தேர்தல் காலப் பகுதியில் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றுமுன்தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகருடன் சந்திப்பின்போதே மஹிந்த தேசப்பிரிய இதனை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கால கட்டத்தில் சில ஊடக நிறுவனங்கள் பக்கசார்பாக நடந்து கொண்ட விதத்தினை சுட்டிக்காட்டியே அவர் இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், ஊடக ஒழுங்குமுறைச் சட்டங்களையும் நிறைவேற்றுவதன் மூலம் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் தனது ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்தார்.
அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைக்க முடிவு செய்தால், ஏப்ரல் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியும் என்றும் இதன்போது மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தத் தேவையான ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் மிகவும் விரைவாக அங்கீகரித்துத் தருமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்தார்.