பங்களாதேசின் அகதிமுகாம்களில் உள்ள மியன்மாரின் ரொகிங்யா இன சிறுவர்களிற்கு கல்வி கற்பதற்கான உரிமை மறுக்கப்படுவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அகதி சிறுவர்களிற்கு கல்வி கற்பதற்கு உள்ள உரிமையை பங்களாதேஸ் அதிகாரிகள் வேண்டுமென்றே மறுக்கின்றனர் என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நாங்கள் மனிதர்கள் இல்லையா?என்ற கேள்வியுடன் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்விகற்கும் வயதிலுள்ள சுமார் 40,000 சிறுவர்களிற்கான உரிமை மறுக்கப்படுவது குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
உரிய கல்வியில்லாத நிலையில் இந்த சிறுவர்கள் இளைஞர் யுவதிகள் துஸ்பிரயோகங்கள் குற்றங்கள் வறுமை போன்றவற்றில் சிக்கிக்கொள்ளகூடும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
முகாமில் உள்ள சிறுவர்களிற்கு முறையான அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வியை ஐநாவும் , அரசசார்பற்ற அமைப்புகளும் வழங்குவதை பங்களாதேஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
முகாம்களிற்குள் கல்வி போதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை முகாம்களில் உள்ளவர்கள் வெளியே சென்று கல்வி கற்பதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
முகாம்களிற்கு வெளியே உள்ள பாடசாலைகளிற்கு செல்வதற்கும் தேசிய பரீட்சைகளை எழுதுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இரண்டு வருட கல்வியை இழந்துள்ள இந்த பிள்ளைகளிற்கு முறையான அங்கீகரிக்கப்பட்ட தரமான கல்விக்கான வாய்ப்பில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை மறுக்கப்பட்ட சிறுவர்கள் சிறுவர் தொழிலாளர்களாக மாறும் ஆபத்துள்ளது, சிறுவர்திருமணங்களிற்கான வாய்ப்பும் உள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவர்கள் வறுமையில் சிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பங்களாதேஸ் அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal