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் உறவில் இந்தியா கவலை கொள்ள தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் சீனா குவிக்கும் பெருமளவு முதலீட்டுக்கு மாற்றாக பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் இலங்கையில் கூடுதலான முதலீடுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் குறித்து தனது அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யும் என்பதையும் ராஜபக் ஷ சாடை காட்டி குறிப்பிட்டார். அவரை பொறுத்தவரையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு அபிவிருத்தியே தவிர வெறுமனே அதிகார பரவலாக்கம் அல்ல. தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு நல்லிணக்க செயன்முறைகளை இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று இந்திய தரப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இந்த பிரச்சினையிலும் ஏனைய விவகாரங்களிலும் இரு நாடுகளும் பொதுவான நிலைப்பாட்டை கண்டறிய வேண்டி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதைகளுக்கு நெருக்கமாக இலங்கை அமைந்திருப்பதையும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரிக்கும் சீனாவின் பிரசன்னத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இரு நாடுகளும் அத்தகைய ஒரு விட்டுக்கொடுப்பை செய்து அணுக வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகும். இந்திய இராஜதந்திரத்துக்கு இது மிகவும் சிக்கல் நிறைந்த பணியாக இருக்கும்.
டெகான் குரோனிக்கில் பத்திரிகை
இதேவேளை டெகான் குரோனிக்கில் பத்திரிகை நேற்றைய தினம் “இலங்கைக்கு செயல் நோக்கமுடைய அணுகுமுறையே முக்கியமானது” என்ற தலைப்பில் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயஷங்கர் கொழும்புக்கு பறந்து சென்று கையளித்த அழைப்பை அடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி வந்தார். இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சுமுகமானதாக்குவதற்கு நீண்ட காலத்துக்கு பிறகு கிடைத்த சந்தர்ப்பமாக அமைகிறது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. தனது சகோதரர் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த அவர் 2009ஆம் ஆண்டில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதில் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தார். அதில் அவர் கேள்விக்கிடமான வழிமுறைகளையும் பயன்படுத்த தயங்கவில்லை. அதனால் அவர் உலகலாவிய கண்டனங்களுக்கும் ஆளானார்.
கோத்தபாய ராஜபக் ஷ இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவை அடிப்படையாகக் கொண்ட பிரம்மாண்டமான ஆணையுடன் ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கிறார். இது அவரை ஒரு பெரும்பான்மை திசை மார்க்கத்தில் திருப்பி விடலாம் என்று எதிர்பார்க்க முடியும். இலங்கை அரசியலில் தலையீடு செய்வதாக தோன்றாதிருக்கக் கூடிய முறையில் மிதமான செல்வாக்கை இந்தியா செலுத்துவதால் மோடி அரசாங்கம் நடைமுறை சாத்தியமான வழியிலும் விவேகத்துடனும் செயற்பட வேண்டும்.
சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்பில் இந்தியாவுக்கு இருக்கக் கூடிய அக்கறைகளை தான் கவனத்தில் எடுத்து செயற்படுவார் என்று ராஜபக் ஷ டில்லிக்கு கூறியிருக்கிறார். இந்திய பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் சீனா மீதான தனது நாட்டின் அக்கறை முற்றிலும் வர்த்தக நோக்கிலானது என்று கூறியிருக்கிறார். அதனால் இலங்கை கடல் பரப்புக்கு சீன நீர்மூழ்கிகள் உடனடியாக வருவதற்கு வாய்ப்பில்லை என்று நம்பலாம்.
நல்ல ஒரு ஆரம்பம் நடத்திருக்கிறது. ஆனால் இலங்கையில் பெரியளவில் முதலீடு செய்ய இந்தியாவையும் ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற ஏனைய நாடுகளையும் மிகவும் எச்சரிக்கையான முறையில் வலியுறுத்தியிருக்கிறார். அந்த நாடுகள் அவ்வாறு முதலீடு செய்யாவிட்டால் சீனாவின் முக்கியத்துவத்தை இலங்கை புறந்தள்ள முடியாது என்பதே அவர் மறைமுகமாக கூறியிருக்கும் விடயமாகும்.
இலங்கையின் தமிழ் பகுதிகளுக்கு பொருளாதார உதவிகளை பெருமளவு வழங்கப் போவதாக ராஜபக் ஷ உறுதியளித்துள்ள அதே வேளை வடக்கு–கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை செய்ய முடியாது என்பதை அவர் பரவலாக தெரிவித்திருக்கிறார்.
பெரும்பான்மை சமூகத்தவர்கள் அதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதே அவர் அதற்கு கூறியிருக்கும் காரணமாகும். பிரதானமாக தமிழ் நாட்டின் உணர்வுகள் காரணமாக தமிழர் பிரச்சினையில் இலங்கை மீது புதுடில்லி நெருக்கடிகளை பிரயோகித்து ஐக்கிய இலங்கை ஒன்றுக்குள் பாதுகாப்பு, பத்திரமான அரசியல், இட அமைவை யாழ்ப்பாணம் வருவதற்கு உதவுவதாக இருந்தால் புதுடில்லி சென்னையை மிகுந்த ஆவதானத்துடன் கையாள வேண்டி இருக்கும்.
புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை
புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை “மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு தளம்” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஆசிரிய தலைப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடனான தனது பேச்சுக்களின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி எமது இரு நாடுகளினதும் பாதுகாப்பும் அபிவிருத்தியும் பிரிக்க முடியாதவை என்றும் அதனால் ஒருவர் மற்றவரின் பத்திரம் மற்றும் உணர்வுகளை தெரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டியது இயல்பானது என்றும் உறுதிபடக் கூறினார். இந்த நிலைப்பாடு தெளிவாக தெரிந்தது என்றாலும் இலங்கையில் நீண்ட கால உள்நாட்டு போரில் இந்தியாவின் தலையீடு காரணமாக அண்மைய தசாப்தங்களில் டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே கடுமையான கசப்புணர்வுகள் நிலவின என்பதே யதார்த்தமாகும்.
1980களின் ஆரம்பத்தில் இலங்கையில் தமிழ் தீவிரவாத குழுக்களுக்கு இந்தியா அளித்த ஆதரவு அதைத் தொடர்ந்து 1987–- 1990 கால கட்டத்தின் போது இடம்பெற்ற இந்திய இராணுவ தலையீடு தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் இலங்கைமீது இந்தியா பிரயோகித்த அரசியல் நெருக்குதல்கள் ஆகியவை காரணமாக இலங்கைக்கு டில்லி எதிராகாது என்று சிங்கள பெரும்பான்மையினர் நம்பினர்.
ஒரு தசாப்தத்துக்கும் முன்னர் தமிழர்களின் ஆயுத கிளர்ச்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தீர்க்கமான முறையில் கண்ட வெற்றிக்கு பிறகு தமிழ் மக்களுடனான அரசியல் நல்லிணக்கம் தொடர்பில் முன்னேற்றம் இல்லாதிருந்தமை ஆகியவை காரணமாக டில்லியும் அதன் மனக் குறைகளைக் கொண்டிருக்கிறது.
இந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களை தீர்ப்பதற்கு கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்ட முயற்சிகள் எந்த பயனையும் தரவில்லை. கொழும்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிலவிய உட்பூசலே இதற்கு காரணமாகும். அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு கிடைத்த தீர்க்கமான ஆணை இரு தரப்பு உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் முயற்சிகளை புதுப்பிப்பதற்குமான ஒரு வாய்ப்பை தொடக்கிவிட்டிருக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமான எந்த காரியத்தையும் இலங்கை செய்ய போவதில்லை என்றும் சீனாவுடனான தனது அரசாங்கத்தின் ஊடாட்டங்கள் முற்றிலும் வர்த்தக நோக்கத்திலானவையே என்றும் டில்லியில் கோத்தபாய ராஜபக் ஷ உறுதி கூறினார். கைமாறாக இந்தியா இலங்கையில் பயங்கரவாதம் மீண்டெழுவதற்கு எதிரான கோத்தபாய ராஜபக் ஷவின் திட்டங்களுக்கும் அவரின் பேரார்வம் மிக்க பொருளாதார குறிக்கோள்களுக்கும் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழர் பிரச்சினை இருதரப்பு உறவுகளில் மீண்டும் பாதிக்க கூடிய ஒரு “டைம் பாம்” ஆக தொடர்ந்தும் இருக்கிறது. தமிழ் சிறுபான்மை இனத்தவர்களின் அக்கறைகளை கவனிப்பதற்கான தனது திட்டங்கள் குறித்து கோத்தபாய ராஜபக் ஷ தனக்கு விளக்கி கூறியதாக தெரிவித்த மோடி, தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
ஆதிகாரப் பரவலாக்கம் பற்றிய பேச்சு சிங்கள பெரும்பான்மையை சீற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதே தவிர தமிழர்களுக்கு எந்த பயனையும் அளிக்கவில்லை என்று கோத்தபாய ராஜபக் ஷ வாதிடுகிறார். தமிழ் மக்களின் பொருளாதார நிலைமைகளை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டு வருவதன் மூலம் இலங்கையில் இனத்துவ அரசியலுக்கு அப்பால் செயற்பட விரும்புவதாக அவர் கூறுகிறார். சென்னையில் இருக்கின்ற பலருக்கு இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. ஆனால் இலங்கை பிரச்சினைகளுக்கு வெளித்தீர்வுகளை தன்னால் நிராகரிக்க முடியாது என்பதை டில்லி நிச்சயமாக அறியும்.
தமிழர்களுக்கு எதையுமே செய்யாவிட்டால் இலங்கையில் உள்நாட்டு அரசியலில் தலையிடுமாறு டில்லிக்கு சென்னை தவிர்க்க முடியாத வகையில் நெருக்கடிகளை கொடுக்கும் என்பதை கொழும்பு அறியும். அவ்வாறான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இரு நாடுகளும் பழைய நிலைக்கே செல்லும். ஒன்றுடன் மற்றது பின்னிப்பிணைந்திருக்கும் இந்த அரசியல் சிக்கலை கையாள்வதற்கு ஒரேயொரு வழியே இந்தியா அவ்வாறு தமிழர்களின் நிலையில் தெளிவாகத் தெரியக்கூடிய முன்னேற்றங்களை கொழும்பு காண்பிக்க வேண்டும் என்பதாகும். இலங்கையின் அரசியலில் நல்லிணக்கத்துக்கான சர்வதேச தீர்வினை டில்லி ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.