இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாடொன்றுக்கான முதலாவது விஜயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விஜயத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, ‘இலங்கையில் நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் என்றும் நம்புவதாகவும் இலங்கையின் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குவதாகப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டார்.
இந்திய பிரதமரின் இந்த வலியுறுத்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அமைச்சர் கெஹெலிய இதனைத் தெரிவித்தார்.