ஜனாதிபதித் தேர்தல்களுக்குப்பின்னர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு பாராளுமன்றத் தேர்தல் காலம் வரை , மலையக சமூகத்துக்குக் கிடைத்துள்ள அமைச்சுப் பதவியைக் கொண்டு இம்மக்களுக்கு ஏதாவது நல்ல விடயங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் இங்கு நடப்பதோ வேறு. தனி வீடமைப்புத்திட்டத்தில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அது குறித்த விசாரணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஆறுமுகன் கூறுகிறார். அது மட்டுமன்றி, அது தொடர்பான கணக்காய்வு விபரங்களையும் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இ.தொ.கா இப்படி நடந்து கொள்வது இது முதல் தடவையல்ல. கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நேரத்தில் கூட திடீரென அமைச்சுப்பதவியைப் பெற்ற ஆறுமுகன் இதே போன்று அதிரடியாக சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.
இதே போன்றதொரு காரியத்தை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரமும் செய்யத் தவறவில்லை. அட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் அதற்கு நிதி ஒதுக்கப்படும் தொண்டமான் நிதியத்தில் கோடிக்கணக்கான ரூபா பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் செலவிடப்பட்ட பல கோடி ரூபா பணத்துக்கு கணக்குகளே இல்லை என்றும் நிதி மோசடிகளை விசாரிக்கும் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்றன. மேலும் இந்திய அரசாங்கம் வழங்கிய 40 பஸ்கள் மாயமானமை குறித்தும் தொழிலாளர் தேசிய சங்கத்தினரால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் மலையக சமூகத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்காமலில்லை. அது பயன்படுத்தப்படுகின்றதா இல்லையா என்பதை மக்களும் அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால் எத்தனை மலையக அரசியல்வாதிகள் அரசாங்கம் ஒதுக்கும் நிதியை முழுமையாக பயன்படுத்துகின்றனர்? அப்படி பயன்படுத்தியமைக்கான கணக்குகளை பகிரங்கப்படுத்துகின்றனரா என்பது கேள்விக்குறியே.
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பார்கள். நிதி பயன்பாடு விடயத்தில் தலைவர்கள் எந்தளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கின்றார்களோ அதை வைத்தே அவர்களின் கீழ் தொழிலாற்றும் ஏனையோரும் நடந்து கொள்வர் . ஆகவே மலையகத்தின் தலைவர்கள் தொண்டர்களைப்பற்றி இங்கு ஆராயப்போவது இக்கட்டுரையின் நோக்கமுமல்ல. அதனால் நடக்கப்போவதும் ஒன்றுமில்லை.
எனினும், இன்னும் எத்தனை காலங்களுக்குத்தான் இந்த மக்கள் பிரதிநிதிகள் சிறுபிள்ளைகள் போன்று சண்டை போட்டுக்கொண்டிருக்கப்போகின்றனர்? மாறி மாறி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் போது யாருடைய காலத்தில் அதிக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன, அவற்றில் எத்தனை இம்மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தன, நீண்ட கால தேவையை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட திட்டங்கள் எவை? என்பதை அடிப்படையாக வைத்தே இன்று மலையக பெருந்தோட்டங்களில் வாக்குகள் முடிவு செய்யப்படுகின்றன என்பதை பிரதிநிதிகள் புரிந்து கொள்ளல் வேண்டும்.
இன்று வெறும் முகங்களுக்காகவும் கட்சிகளுக்காகவும் வாக்கு போடும் நிலைமைகள் மலையேறி விட்டன. ஆதரவு தாருங்கள், செய்து தருகிறோம் என்ற கோஷங்களை கடந்து போய்க்கொண்டிருக்கின்றனர் மலையக மக் கள். இதைத்தான் செய்தோம், ஆதரவு தாருங்கள் என்ற குரல்களையே சற்று நின்று கவனித்துப் போகின்றனர் அவர்கள்.
ஆகவே இனியும் போட்டி அரசியலையும் பழிவாங்கும் செயற்பாடுகளையும் மலையக பிரதிநிதிகள் முன்னெடுப்பதானது இவர்கள் மீதான வெறுப்புணர்வையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் பழைமையான தொழிற்சங்கங்களில் ஒன்று. அதன் தலைவராக அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் செயற்பட்ட காலத்தில் கட்டுக்கோப்பொன்று மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்தது. இதனால் மக்கள் சக்தி மூலம் சில உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
ஆனால் காலமாற்றம் அனைத்தையும் புரட்டிப் போட்டு விட்டது. கொள்கை வேறுபாடு மற்றும் அரசியல் பழிவாங்கல்களை காரணமாகக் காட்டி அவ் அமைப்பிலிருந்து பலரும் வெளியேறி வேறு கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் ஸ்தாபித்தனர். தனி ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலே அனைவரையும் திருப்திப்படுத்துவதென்பது முடியாத காரியம். இதில் இலட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட அரசியல் அல்லது தொழிற்சங்க அமைப்புகளைப்பற்றி கூறத் தேவையில்லை.
எனினும் தனியாக உருவான எல்லா கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஒரே குறிக்கோளைக் கொண்டே இன்று வரை இயங்கி வருகின்றன. இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்று உருவான தொழிலாளர் தேசிய சங்கமாகட்டும் அல்லது மலையக மக்கள் முன்னணியாகட்டும் இந்த சமூகத்துக்கு சேவையாற்றுவதையே கடமையாகக் கொண்டிருக்கின்றனர்.
ஆகவே நோக்கங்களும் குறிக்கோள்களும் ஒன்றாக இருக்கும் போது பழிவாங்கும் செயற்பாடுகள் என்ன தான் இந்த சமூகத்துக்கு பெற்றுக்கொடுத்து விடப்போகின்றன? மலையக கட்சிகளை மட்டும் நாம் பார்க்கத்தேவையில்லை. இன்று தேசிய ரீதியான கட்சிகளும் கூட இவ்வாறு பிளவு பட்டு இரண்டாக உடைந்து உருவானவைதான். தேசிய மட்டத்தில் அவை ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக இருந்து விட்டுப்போகட்டும், ஆனால் எல்லா வகையிலும் இன்று அடிவாங்கிக்கொண்டிருக்கும் மலையக சமூகத்துக்கு இந்த கட்டமைப்புத் தேவையில்லை. நாம் மட்டுமே ஆளவேண்டும் இந்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடும் மனவோட்டமும் மிகவும் அபாயகரமானவை. அங்கு எல்லா வளங்களும் சலுகைகளும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பது பிரதிநிதிகளுக்கும் புரியும்.
மலையகத்தில் ஒரே பிரதிநிதி இருந்தால் ஒரே அமைச்சுப்பதவி மட்டுமே கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு அவர் என்ன தான் செய்ய முடியும்? கடந்த காலங்களில் அந்த நிலைமை மாறியதையும் அதன் மூலம் அதிக வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்ததையும் இங்கு மக்கள் உணர வேண்டும். நுவரெலியா மாவட்டத்திற்குக் கிடைத்த மலையக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சு மூலம் இந்த சமூகம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை அந்த சமூகத்திலுள்ளோரே அறிவர்.
இந்த இரண்டு அமைச்சுப்பதவிகளையும் கொண்டிருந்த கட்சிகளுமே ஒரே அமைப்பிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் பிரிந்து வந்த அமைப்புகள் தாம். ஆனாலும் அவை தமக்குள் எதிர்ப்பு அரசியலை செய்யவில்லை. சமூக கட்டுக்கோப்புக்காகவும் உரிமைகளைப்பெற்றுக்கொள்வதற்கும் காலத்தின் தேவையறிந்து ஒரு கூட்டணிக்குள் வந்தன. அதன் பிரதிபலனை கடந்த ஆட்சி காலத்தில் அறுவடையாக மக்கள் பெற்றனர்.
அதே போன்றதொரு தேவை இப்போதும் எழுந்துள்ளது. ஆனால் அதை விடுத்து இங்கு வேறு செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. செய்யப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களை குறை கூறியும் அதில் குற்றங்களை கண்டு பிடித்து ஊடகங்களில் செய்திகளாக்கியும் மலையக அரசியலை கட்டியெழுப்பத் தேவையில்லை. அது அரசியலுமில்லை. இதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மிச்சமிருக்கும் திட்டங்களை தொடர்வதற்கும் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்திற்குமே வழிவகைகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் ஒரு பிரத்தியேக நேர்காணலில், மலையகத்தில் ஏன் பிரதிநிதிகள் எதிர்மறையாக சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் காலத்தின் தேவை கருதி இவர்கள் ஒன்றுபட்டு செயற்பட முடியாதா ? என்று கேட்கப்பட்ட
கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இ.தொ.கா தலைவர் ஆறுமுகன், நேர்மறையான பதில் ஒன்றை வழங்கியிருந்தார். ‘நான் தயாராக இருக்கிறேன் அவர்களை வரச்சொல்லுங்கள் இப்போதே அழைத்துச்செல்கிறேன்’ என்பதாக அந்த பதில் இருந்தது. ஆகவே என்ன தான் எதிர்ப்பு அரசியல் சாயலில் அவர் மேடைகளில் பேசினாலும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவை காலத்தின் கட்டாயம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்பது புரிகிறது. மட்டுமன்றி அது அரசியல் பக்குவ நிலையையும் உணர்த்துகிறது.
தமது சமூகத்துக்காக ஒன்று பட உணர்வுபூர்வமாக இவர்கள் தாமாகவே முன்வர வேண்டுமே ஒழிய இதற்கு மூன்றாவது பேரினவாத சக்திகள் தேவையில்லை. அப்படி இருந்தால் அதுவும் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டதாகவே அமைந்து விடும்.
மலையகத்தில் சிரேஷ்ட நிலை அமைப்பாக இ.தொ.கா இருப்பதால் யாரின் பின்னாலும் போக வேண்டிய அவசியம் இல்லை என அது நினைப்பது விளங்குகிறது. ஆனால் எதையுமே பேசித் தீர்க்க முடியும் என்பதில் ஆழந்த நம்பிக்கைக் கொண்டு அதை சாதித்தும் காட்டிய பல வரலாற்றுப்பெருமைக்குரியவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான். அத்தகைய அமைப்பொன்றை தற்போது கொண்டு நடத்தும் அமைச்சர் ஆறுமுகன் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய காலகட்டத்தில் மலையகம் தற்போது இருப்பதை உணர்ந்திருக்கிறார் என நம்புகிறோம்.
இதை ஏனைய பிரதிநிதிகள் தமக்கு சாதகமாக அல்லாது மக்களை நினைத்தாவது பயன்படுத்திக்கொள்ளுதல் அவசியம். அத்தகையதொரு அரசியல் கலாசாரம் மலையகத்தில் உருவாக வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. பல தடவைகள் இது குறித்து நாம் ஊடகங்கள் வாயிலாக சுட்டிக்காட்டினாலும் பிரதிபலிப்புகள் கவலை தருவனவாகவே உள்ளன. ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிக்கு தொலைநோக்கும் பொறுப்பு சொல்ல வேண்டிய கடப்பாடும் இருக்க வேண்டியது கட்டாயம்.. அதே போன்று அச்சமூகத்திலிருந்து உருவான ஒவ்வொருவருக்கும் அது இருக்க வேண்டியது அவசியமாகும். குறை கண்டு பிடித்து, பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து அதன் மூலம் தான் எதிர்கால மலையக அரசியல் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றால் அந்த அரசியலை இப்போதுள்ள இளைஞர் யுவதிகளும் கல்வி கற்ற சமூகத்தினரும் வரவேற்பார்களா என்ன?
-சிவலிங்கம் சிவகுமாரன்