தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இந்திய விஜயத்தின் போது தமிழர் அரசியல் பிரச்சினை விவகாரத்தில் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்க ஒன்றாகும். எமது மக்களின் அபிலாசைகளை வெற்றிகொள்ள வேண்டிய நகர்வில், அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்பு இன்னும் சற்று பலமடைந்துள்ளது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு எமது நன்றிகளை நாம் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.