அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் புகலிடம் கோரும் ஈழ தமிழ் குடும்பத்தை தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் ஒருபோதும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நடேசலிங்கம் – பிரியா முருகப்பன் தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்கள் கோபிகா (4) மற்றும் தருணிகா (2) ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த கடைசி நிமிடத்தில் நீதிமன்றம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் கடலோர தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
ஆகஸ்டில் மாற்றப்படுவதற்கு முன்னர், குடும்பம் மெல்போர்னில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் பிலோலாவின் பிராந்திய குயின்ஸ்லாந்து சமூகத்தில் வசித்து வந்தது.
செப்டம்பர் பிற்பகுதியில், கூட்டாட்சி நீதிமன்றம் குடும்பத்தினரின் வழக்கை நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் வரை தங்கலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் தீவில் குடும்பத்தை தடுத்து வைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை ஆதரிப்பதற்கான எழுத்துப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை என கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
குடும்பத்தை கடல்வழி காவலில் வைத்திருப்பதற்கான கடைசி நிமிட அறிவுரை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் உள்நாட்டு எல்லை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு அவுஸ்திரேலிய எல்லைப் படை ஆணையர் மைக்கேல் அட்ராம் வாய்மொழியாக வழங்கினார் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கார்டியன் பத்திரிக்கை இந்த தகவலை கண்டுபிடித்துள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் கார்டியன் பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரியா, கிறிஸ்துமஸ் தீவில் குடும்பம் துன்பப்படுவதாகவும் கவலைப்படுவதாகவும் கூறினார்.
“குறிப்பாக கோபிகா தனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை என்று சொல்கிறாள், அவள் மீண்டும் பிலோலாவுக்குச் செல்ல விரும்புகிறாள். தருணிகா சரியான உணவை சாப்பிடுவதில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
Eelamurasu Australia Online News Portal