இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள இந்த முக்கியமான மற்றும் மாற்றமான புதிய அரசியல் சூழலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தீர்க்கமானதாக உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் விடயத்தில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படும் மற்றும் கடந்த காலங்களில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணை குறித்தும் இந்தக் கூட்டத் தொடரில் பிரஸ்தாபிக்கப்படவுள்ளது.
புதிய ஜனாதிபதி பதவியேற்று புதிய அரசாங்கத்தையும் அமைத்துள்ள நிலையில் அவரின் அணுகுமுறை இந்த ஜெனிவா பிரேரணை விடயத்தில் எவ்வாறு அமையும் என்பதை அனைத் துத் தரப்பினரும் எதிர்பார்த்து இருக்கின்ற னர். அதாவது இலங்கை குறித்த பிரேரணை தொடருமா? அல்லது அகற்றப்பட்டு விடுமா? அல்லது மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுமா? போன்ற விடயங்கள் குறித்துப் பேசப்படுகின்றன.
ஏற்கனவே இந்தப் பிரேரணையை விட்டு இலங்கை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசாங்க மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வரும் சூழலில் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான ஓர் இடைக்கால அறிக்கையை வெளியிட இருக்கின்றமை விசேட அம்சமாகும். அதில் உண்மையைக் கண்டறிதல், மற்றும் நீதி வழங்குதல் தொடர்பில் கடும் அழுத்தங்களை ஐ.நா. மனித உரிமை கள் ஆணையாளர் பிரயோகிப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று அரசாங்கமும் தனது மாற்று ஏற்பாட்டை இந்த ஜெனிவா கூட்டத் தொடரில் முன்வைக்கும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது தற்போது அமுலில் இருக்கும் இலங்கை குறித்த பிரேரணை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்குப் பதிலாக புதிய திட்டமொன்றுக்குச் செல்லலாம் என்ற யோசனையை அரசாங்கம் அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையில் புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் நடைபெற்ற ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த 30–1 என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையிலேயே இந்தப் பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கத்தால் அனுசரணை வழங்கப்பட்டது. பல்வேறு விடயங்கள் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன. முக்கியமாக 20 பரிந்துரைகள் பிரேரணையில் இடம்பெற்றிருந்த நிலையில் பொறுப்புக் கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்பது மிக முக்கியமான பரிந்துரையாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமன்றி காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை விடயம், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளும் இதில் இடம்பெற்றிருந்தன. அவற்றை இரண்டு வருடங்களில் நிறைவேற்றுவதாகக் கூறியே இலங்கை அரசாங்கம் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்கியது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தப் பிரேரணையைத் தயாரித்து மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்திருந்தன. எனினும் குறிப்பிட்ட இரண்டு வருட காலத்தில் பிரேரணை அமுல்படுத்தப்படாததால் மீண்டும் 2017ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற அதன் 34ஆவது கூட்டத் தொடரில் அந்தப் பிரேரணை 34–1 என்ற பெயரில் இரண்டு வருடங்களுக்காக நீடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஒரு திருப்புமுனையும் இடம்பெற்றது. அதாவது 2015ஆம் ஆண்டில் இலங்கைப் பிரேரணையை முன்னின்று கொண்டுவந்த அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதாக அறிவித்தது. மனித உரிமைகள் பேரவை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தே அமெரிக்கா அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
எனினும் பிரிட்டன் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகள் முன்னின்று இலங்கை குறித்த பிரேரணையை நீடிப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்திருந்தன. அதற்கடுத்த இரண்டு வருட காலத்திலும் இந்தப் பிரேரணை இலங்கையினால் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நட்டஈடு வழங்கும் அலுவலகம் ஆகியன நிறுவப்பட்டன. உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவை நியமிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
எனினும் ஜெனிவா பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படாததன் காரணமாக இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரில் குறித்த பிரேரணை 40 –1 என்ற பெயரில் மீண்டும் இரண்டு வருடங்களுக்காக நீடிக்கப்பட்டது. இம்முறையும் பிரிட்டன் முன்னின்று பிரேரணையை நீடிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அதன்படி எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை இந்தப் பிரேரணை நடைமுறையில் இருக்கும்.
இந்தச் சூழலிலேயே 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 43ஆவது கூட்டத் தொடரில் இந்தப் பிரேரணை அமுலாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். இந்தப் பிரேரணை 2015ஆம் ஆண்டு முதன்முதலாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது அப்போதைய கூட்டு எதிரணி கடுமையாக எதிர்த்திருந்தது. குறித்த பிரேரணை ஊடாக நாட்டின் இறைமை கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் அதனை கடுமையாக எதிர்த்த அப்போதைய கூட்டு எதிரணி இன்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த ஜெனிவா பிரேரணையின் அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
அதாவது புதிய அரசாங்கம் இந்தப் பிரேரணையை முன்கொண்டு செல்லுமா? அல்லது முற்றாக இரத்து செய்துவிடுமா? அல்லது இதற்காக ஒரு மாற்றுத் திட்டத்தை முன்னெடுக்குமா? போன்ற கேள்விகளே எழுந்துள்ளன.
ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் புதிய நிலைமை உருவாகியிருக்கிறது. தமது உறவுகளை தொலைத்துவிட்ட மக்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரி வரு கின்றனர். அரசாங்கம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதே பிரதான கேள்வியாக எழுந்துள்ள நிலையில் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களது கருத்துகள் மூலம் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை ஊகிக்க முடிகின்றது.
இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இது தொடர்பில் தெரிவித்துள்ள விடயங்கள் இவ்வாறு அமைந்துள்ளன.
“இந்த ஜெனிவா பிரேரணை முழுமையாக மீளாய்வு செய்யப்படுவது அவசியமாகும். 2015 ஜெனிவா பிரேரணைக்கு அமைச்சரவையின் அனுமதி இன்றியே அப்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரேர ணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்தப் பிரேரணையை முன்னின்று கொண்டுவந்த அமெரிக்கா ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மீது கடும் விமர்சனங்களை வெளியிட்டு விட்டு அதிலிருந்து வெளியேறி விட்டது. எனவே இலங்கை குறித்த இந்தப் பிரேரணை விடயத்தில் பல முரண்பாடுகளும் சர்ச்சைகளும் உள்ளமை தெளிவாகின்றது. அதனால் இதனை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்தப் பிரேரணையை அகற்றிவிட முடியாது. இதில் எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில விடயங்கள் உள்ளன. அவற்றை நாம் செய்யலாம். ஆனால் சர்ச்சைக்குரிய விடயங்கள் பல உள்ளன. அதனால் அதனை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்’’ இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டிருக்கிறார்.
ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகப் பார்க்கப்படும் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தை முன்வைத்துள்ளார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்தப் பிரேரணை தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
அதாவது “கடந்த காலத்தில், 2015ஆம் ஆண்டில் அரசாங்கம் ஜெனிவாவில் முன்னெடுத்த நகர்வுகள் முற்றிலும் தவறானவையாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாதவை என நாம் தொடர்ச்சியாகக் கூறி வந்துள்ளோம். போர்க்குற்றங்களை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாது வெறுமனே ஒரு சிலர் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதைப் போலவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரின் 30/1 பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. இந்த அனுசரணையை இலங்கை அரசாங்கம் வழங்கியது என்று கூறுவதை விடவும் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட தீர்மானம் என்றே கூற முடியும். எனினும் நாம் மீண்டும் இதனை பரிசீலிக்கவுள்ளோம். வெகு விரைவில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மீண்டும் கலந்துரையாடி இலங்கை அரசாங்கம் அங்கீகரித்த பிரேரணை தொடர்பில் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தி அதனை நீக்குவதற்காக சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கின்றார்.
இரண்டு முக்கிய அமைச்சர்களின் கூற்றுகளைப் பார்க்கும் போது அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் இலங்கைப் பிரேரணை தொடர்பாக மாற்று யோசனை ஒன்றை முன்வைக்கும் சாத்தியம் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இந்தப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்குப் பதிலாக மாற்றுத் திட்டமொன்றுக்குச் செல்லலாம் என்ற யோசனை அரசாங்கத் தரப்பில் முன்வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜெனிவா தீர்மானத்தை புதிய அரசாங்கம் ஏற்காமல் விடுவது பாரிய அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கருத்தாக அமைந்துள்ளது. இவ்வாறான பல்வேறு உள் மற்றும் புறக் காரணிகளின் அடிப்படையில் அரசாங்கம் எவ்வாறு இந்த விடயத்தை ஆராயப்போகின்றது என்பது முக்கிய விடயமாகும்.
இது இவ்வாறிருக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜெனிவா பிரேரணை தொடர்பாக குறிப்பிட்டு எந்த விடயத்தையும் முன்வைக்கவில்லை. எனினும் பொதுவாக பல்வேறு விடயங்களைக் கூறியிருந்தார்.
அதாவது “புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும். இதற்காக பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும். புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, கலப்பு தேர்தல் முறை, மாகாண சபை முறை மற்றும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். ஒற்றையாட்சி, பௌத்த மதத்திற்கான முன்னுரிமை, மதச் சுதந்திரம், அடிப்படை மனித உரிமை ஆகியவை அரசியலமைப்பின் பகுதிகளாக இருக்கும். ஜனாதிபதியின் தலைமையில் சர்வமத ஆலோசனை சபை உருவாக்கப்படும். மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலும் சர்வமதக் குழுக்கள் நிறுவப்படும். யுத்தம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உட்பட்டு சிறையில் வாடுகின்ற இராணுவ மற்றும் புலி உறுப்பினர்கள் தொடர்பாக முறையான புனர்வாழ்வு முன்னெடுக்கப்பட்டு சுதந்திர மனிதர்களாக சமூகமயப்படுத்தபடுவார்கள். பயங்கரவாதக் குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் விடயத்திலும் மூன்று மாத காலத்தில் வழக்கு தொடரப்படும் அல்லது விடுதலை செய்யப்படுவார்கள்’’
பல்வேறு முக்கிய விடயங்கள் ஜனாதிபதியின் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. அதாவது ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்படும் பல்வேறு விடயங்கள் குறித்த உள்ளடக்கங்கள் ஜனாதிபதியின் விஞ்ஞாபனத்தில் காணப்படுகின்றன. எனினும் பொதுவாக பிரேரணை விடயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எப்படியிருப்பினும் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடர் என்பது இலங்கையில் நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தீர்க்க மானதாக அமைந்திருக்கின்றது.
இந்தப் பிரேரணை ஊடாக தமக்கு நீதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். கடந்த அரசாங்கம் அதற்கு இணை அனுசரணையும் வழங்கியிருந்தது. எனினும் பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் நியமிக்கப்பட்டாலும் காணாமல் போனோர் தொடர்பான ஒரு முறைப் பாட்டுக்குக் கூட பதில் கிடைக்கவில்லை. நட்டஈடு வழங்கும் அலுவலகம் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை. அதன்படி கடந்த அரசாங்க காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். இந்த நிலையில் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பது அடுத்த கேள்வியாக இருக்கிறது? காணாமல் போனோரின் உறவுகள் இன்னும் போராட்டங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இவ்வாறான தீர்க்கமானதொரு சூழலில் ஜெனிவா கூட்டத் தொடரில் மனித உரி மைகள் ஆணையாளர் பச்லட் இலங்கை தொடர்பாக இடைக்கால அறிக்கையை வெளியிடப் போகிறார். அதில் அவர் பல பரிந்துரைகளை முன்வைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அதேபோன்று இலங்கை அரசாங்கமும் ஜெனிவா பிரேரணைக்குப் பதிலாக மாற்று யோசனை ஒன்றை முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது.
நன்றி -வீரகேசரி