ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு வந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன், கோத்தாபய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடியின் சார்பில் அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு இன்று நண்பகல் புறப்படட்டார்.
இன்று மாலையில் டெல்லி சென்றடையும் அவருக்கு இந்திய ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதற்கு பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் தனித்தனியே சந்தித்து பேசவுள்ளார்.
இந்நிலையில், கோத்தாபய ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று காலை, ம.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

கோத்தாபய ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ம.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வைகோவை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Eelamurasu Australia Online News Portal