சிறிலங்கா சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்!

நியுயோர்க் டைம்ஸ்

தமிழில் – ரஜீபன்

தேர்தல் முடிவடைந்து சில நாட்களிலேயே, ராஜபக்ச அரசியல் வம்சாவளியை விமர்சிப்பவர்கள் மீதான அரசியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன என்ற அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தினரின்  மனித உரிமை மீறல்கள் ஊழல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் இலங்கையை விட்டு தப்பியோட முயல்கின்றனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாக ஒரு சம்பவம் காணப்படுகின்றது.

திங்கட்கிழமை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவரை வானில் கடத்திய இனந்தெரியாத நபர்கள் அவரின் தொலைபேசியை ஆராய்ந்துள்ளனர்.

அந்த பெண் பணியாளரின் கையடக்க தொலைபேசியில் கோத்தாபாய இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர்  சுவிட்சர்லாந்தில் அடைக்கம் கோரிய இலங்கையர்கள் குறித்த விபரங்களும்,அவர்களிற்கு உதவிய இலங்கையர்களின் பெயர்விபரங்களும்  காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநாளன்று , ராஜபக்ச குடும்பம் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்த 700 சிஐடியினர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கோத்தபாய ராஜபக்ச தடை விதித்தார்.

அதேதினத்தில் செய்தி ஊடகமொன்றின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சோதனையிட்ட  காவல்துறையினர் பல பத்திரிகையாளர்களை அவர்களது கணிணிகளை விசாரணைக்காக ஒப்படைக்குமாறு கேட்டனர்.

குரோதபேச்சை தூண்டும்  நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமை  ஜனாதிபதி ராஜபக்சவின் பேச்சாளர் ஒருவர்  சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியவேளை பாதுகாப்பு அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய தீர்மானித்துள்ளனர் என குறிப்பிட்டார்.

தூதரக பணியாளர் கடத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த  பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்த விரும்பாத தூதரக அதிகாரி மர்ம நபர்கள் தூதரகத்தின் பெண் ஊழியரை பல மணிநேரம் தடுத்துவைத்திருந்தனர், அந்த பெண் ஊழியர் தனக்கு நடந்ததை தெரிவித்தால் அவரை கொன்றுவிடுவோம் என மிரட்டினார்கள் என குறிப்பிட்டார்.

ராஜபக்ச குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தபுலனாய்வு அதிகாரி தப்பியோடியமை குறித்த விபரங்களை அறிந்துகொள்வதிலேயே தூதரக ஊழியரை கடத்திய நபர்கள் ஆர்வமாகயிருந்தனர் என பெயர் குறிப்பிடவிரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

தூதரக ஊழியரை கடத்திய நபர்கள் ராஜபக்சவின் உத்தரவின் பேரில் செயற்பட்டார்களா அல்லது அவரதும் அவரது அரசியல் வம்சாவளியின் ஆதரவாளர்கள் என்ற அடிப்படையில் சயமாக செயற்பட்டனரா என்பது தெரியவில்லை.

2015 இல் தேர்தலில் தோற்கும்வரை ராஜபக்சாக்கள் பத்து வருடங்கள் இலங்கையை ஆண்டனர்.அவர்களின் ஆட்சியின் இறுதி வருடங்கள் அரசியல் எதிராளிகள் கடத்தப்படுவது அடிக்கடி இடம்பெற்றது.அவர்கள் சீருடை அணியாதவர்களால் வான்களிற்கு இழுத்துப்போடப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் மீண்டும் திரும்பிவரவேயில்லை.

ஆனால் நூற்றிற்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு கரிசனைகள்பொதுமக்களின் மனங்களில்  முன்னணிக்கு வந்தன, இதன் காரணமாக ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்பு உருவானது.

இலங்கையின் நீண்ட கால பயங்கரமான உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாராகவும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் காணப்பட்டனர்.இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக அவர்கள் பாராட்டை பெற்றனர் அதேவேளை யுத்தத்தை ஈவிரக்கமற்ற விதத்தில் முடித்துவைத்தமைக்காக யுத்த குற்றச்சாட்டுகளையும் ஏனைய மனித உரிமை குற்றச்சாட்டுகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த கேள்விகளிற்கு பதில் அளிப்பதற்காகவும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குவதற்காகவும் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவரை புதன்கிழமை சந்திக்கவிருந்தார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் எமக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இலங்கை பத்திரிகையாளர்களிற்கு கவலையளிக்கும் இன்னொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீருடையணியாத காவல்துறையினர் திங்கட்கிழமை நியுஸ்ஹப்பின் அலுவலகத்தை சோதனையிட்டனர்.