கடந்த வியாழக்கிழமை, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை புதுடெல்லிக்கு மேற்கொள்வதற்கு முன்னர், தனது முதலாவது வெளிநாட்டு ஊடகச் செவ்வியையும், இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கே கொடுத்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான நிதின் ஏ கோகலே, Bharat Shakti.in மற்றும் SNI ஆகியவற்றின் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார். அவருக்கே கோத்தாபய ராஜ பக் ஷ தனது முதலாவது தனிப்பட்ட செவ்வியை வழங்கியிருந்தார்.
இந்தச் செவ்வி வெளியாகிய பின்னர் தான், அவரது புதுடெல்லி பயணம் இடம்பெற்றது.
எனவே, புதுடெல்லியை சங்கடப்படுத்தக் கூடிய, அல்லது சர்ச்சையை உருவாக்கக் கூடிய எந்தவொரு விடயத்தையும் அவர் இதில் கூறமாட்டார் என்பது ஏலவே தெரிந்த விடயம் தான்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பாணந்துறை, கெரவலப்பிட்டிய போன்ற பகுதிகளில் தமிழ் மொழியிலான வீதி பெயர்ப் பலகைகள், உடைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களின் பின்னால், கோத்தாபய ராஜபக் ஷவின் இந்திய பயணத்தை குழப்ப விரும்பும் சக்திகள் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ கூறியதாக செய்திகள் வெளியாகின.
எங்கோ சில இடங்களில் நடந்த சம்பவங்களையே புதுடெல்லி பயணத்தின் போது எதிரொலிக்கக் கூடும் என்ற கருத்து ராஜபக் ஷவினரிடத்தில் இருக்கின்ற சூழலில், இந்தியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் எந்த தகவல்களையும் கோத்தாபய ராஜபக் ஷ இப்போதைக்கு வெளியிடமாட்டார் என்று எதிர்பார்க்கக் கூடியது தான்.
இந்தியாவின் நலன்கள், பாதுகாப்புக்கு விரோதமான எதையும் நாங்கள் செய்யமாட்டோம் என்று அவர் நிதின் ஏ கோகலேவுக்கு அளித்த செவ்வியில் உறுதியாக கூறியிருப்பது, புதுடெல்லிப் பயணத்தை இலக்கு வைத்துத் தான் என்பது பலரதும் கருத்து.
ஆனால்,கோத்தாபய ராஜபக் ஷ இந்த உறுதியை இப்போதல்ல, 2014ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக்கு கொடுத்தார். சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்துச் சென்ற விவகாரம் புதுடெல்லிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவலிடம், அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்.
ஆனால், அஜித் டோவல் தங்களை நம்பவில்லை என்று பின்னாட்களில் ஓரிரு செவ்விகளில் கோத்தாபய ராஜபக் ஷ குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் நிலத்தையோ, நீர்ப்பரப்பையோ வான்பரப்பையோ பயன்படுத்த வேறெந்த நாட்டுக்கும் அனுமதிக்கமாட்டோம் என்று அப்போது கொடுத்த வாக்குறுதியின் மறு வடிவம் தான் இப்போது. கொடுக்கப்பட்டிருக்கின்ற வாக்குறுதி.
2014ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலராக இருந்தபோது, கோத்தாபய ராஜபக் ஷ கொடுத்த வாக்குறுதியை, அப்போது நம்பாத இந்திய பாதுகாப்புச் செயலர் அஜித் டோவல் இப்போது நம்புவாரா என்பது ஒரு புறத்தில் இருக்கட்டும்.
நிதின் ஏ கோகலேவுக்கு அளித்துள்ள செவ்வியில் கோத்தாபய ராஜபக் ஷ, அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது தவறானது என்றும், அந்த உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்வது குறித்து சீனாவுடன் பேசப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
புதுடெல்லிப் பயணத்தை அடுத்து, மிகக் குறுகிய காலத்திலேயே அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருக்கு சீன ஜனாதிபதியிட மிருந்து அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியப் பயணத்துக்கு முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்தது தவறு என்று கூறியிருப்பதும், புதுடெல்லியை சமாதானப்படுத்துவதற்கான கருத்து என்று நினைப்பதும் தவறு.
ஏனென்றால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு நீண்டகால குத்தகைக்கு கொடுப்பதற்கு ராஜபக் ஷவினர் தொடர்ந்து எதிர்ப்பையே வெளியிட்டு வந்தனர்.
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மீளாய்வு செய்வதற்கு, சீனாவிடம் கோருவோம் என்று மஹிந்த ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக் ஷவும் முன்னரே கூறியிருக்கிறார்கள்.
எனவே, இது இந்தியாவை வசப்படுத்துவதற்கான கருத்துக்கள் இல்லை என்று உறுதியாகவே கூறலாம்.
அதேவேளை, கோத்தாபய ராஜ பக் ஷ கூறியிருப்பது போல, அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்பாட்டை மீளாய்வு செய்ய சீனா இணங்குமா என்பதே முக்கியமான கேள்வி.
இது இரண்டு நாடுகள் செய்து கொண்ட ஒரு உடன்பாடு. இந்த உடன்பாட்டை மீறுவது. அல்லது இரத்துச் செய்வது, திருத்தம் செய்வது என்று எதையுமே, ஒருதலைபட்சமாக செய்து விட முடியாது. இரண்டு நாடுகளினதும் இணக்கப்பாட்டுடன் தான் அதனைச் செய்தாக வேண்டும்.
இவ்வாறான நிலையில், சீனாவும் இணங்கி வந்தால் தான், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எதிர்பார்ப்பது போல, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் திருத்தத்தை செய்ய முடியும்.
அம்பாந்தோட்டை துறைமுகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அதனை சீனாவுக்கு விட்டுக் கொடுத்தது தவறு என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்ற கோத்தாபய ராஜபக் ஷ, தன் மீது குற்றச்சாட்டுகள் விழக் கூடாது என்பதிலும் கவனமாகவே இருந்தார்.
அவர் பாதுகாப்புச் செயலராக இருந்தபோது தான், காலிமுகத்திடலில் இராணுவத் தலைமையக காணி ஷங்ரிலா நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.
தாங்கள் எந்த சொத்தையும், வெளிநாடுகளுக்கு விற்கவில்லை என்றும், கோத்தாபய ராஜபக் ஷ தான் வெளிநாடுகளுக்கு பெறுமதியான- கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை விற்றார் என்றும் தேர்தல் காலத்தில், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அதனை மனதில் வைத்தே, அவர், நிலங்களை விற்பது, விடுதிகளை அமைப்பதற்கு இடமளிப்பது என்பன பிரச்சினையில்லை என்பது போலவும், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற கேந்திர நிலைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் அவர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மீட்டெடுக்கும் உறுதிப்பாட்டில் இருக்கிறார் என்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
அவ்வாறாயின், மஹிந்த – கோத்தா தரப்பு சீனாவைச் சார்ந்தது இல்லையா- சீன நலன்களைப் பாதுகாக்கப் போவதில்லையா என்ற கேள்வி வருகிறது.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த உறவுகள் முற்றிலும் பொருளாதார நலன் சார்ந்ததே என்றும், ஆனால், ஊடகங்களும் விமர்சகர்களும் தான் மஹிந்த அரசாங்கத்தை சீன சார்பு நிலைக்குள் தள்ளி விட்டதாகவும், கோத்தாபய ராஜபக் ஷ கூறியிருக்கிறார்.
இவ்வாறான ஒரு குழப்ப நிலையில் இருந்து கொண்டு கோத்தாபய ராஜபக் ஷ அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மீளாய்வு செய்ய முனையும் போது, சீனா அதனை எவ்வாறு கையாள முனையக் கூடும் என்ற கேள்வி வருகிறது.
சீனாவுக்கு இப்போது அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு பொன் முட்டையிடும் வாத்து. இந்தியப் பெருங்கடலில் அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான திறவுகோல் இது.
இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதை சுதந்திரமானதாக இருக்க வேண்டும் ,யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதை கோத்தாபய ராஜபக் ஷ வலியுறுத்தினாலும், சீனாவோ, அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு வணிக ரீதியான முதலீடாகத் தான் கூறுகிறதே தவிர, அதனை இராணுவ நிலையாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதைக்கு இடையூறானது என்று, சீனாவிடம் இலங்கை அரசினால் நிறுவ முடியாது.
அதேவேளை, சீனாவுக்கு மஹிந்த – கோத்தாபய ராஜபக் ஷ ஆட்சியின் உறுதியும் முக்கியமானது. இந்த ஆட்சி நிலையானதாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு இடையூறாக உள்ள விடயங்களில் சீனா சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.
அந்த சமரசத்தை அம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் செய்து கொள்ள சீனா இணங்குமா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.
மஹிந்த- கோத்தா ஆட்சியை இன்னும் 20 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்றொரு கருத்து அவர்களின் அரசாங்கத்தில் உள்ளவர்களிடம் இருக்கிறது,
ஐ.தே.க.வினருக்குக் கூட இனி ஆட்சியைப் பிடிப்பது சுலபமில்லை என்பது நன்றாகவே தெரியும். ஐ.தே.க ஆட்சியில் சீனா விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளவில்லை.
ஏனென்றால், அது தமக்கு சார்பி்ல்லாத ஒரு அரசாங்கம் என்பது சீனாவுக்குத் தெரியும். ஆனால், மஹிந்த – கோத்தா அரசாங்கம் அவ்வாறானது அல்ல.
அது சீன சார்பு நிலை கொண்டது. சீனாவின் தேவைகள், நலன்களை அனுசரித்துச் செல்லக் கூடியது. இவ்வாறான ஒரு அரசாங்கம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கப் போவது உறுதியானால், அதற்கான சீனா சில விட்டுக்கொடுப்புகளை செய்யவும் தயாராக இருக்கும்.
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போன்ற யுக்தி தான் இது.
இதற்காக அம்பாந்தோட்டை விடயத்தில் சீனா சில தளர்வுகளுக்கு இணங்கினால் ஆச்சரியமில்லை.
அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீது அதற்கு 99 ஆண்டு கால உரிமை இருக்கப் போகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறுகியகால நலன்களின் அடிப்படையிலா – நீண்டகால நலன்களின் அடிப்படையிலா சீனா முடிவுகளை எடுக்கப் போகிறது என்பது இங்கு முக்கியமானது,
அமெரிக்கா தனது பாதுகாப்பு கொள்கைகளை வகுத்துக் கொள்ளும்போது, 500 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட அமெரிக்க நலன்களையும் கருத்தில் கொள்கிறது.
சீனாவும் அவ்வாறானதொரு தூர நோக்கில் முடிவுகளை எடுக்க முனைந்தால், அது கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சாதகமானதாக இருக்காது.
அதேவேளை, குறுகியகால நலன்களை அடைவதற்காக, சீனா முடிவுகளை எடுத்தால், அது கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சாதகமாக அமையும்.
சர்வதேச சக்திகளின் மோதல்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல், எல்லோருக்கும் நண்பனாக இருக்கப் போவதாக கோத்தாபய ராஜபக் ஷ கூறினாலும், அதனை செயலளவில் நிரூபிக்க வேண்டியவராக அவர் இருக்கிறார்.
அவ்வாறு நிரூபிப்பதற்கான ஒரு களமாக, அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தை அவர் கையில் எடுத்துக் கொள்ளக் கூடும். அப்போது, தான் அம்பாந்தோட்டை விவகாரத்தில் சீனாவின் உண்மையான சுயரூபமும் வெளிப்படும்.
– ஹரிகரன்