கடத்தப்பட்ட விவகாரம்: தீவிரமாக கவனம்!-அரசாங்கம் அறிவிப்பு!

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் சிறிலங்கா ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய நவம்பர் 25 ஆம் திகதி இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதித் தலைவர் ஆகியோரை சந்தித்து, காவல் துறை  திணைக்களத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகள் குறித்து விளக்கமளித்தனர்.

நவம்பர் 29 ஆம் திகதி சுவிட்சர்லாந்து தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கூறப்படும் பாதிக்கப்பட்டவரை நேர்காணல் செய்யப்பட வேண்டியிருப்பதால் அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் அதற்கான நடவடிக்கைகளை தூதரகம் எடுக்கவில்லை. இருந்த போதிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர் சார்பாக சுவிட்சர்லாந்து தூதரகத்தால் கூறப்படும் சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள் மற்றும் காலவரிசை , பாதிக்கப்பட்டவர் குறித்த தினத்தில் மேற்கொண்ட நடமாட்டங்களுடன் ஒத்திருக்கவில்லை. இவற்றை ஊபர்  (Uber)  பதிவுகள், சி.சி.டி.வி காட்சிகள், தொலைபேசி பதிவுகள் மற்றும் ஜி.பி.எஸ் தரவு உள்ளிட்ட சாட்சி நேர்காணல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களால் இணங்காணப்பட்ட தகவல்கள் குறித்து தூதுவருக்கு தெளிவான சான்றுகள் வழங்கப்பட்டன.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சுவிஸ் தூதரகத்துக்கு முன்வைத்த மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில், இந்த சம்பவத்தின் பின்னணியின் உண்மையான விடயங்களை கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்காக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தூதரக ஊழியர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் நேர்காணல் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர் தான் கடத்தப்பட்ட போது தனக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருப்பதால், அவர் இலங்கையில் உள்ள ஒரு நீதித்துறை மருத்துவ அதிகாரியால் மருத்துவ பரிசோதனைக்கு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு தூதரகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.