நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள்.
அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நல்லாட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு நாட்டுமக்கள் 2015 ஆம் ஆண்டில் எமக்கு ஆணை வழங்கினார்கள். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பதே மக்கள் எமக்கு ஆணையை வழங்குவதற்கான பிரதான காரணமாக இருந்தது.
அதன்படி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தைக் குறைத்து, அதனைப் பாராளுமன்றத்திற்குப் பெற்றுக்கொடுத்தோம். நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தியதுடன், சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தோம்.
காவல் துறை திணைக்களத்திற்கு எந்தவொரு அழுத்தங்களையும் வழங்காத அதேவேளை, அவர்களுடைய விசாரணைகளின் தலையீடு செய்யாத ஒரே அரசாங்கம் எம்முடையது மாத்திரமே என்பதை இப்போதும் உறுதியாகக் கூறமுடியும்.
19 ஆவது திருத்தத்தின் ஊடாக அமைக்கப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூலமாகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியானதும் ,நியாயமானதுமான முறையில் இடம்பெற்று முடிந்திருக்கிறது.
எனினும் தற்போது அந்த 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தில் சிலர் கூறிவருகிறார்கள்.
அதேபோன்று புதிய அரசாங்கம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த ஷானி அபேசேகர சுமார் 10 வருடகாலம் அப்பிரிவில் பணியாற்றியவராவார்.
நீண்டகாலம் அனுபவம் என்பது ஒருபுறமிருக்க அவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் பெருமளவான அரசநிதி செலவிடப்பட்டிருக்கும். அவ்வாறிருக்க தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவு தொடர்பில் எவ்வித விளக்கமும் இல்லாத ஒருவரை அதன் பிரதானியாக நியமித்திருக்கின்றார்கள்.
அதுமாத்திரமன்றி 704 குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதித்திருக்கும் நிலையில் சட்டமாதிபர் திணைக்களத்தின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்வதிலும் இடையூறுகள் ஏற்படும்.
நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள்.
அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.