எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு 2019 – சிட்னி

அவுஸ்திரேலிய நகர் சிட்னியில் மாவீரர் நாள் 2019 நிகழ்வு நவம்பர் 27ஆம் திகதி புதன்கிழமை உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

சிட்னி நகரின் புறநகர் ஒன்றின் திறந்தவெளி அரங்கில் நிகழ்ந்த இந்நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் சிட்னி வாழ் உறவுகளைச் சேர்ந்த 230 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் படங்கள் மாதிரி கல்லறைகளில் வைக்கப்பட்டு அம்மாவீரர்களின் குடும்பங்ளைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடர்கள் ஏற்றி மலர்வணக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது மைதானம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு வாசலில் மாவீரர் நாள் வளைவு தமிழீழத்தில் இருந்தவை போல் அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தினுள், மாதிரி மாவீரர் கல்லறைகள் அமைக்கப்பட்டு உள்ளே நுழைந்ததுமே மாவீரர்களை நினைத்து உருக வைக்கக்கூடியதாக மாவீரர் துயிலும் இல்லம் போன்றதொரு அமைப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வினை முதலில், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் சிந்தனையோடு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.
“எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள் மாவீரர் நாள்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.”
என்று தலைவரின் வார்த்தைகளோடு நிகழ்ச்சி ஆரம்பமாகியதால் வந்திருந்தவர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளோடு ஒன்றித்துப் போனார்கள்.

ஒரு கட்டமைக்கப்பட்ட விடுதலை இயக்கமாக உயரிய இலட்சிய பயணத்தில் தனது குறிக்கோளை எந்த சமரசத்திற்கும் இடமின்றி இறுதி வரை உறுதியுடன் போராடிய மாவீரர்களை நினைவு கூரும் இந்த நிகழ்வில், பொதுச்சுடரினை, 2006 ஆம் ஆண்டு வீரகாவியமாகிய இரத்தினக்குமார் வீரசிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட லெப் கேணல் எழில்கண்ணன் அவர்களின் மகள் கதிரினி இரத்தினக்குமார் ஏற்றிவைத்தார்.

அதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய பூர்வீக மக்கள் கொடியை தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான, முன்னாள் செனட்டர் லீ ரீயனன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய தேசிய கொடியை NSW நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், NSW மாநில Labor கட்சி தலைவருமான Jodi MacKay அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி பொறுப்பாளர் திரு ஜனகன் சிவராமலிங்கம் அவர்கள் தமிழீழ தேசிய கொடியினை ஏற்றினார். அவுஸ்திரேலிய தேசிய கொடி ஏற்றப்படும் போது அவுஸ்திரேலிய தேசிய கீதமும் எமது தேசியக் கொடி ஏற்றப்படும் போது கொடிப்பாடலும் இசைக்கப்பட்டது.

1993ம் ஆண்டு, ஜனவரி 16ஆம் நாள் தமிழீழ கடற்பரப்பில் இந்திய கடற்படையின் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு அவர்களின் சகோதரர் சதாசிவம் காந்திதாசன் பிரதான ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்.

பிரதான ஈகைச்சுடரை சதாசிவம் காந்திதாசன் அவர்கள் ஏற்றி வைக்க, சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்தோர் மற்றும் உரித்துடையோர் சுடரேற்றினார்கள்.

துயிலும் இல்லப் பாடல் இசைக்கப்பட, மாவீரர் குடும்பங்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் மலர் வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து மாவீரர்கள் நினைவு சுமந்த பாடல்களை தேவா மற்றும் ரமேஷ் ஆகியோர் பாடினார்கள்.

அதைத்தொடர்ந்து, முன்னாள் அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரீயனன் சிற்றுரையாற்றினார். ஒவ்வொரு வருடமும் சிட்னியில் நடைபெறும் மாவீரர் நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை தான் அவதானித்துள்ளதாகக் கூறிய அவர், விடுதலை வேண்டி நிற்கும் மக்கள் சோர்வடைய மாட்டார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது என்று கூறினார். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து தானும் அக்கறையோடு அவதானித்து வருவதாகத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலிய அரசு ராஜபக்‌ஷே அரசுக்கு ஆதரவாக இயங்குவது கவலை தருகிறது என்றும் கூறினார். அண்டையிலுள்ள Bougainville என்ற நாடு சுதந்திரத்திற்காக வாக்களிப்பது போல் தமிழர்களுக்கும் ஒரு காலம் விரைவில் வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எமது போராட்ட வரலாறு, மாவீரரின் தியாகம், நடைபெற்ற இனப் படுகொலை, நாம் வீழவில்லை மீண்டும் எழுவதற்குத் தயாராக உள்ளோம் என்ற கருத்தோட்டத்துடன், சிட்னி இளையோர் ஒரு அழகிய நாட்டிய நிகழ்வு ஒன்றை நடத்தினார்கள்.

கொடியிறக்கலைத் தொடர்ந்து, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி பொறுப்பாளர் ஜனகன் சிவராமலிங்கம் தலமையில் மக்கள் உறுதிமொழி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.