வடக்கு கிழக்கு மக்கள் அச்சமான சூழலுக்குள் இருக்க வேண்டியதில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் மக்களை பழிவாங்கும் போக்கிற்குச் செல்வார் என்று கூறமுடியாது. அதற்கு காலம் உள்ளது. அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவினதும், ஏனைய சர்வதேச நாடுகளினதும் அழுத்தங்களை அவர் மீது பிரயோகிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு தமிழ்ப் பேசும் மக்களும், பெரும்பான்மை சிங்கள மக்களும் இருவேறு பிரதிபலிப்புக்களைச் செய்துள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- தமிழ்ப் பேசும் மக்களும் சிங்கள, பௌத்த தலைவர் ஒருவருக்கே தமது வாக்குகளை வழங்கியுள்ளார்கள். ஆனால் அந்த தலைவர் நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற தமிழ்ப் பேசும் மக்களையும் இணைத்துக்கொண்டு ஆட்சியை முன்னகர்த்தக் கூடிய ஒருவராக அவரே(சஜித் பிரேமதாஸவே) இருப்பார் என்ற மனநிலையில் தான் அவ்வாறு பிரதிபலித்துள்ளார்கள்.
வாக்களிப்பில் தமிழ்ப் பேசும் மக்களின் பிரதிபலிப்பின் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபயவின் மீது எவ்விதமான நம்பிக்கையையும் வைக்கவில்லை என்பது தெளிவாக வெளிப்படுகின்றது. அதாவது, சிங்கள பௌத்தர்கள் அல்லாத தமிழ், முஸ்லிம், மலையக, கிறிஸ்தவ சமய மக்கள் ஜனாதிபதி கோத்தாபயவை ஏற்பதற்கு தயாராக இல்லை என்ற செய்தி அவர்களின் வாக்களிப்பு சதவீதத்தின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.
தனிச்சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கையின் பிரதிபலிப்பானது இந்த நாட்டில் இன நல்லுறவு சாத்தியமில்லை என்ற ஐயத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் எதிர்காலத்திற்கு இனங்களுக்கிடையிலான நல்லுறவு அத்தியாவசியமானது. ஆகவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் அனைத்து இனங்களின் நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது விட்டால் நாட்டில் பிரச்சினைகளுக்கு முடிவு கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
கேள்வி:- விமர்சனங்களைத்தாண்டி நாட்டின் தலைமைப்பொறுப்பு கோத்தாபயவிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் விடயங்களை கையாளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்டமாக எத்தகைய நகர்வினைச் செய்யவுள்ளது?
பதில்:- தமிழ் மக்கள் தன்னை அங்கீகரிக்கவில்லை என்று கோத்தாபய நன்கு உணர்ந்திருக்கின்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றும் போதும், பதவியேற்பு நிகழ்வின்போதும் அதுகுறித்து பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தமிழ்ப் பேசும் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பது அவரது மனச்சாட்சியை உறுத்துகின்ற வகையில் இருக்கின்றது என்பதை எம்மால் உணரமுடிகின்றது. ஆகவே அவ்வாறான நிலைமையை அவர் மாற்றியமைக்க முயல்வார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு நாம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம், சிங்கள மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும், தமிழ் மக்கள் கோத்தாபயவுக்கு வாக்களிக்காது விடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆகவே நாட்டை ஒருமித்து முன்னேற்றுவதை இலக்காக கொண்டிருக்கும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது விலத்திச் செல்ல முடியாது. எனவே தமிழ் மக்கள் ஆணை வழங்கிய தரப்பினருடன் பிரச்சினைகளுக்கான தீர்வினை கொண்டுவருவதற்கான பேச்சுக்களை உடன் மேற்கொள்ள வேண்டும். தீர்வுகளுக்கான இணக்கத்தினைக் காண்பதற்குரிய பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர்களிடத்தில் முன்வைப்பதற்காக ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து தயாரித்த 13அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி கூட்டுமுடிவொன்றை எடுக்கமுடியாதுபோனதேன்?
பதில்:- 13அம்சக்கோரிக்கைகள் எமது அங்கீகாரத்துடனும் இணக்கத்துடனும் தான் தயாரிக்கப்பட்டன. நாங்கள் அந்தச் செயற்பாட்டைக் குழப்பவில்லை. ஆனால் அந்த ஆவணத்தினை எந்த வேட்பாளரிடத்திலும் முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எம்மீது உள்ளது. அந்தக்கோரிக்கை ஆவணத்தினை முன்னிலைப்படுத்தாத நிலையிலேயே கோத்தாபயவுக்கு இவ்வளவு தூரம் வெற்றி கிடைத்திருக்கின்ற நிலையில் தற்செயலாக சஜித் பிரேமதாஸவுடன் அந்த ஆவணத்தினை முன்னிலைப்படுத்தி இணக்கம் கண்டிருந்தால் அவருடைய தோல்வி மிக மோசமாக இருந்திருக்கும்.
கேள்வி:- ஐந்து கட்சிகளின் கூட்டிணைவும் 13அம்சக் கோரிக்கைகளும் கோத்தாபயவின் வெற்றியில் செல்வாக்கினைக் கொண்டிருக்கின்றது என்று கருதுகின்றீர்களா?
பதில்:- முழுமையாக இல்லாது விட்டாலும் அவருடைய வெற்றியில் அந்த விடயம் உதவியாக இருந்திருக்கின்றது. அந்தக்கோரிக்கைகளை மையப்படுத்தி பிரசாரம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கும். எமது கோரிக்கைகளில் எந்த தவறும் இருக்கவில்லை.
கேள்வி:- சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அவரை ஆதரிப்பதாக கூட்டமைப்பு விடுத்த பகிரங்க அறிவிப்பு தென்னிலங்கையில் கணிசமான தாக்கத்தினை செலுத்தியிருக்கின்றதல்லவா?
பதில்:- நாங்கள் மிகவும் காலம் தாழ்த்தியே எமது அறிவிப்பினைச் செய்திருந்தோம். எமது அறிவிப்புக்கு முன்னதாகவே மக்கள் தீர்மானம் எடுத்துவிட்டார்கள். ஆகவே எமது அறிவிப்பின் பின்னர் மக்கள் தமது தீர்மானங்களை மாற்றியமைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை எடுத்து தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது என்ற விமர்சனம் தமிழ்த் தரப்புக்களிடத்திலிருந்து முன்வைக்கப்படுகின்றதல்லவா?
பதில்:- அவ்வாறான விமர்சனம் செய்யப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், எமது முடிவும் தமிழ் மக்களின் முடிவும் ஒன்றாகவே இருந்தது. அதில் இருவேறு நிலைப்பாடுகள் காணப்பட்டிருக்கவில்லை. நாம் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக தேர்தல் முடிவு வரவில்லை என்பதற்காக அது தவறு என்று கொள்ள முடியாது. மேலும் கோத்தாபயவுக்கு வாக்களிப்பதற்கான எந்தவொரு காரணங்களோ சூழ்நிலைகளோ அத்தருணத்தில் எழுந்திருக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேள்வி:- கோத்தாபய ராஜபக் ஷ ஆட்சியில் அமர்ந்தால் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற ஜனநாயக வெளி அற்றுப்போகும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அவரே ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளாரே?
பதில்:- கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்து போரை முடிவுக்கு கொண்டு வந்த காலப்பகுதியும், அவருடைய தேர்தல் பரப்புரை காலப்பகுதியும், ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரான தற்போதைய காலப்பகுதியும் வெ ள் வேறுபட்ட சூழல்களைக் கொண்டதாக இருக்கின்றன. ஆகவே அவரால் எடுத்த எடுப்பில் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது என்றே எதிர்பார்க்கின்றோம். எமது எதிர்பார்ப்பினையும் மீறி அவர் தனது சுயரூபத்தினைக் காண்பிக்க முயன்றால் விளைவுகளைத் தடுப்பதற்காக எமக்குள்ள சர்வதேச தொடர்புகளை அந்தந்த சந்தர்ப்பங்களின்போது உபயோகிப்போம். இந்தவிடயங்களை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பெருந்தேசியவாதமும், பௌத்த மத முன்னுரிமைப்படுத்தலும் தென்னிலங்கையில் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றிய கருத்தாடல்கள் சாத்தியமாகுமென்ற நம்பிக்கை உங்களுக்கு காணப்படுகின்றதா?
பதில்:- சிங்கள பெருந்தேசியவாதம், பௌத்த மதம் என்பவற்றுக்கு அப்பால் வலுவற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி, பொருளாதார நெருக்கடிகள், ஊழல்மோசடிகள், நடைமுறைச்சாத்தியமான விடயங்கள் முன்னெடுக்கப்படாமை போன்ற விடயங்களும் பெருமளவில் தாக்கத்தினைச் செலுத்தியுள்ளன. ஆட்சியில் இருக்கும் தரப்பு ஆதரவாக வாக்குகளைப் பெற்று தம்மைத் தக்கவைப்பதற்கு ஐ.தே.க திணறியிருந்தது.
கடந்த காலத்திலிருந்து ராஜபக் ஷ ஆட்சியும் இந்தக்காரணங்களை முன்னிலைப்படுத்தியே வீழ்த்தப்பட்டது. இவ்வாறான நிலையில் தற்போது பொதுஜன பெரமுன என்ற பெயரில் புதிய முகத்துடன் அந்தக்குழுவினர் மக்கள் ஆணையை கோரியிருந்தார்கள். அத்துடன் அவர்கள் முன்னிலைப்படுத்தியவர் காரியச் சித்தர் என்ற எண்ணப்பாடு தென்னிலங்கை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. இவ்வாறான விடயங்கள் தென்னிலங்கை மக்களின் மாற்றத்திற்கு வித்திட்டிருக்கலாம்.
கேள்வி:- கடந்த நான்கு ஆண்டுகளில் ஐ.தே.க தலைமையிலான ஆட்சிக்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தபோதும் அதனால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நலன்களும் கிடைக்கவில்லையென்றும் மாறாக பேரம்பேசும் சக்தியே மலினப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் கூட்டமைப்பு ஐ.தே.க சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு உங்களுடைய செல்வாக்கும் அதிகமாக இருந்ததாகவும் விமர்சிக்கப்படுகின்றதே?
பதில்:- 2015இல் ஜனநாயக பண்புகளைக் கொண்ட ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நாமும் உழைத்தவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு ஏற்படுத்திய ஆட்சிமாற்றத்தினை தக்கவைப்பதும் அதனூடாக எமது இலக்குகளை அடைய முயன்றமையும் எமக்கிருந்த பெரும் கடமையாகவே இருக்கின்றது. நாம் எதிர்பார்த்த இலக்குகளை அந்த ஆட்சி முழுமையாக செய்யவில்லை என்பதற்காக அந்த ஆட்சியாளர்களை அகற்றிவிட முடியாது. நாம் புதிய அரசியலமைப்பு உட்பட பல விடயங்களை முன்னெடுத்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அந்த விடயங்கள் முடிவுற்றிருக்காமையின் காரணமாகவே விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.
மேலும், நாம் அணுகுமுறை ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நடந்து கொண்டோம். தீர்மானங்களை எடுத்தோம் என்று கூறுவது தவறானதாகும். நாம் எமக்கு ஆணைவழங்கிய தமிழ் மக்கள் சார்ந்தே முடிவுகளை எடுத்து செயற்பட்டிருந்தோம். அந்த முடிவுகளும், அணுகுமுறைகளும் சில சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக இருந்திருக்கலாம்.
கேள்வி:- கோத்தாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த இனப்பிரச்சினை தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்கள் சம்பந்தமாக கூறப்பட்டிருக்காததன் காரணத்தினாலேயே கூட்டமைப்பு சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த விடயங்கள் குறித்து புதிய தலைவர் எவ்வளவு தூரம் கரிசனை கொள்வார் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்:- புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தாபயவின் மீது அத்தகைய நம்பிக்கை எமக்கு ஆரம்பத்திலேயே ஏற்படாமையின் காரணத்தினாலேயே அவருக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். தனியே சிங்கள, பௌத்த நிலைப்பாட்டினை முன்னிலைப்படுத்தி ஆட்சியை முன்னெடுப்பது என்பது அவர்களுக்கு சங்கடமான விடயமாகவே இருக்கும். ஆகவே அவர்களுடன் இந்த விடயங்களை கையாள்வதற்கு நாம் புதிய அணுகுமுறையொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கின்றோம்.
கேள்வி:- தற்போதைய பூகோளச் சூழலில் தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை எவ்வளவு தூரம் உயிர்ப்புடன் முன்நகர்த்த முடியும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- ஜனாதிபதியாக கோத்தாபய பதவியேற்றவுடன் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அனுப்பிய செய்தியில் பொறுப்புக்கூறல் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சிமாறினாலும் பொறுப்புக்கூறல் விடயங்கள் அகன்று போகாது. கடந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை வழங்கி கால இழுத்தடிப்பினைச் செய்தார்கள். தற்போதையவர்கள் விடயங்களை முன்னெடுக்க மாட்டோம் என்று முரண்டு பிடிப்பார்கள். அவ்வாறான சூழலில் ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்வதற்கு சர்வதேச சமூகம் இடமளித்துவிடாது.
கேள்வி:- வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலில் வெளிப்படுத்திய பிரதிபலிப்புக்களுக்கு மாறான விளைவு ஏற்பட்டுள்ளமையால் அவர்கள் அச்சமான சூழலில் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்பு என்ற வகையில் உங்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது?
பதில்:- மக்கள் அவ்வாறு அச்சமான சூழலுக்குள் இருக்க வேண்டியதில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் தமிழ் மக்களை பழிவாங்கும் போக்கிற்குச் செல்வார் என்று கூறமுடியாது. அதற்கு காலம் உள்ளது. அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவினதும், ஏனைய சர்வதேச நாடுகளினதும் அழுத்தங்களை அவர் மீது பிரயோகிப்போம். அந்த அழுத்தங்கள் அவரைச்சுற்றியிருக்கும் வரையில் வித்தியாசமான எந்த அணுகுமுறைகளையும் அவரால் கையாள முடியாது.
கேள்வி:- ரணில் விக்கிரமசிங்க சார்பானவர்கள் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு திரைமறைவில் செயற்பாட்டார்கள் என்ற விமர்சனம் ஐ.தே.க.வினுள் காணப்படுகின்ற நிலையில் கூட்டமைப்பும் ரணில் விக்கிரமசிங்க சார்ந்து செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்ப டுகின்றதல்லவா?
பதில்:- ரணில் விக்கிரமசிங்க சார்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் ரணில் விக்கிரமசிங்கவே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவார் என்றும் அதன் மூலம் அதிகளவு வாக்குகளைப் பெற முடியும் எனவும் அவர்களே தீர்மானித்தனர். இதனால் ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரம் வடக்கு கிழக்கிற்குள் முடக்கப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கில் சஜித் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளார். ஆகவே ரணிலுடன் கூட்டமைப்பு இணைந்து சஜித்தின் தோல்விக்காக செயற்பட்டது என்பது அபத்தமான குற்றச்சாட்டாகும்.
கேள்வி:- அமைச்சு பதவிகளை எடுப்பதற்குரிய முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்களா?
பதில்:- நாங்கள் புதிய ஆட்சியில் அமைச்சுப்பதவிகளை எடுக்கப்போவதாக தவறான தகவல்களே பிரசாரம் செய்யப்படுகின்றன. எம்மைப்பொறுத்தவரையில் அமைச்சுப்பதவிகளை பெறுவதில் கொள்கை சார்ந்த நிலைப்பாடே உள்ளது.
அதாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் வரையில் நாம் மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்பதே அதுவாகும். அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் இந்தக்கொள்கையில் நாம் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேனே தவிர, உடனடியாக அந்த மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றோ அல்லது புதிய ஆட்சியில் இணைவதென்றோ கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
(நேர்காணல் – ஆர்.ராம் )