சுரிநாம் நாட்டு தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிறிய நாடான சுரிநாம், 1975 ம் ஆண்டு நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்ஸ் (வயது 74). 1980ம் ஆண்டு சுரிநாம் நாட்டில் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது ஆட்சியை பிடித்த பவுட்டர்ஸ் தற்போது வரை சுரிநாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். போதைப்பொருட்கள் வழக்கிலும் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ள இவர் மீது கொலை வழக்குகளும் தொடரப்பட்டன.
1982 ம் ஆண்டு பவுட்டர்ஸ் ஆட்சியில் இருந்த போது அவரது எதிர்ப்பாளர்களான 15 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘டிசம்பர் கொலைகள்’ என அழைக்கப்படும் அந்த சம்பவத்தில் 13 பொது மக்கள் மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகள் என 15 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு பவுட்டர்ஸ் மற்றும் 24 நபர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பவுட்டர்ஸ், கொலை நடந்த சமயத்தில் தான் வேறு இடத்தில் இருந்ததாகவும், தப்பிச்செல்ல முயன்ற காரணத்தால் அவர்கள் 15 பேரும் கொல்லப்பட்டார்கள் என தெரிவித்தார்.
விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர், பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவுட்டர்ஸ் சுரிநாம் வந்த பிறகு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் குற்றவாளிகளில் 6 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.