ஷானி அபேசேகர தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார்! – கோத்தாபய

குற்றவியல் விசாரணை திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தன்னிச்சையாக புலனாய்வு அதிகாரிகளையும் கடற்படையின் கட்டளை அதிகாரிகளையும் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளார் என்று  சிறிலங்கா  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பெல்லன்வில தர்மரத்ன தேரருடனான சந்திப்பின் போதே சிறிலங்கா ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஷானி அபேசேகர அதிகாரிகளை கைது செய்து துன்புறுத்தி தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளார். ஷானி அபேசேகர இவ்வாறான கைதுகளை மேற்கொள்ளும் போது அரச சாரா நிறுவனங்கள் அவரை மனித உரிமைகள் காப்பாளராக பாராட்டியதுடன் அவ்வகையான சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. ஷானிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அரசு சாரா நிறுவனங்கள் எதிர்க்கின்றன.

அரச சாரா நிறுவனங்களின் நிலைப்பாடு சட்ட ஆட்சிக்கு ஒவ்வாததாக காணப்படுவதுடன் மக்கள் நாட்டை ஆள்வதற்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். பெரும்பாண்மையான மக்களின் ஆணைக்கு இணங்க நடவடிக்கை எடுக்க தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என சிறிலங்கா ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.