ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்கு ஒரு அணிதான் இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியஅணி.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வான் ட்விட்டரி்ல கருத்து பகிர்ந்துள்ளார்.
அதில், “அடிலெய்ட் டெஸ்ட் போட்டி முடிவைப் பார்த்தேன். இப்போது இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்த சூழலில் எந்த அணியையும் வீழ்த்தும். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் சக்தி இந்த நேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு மட்டும்தான் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய அணியின் ரோஹித் சர்மாவைப் புகழ்ந்து ஆஸ்திரேலியஅணியின் டேவிட் வார்னர் பேசி இருந்தார். டேவிட் வார்னர் அடிலெய்ட் டெஸ்டில் 335 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸி, அணி டிக்ளேர்செய்வதாக அறிவித்தது.
லாராவின் சாதனை எந்த வீரர் முறியடிக்க வாய்ப்புள்ளது என்று தனியார் தொலைக்காட்சி சேனலில் கேட்ட கேள்விக்கு டேவிட் வார்னர் அளித்த பதலில், “டெஸ்ட் போட்டியில் தனிவீரர் ஒருவரின் அதிகபட்சமான ஸ்கோரை லாரா வைத்துள்ளார். அவரின் 400 ரன்கள் ஸ்கோரை இப்போதைக்கு முறியடிக்க இந்தியாவின் ரோஹித் சர்மாவால் முடியும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.