ஐ.தே.க. பிளவை நோக்கி நகர்கிறதா?

1994 ஆம் ஆண்டிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. இடைப்பட்ட காலத்தில் இரண்டு தடவைகள் கட்சியை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தது. எனினும் மூன்று வருடங்களில் அந்த ஆட்சியை இழந்தது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சி வந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அதிகாரத்துடன் இருந்தது. எனினும் இக்காலப்பகுதியலும் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அப்போது கிடைத்த சந்தர்ப்பமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து, புதிய ஜனாதிபதியும் புதிய பிரதமரும் பதவியேற்றுவிட்டனர். எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் என எதிர்பார்க்கப்படும் இடைக்கால அரசாங்கமும் அமைக்கப்பட்டுள்ளதுடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. பிரதமர் மஹிந்த தரப்பினர் தேர்தல் வெற்றிக்களிப்புடன் அதிகாரத்திற்கு வந்திருக்கின்றனர். மறுபுறம் ஐக்கிய தேசியக்கட்சி பாரிய நெருக்கடியை திர்நோக்கியிருக்கிறது.

தேர்தல் ஒன்று நடைபெற்று முடிந்தவுடன் ஒருதரப்பு தோல்வியடைவதும் மறுதரப்பு வெற்றியடைவதும் வழக்கம். அதன் பின்னர் வெற்றியடைந்த தரப்பு பலமடைவதும் தோல்வியடைந்த தரப்பு நெருக்கடியை எதிர் கொள்வதும் அரசியலில் வழமை தான். அந்தவகையிலேயே தற்போது வெற்றியடைந்த தரப்பு பலமடைந்துள்ளதுடன் தோல்வியடைந்த தரப்பு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது.

பிரதமர் மஹிந்த

ராஜபக்ஷ கடந்த 2015ஆம் ஆண்டு தோல்வியடைந்ததன் பின்னர் கடந்த நான்கரை வருடங்களாகவே பாரிய திட்டமிடல்களையும் அரசியல் வியூகங்களையும் அமைத்து காய்நகர்த்தல்களை மேற்கொண்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்.கடந்த நான்கரை வருடகாலத்தில் பிரதமர் மஹிந்த தரப்பு அரசியல் ரீதியில் கடும் நெருக்கடிகளை சந்தித்திருந்தது.

சுதந்திரக்கட்சி பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு கட்டத்திலும் எதிர்பார்ப்பை கைவிடாமல் தொடர் அரசியல் வியூகங்களை முன்னெடுத்த நிலையிலேயே தற்போது அதன் பலனை பெற்றிருக்கின்றார்.

மஹிந்த தரப்பினர் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருந்த வேளையிலும் கூட மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் வலுவான திட்டமிடல்களையும் வியூகங்களையும் அமைத்து வெற்றிக்கனியை ருசித்திருக்கின்றனர். இதனூடாக அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது யதார்த்தம். இவ்வாறு வெற்றிபெற்ற தரப்பினர் மகிழ்ச்சி களிப்பில் இருக்கின்ற சூழலில் மறுபுறம் ஐக்கிய தேசியக்கட்சியினர் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியினால் எங்கே ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாகப் பிளவடைந்துவிடுமோ என்ற அரசியல் நிலைமையும் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

தெளிவாகவே ஐக்கிய தேசியக்கட்சியானது பாரிய நெருக்கடியை சந்தித்திருக்கின்றது என்பது வெளிப்படை. எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு ரணில் தரப்பினரும் சஜித் தரப்பினரும் சபாநாயகரிடம் உரிமை கோரியுள்ளதிலிருந்தே இந்த விடயம் உறுதியாகிறது. எனவே ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் பாரிய நெருக்கடிக்குட்பட்டிருக்கின்றது. எனவே கட்சிக்குள் என்ன நடந்தது என்பது தொடர்பாக அண்மைய கால வரலாற்றை ஆராயவேண்டியது அவசியமாகின்றது.

சறுக்கல் ஆரம்பம்

1994 ஆம் ஆண்டிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களில் தோல்வியையே சந்தித்து வருகின்றது. எனினும் 2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இரண்டு வருடங்கள் ஆட்சி அமைத்திருந்தது. அதனையும் தக்கவைக்க முடியாமல் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரிகா-–ஜே.வி.பி. கூட்டை எதிர்த்தும் தோல்வியடைந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக்கட்சி தேர்தல்களில் தோல்வியையே சந்தித்து வந்தது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அந்தத் தேர்தலிலும் சிறிய வாக்கு வித்தியாசத்தில் அவர்தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஒரு புது வியூகத்தை அமைத்தது. மறுபுறம் யுத்தத்தை வெற்றிகொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ களத்தில் இறங்கினார். எனினும் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டார். ஆனால் அந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது.

சிறிகொத்தா வேலி உடைப்பு

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு சஜித் தரப்பினர் கட்சி தலை மையை பெறும்வகையில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். சஜித் பிரேமதாசவுடன் அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பல உறுப்பினர்கள் இணைந்து சஜித்தை தலைவராக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2011ஆம் ஆண்டு கட்சித் தலைவருக்கான வாக்கெடுப்பு சிறிகொத்தாவில் நடைபெற்ற போது சஜித் ஆதரவாளர்கள் வேலியை உடைத்துக்கொண்டு தலைமையகத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டனர். எனினும் அந்த வாக்கெடுப்பிலும் ரணில் விக்ரமசிங்கவே கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் சஜித் பிரேமதாசவும் இந்த விடயத்தில் அமைதியுடன் இருந்தார்.

இந்தச் சூழலிலேயே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்போது ரணில் விக்ரமசிங்க 2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட அரசியல் வியூகத்தை 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் பிரயோகித்தார். இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் சுதந்திரக்கட்சியிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டார். இது பாரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

எனினும் அப்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் பிரேமதாசவை களமிறக்கலாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை. இறுதியில் சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியில் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்டார்.

சஜித் பிரேமதாசவை அப்போது வேட்பாளராக அறிவிக்காததன் காரணமாகவே தான்கட்சியை விட்டு வெளியேறுவதாக அப்போதைய ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க கூறியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எப்படியிருப்பினும் அந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று ஐக்கியதேசியக்கட்சி ஆட்சியமைத்தது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றதையடுத்து பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு திருப்புமுனை

அதன் பின்னர் ஆட்சியிலிருந்தமை யினால் ஐக்கிய தேசியக்கட்சியின் நெருக்கடிகள் பெரிதாக வெளியில் வரவில்லை. எனினும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படவேண்டும் என்று அவ்வப்போது ஒரு சில குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. இதற்கிடையில் 2018ஆம் ஆண்டு நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்கவிற்கு உறுதுணையாக இருந்தார். அதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சஜித் பிரேமதாசவை பிரதமராக பதவியேற்றுகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியபோதிலும் அவர் அதனை மறுத்திருந்தார்.

சஜித்தின் மறுபிரவேசம்

இந்த நிலையில் அரசியல் நெருக்கடி ஓய்வடைந்ததன் பின்னர் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகங்கள் இரண்டு தரப்பினராலும் அமைக்கப்பட்டன. மஹிந்த தரப்பை பொறுத்தவரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை களமிறக்கும் வியூகங்கள் கடந்த இரண்டு வருடங்களாகவே முன்னெடுக்கப்பட்டன. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒரு இழுபறி நிலைமை தொடர்ந்து வந்தது. எனினும் கடந்த ஜூன் மாதமளவிலிருந்து சஜித் பிரேமதாச, தான் நிச்சயமாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்ததுடன் அதற்கான வியூகங்களையும் வகுக்க ஆரம்பித்தார்.

இதன்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ரணில் தரப்பில் இருந்த மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம் ஆகியோர் திடீரென சஜித் பிரேமதாசவை ஆதரிக்க ஆரம்பித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரணில் விக்ரமசிங்க கூட்டுக்கட்சிகளை வைத்து வியூகங்களை வகுத்தார்.

எனினும் ஒரு கட்டத்தில் கூட்டுக்கட்சிகளும் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்று வலியுறுத்தியதையடுத்து ரணில் விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனையடுத்து சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக கள மிறங்கினார்.

சஜித் களமிறக்கப்பட்டதும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஓர் உத்வேகம் ஏற்பட்டது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டினார். இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தரப்பினர் தோல்வியடைந்ததையடுத்து கட்சிக்குள் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

மீண்டும் சறுக்கல்

சஜித் தரப்பினர் ரணில் தரப்பினரை குற்றம்சாட்டுவதும் ரணில் தரப்பினர் சஜித் தரப்பினரை குற்றம்சாட்டுவதும் மாறிமாறி இடம்பெற்றன. பரஸ்பரம் இரண்டு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, ”ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அவருக்கு வழங்கமுடியாது. அவற்றுக்கு உடன்படாவிட்டால் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மாற்று அணியொன்றைத் திரட்டி, புதிய கட்சியை ஆரம்பித்து, எமது அரசியல் பயணத்தின் மற்றொரு அத்தியாயத்தை ஆரம்பிப்போம். அதனை தவிர எமக்கு வேறு தெரிவுகள் இல்லை” என்று அறிவித்திருந்தார்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா, நளின் பண்டார, மனுஷ நாணயக்கார ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் பதவியும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஐக்கிய தேசியக்கட்சி பிளவடைய ஆரம்பிப்பதை புடம்போட்டுக் காட்டிவந்தன.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு போட்டி

இதன் உச்சக்கட்டமாக கடந்த வியாழக்கிழமை அரங்கேரிய விடயத்தை குறிப்பிடலாம். கடந்த வியாழக்கிழமை ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். அடுத்து யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குமாறு கடிதம் அனுப்பினார்.

அதே சந்தர்ப்பத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மற்றொரு சம்பவம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கே வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெேரராவும் சுமார் 40க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் கையெழுத்துடன் கடிதமொன்றை சபாநாயகருக்கு அனுப்பினார்.

இதனையடுத்தே கட்சிக்குள் இரண்டு பிரிவுகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது நெருக்கடி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அடுத்த பாராளுமன்ற அமர்வில் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிக்கவிருக்கிறார். பெரும்பாலும் சபாநாயகர் கட்சியின் உத்தியோகபூர்வ செயலாளரின் கடிதத்தையே கருத்திற்கொள்வார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கட்சித் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வழங்காவிடின் ஐ.தே.க.வை விட்டு வெளியேறி புதிய கட்சி அமைப்பதாக சஜித் தரப்பினர் கூறிவருகின்றனர். அதேபோன்று ரணில் தரப்பினரும் கட்சித் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் நெருக்கடி விஸ்வரூபம் எடுத்ததாகவே தெரிகிறது. பிரதான தேர்தல் ஒன்று நடைபெற்று முடிந்தவுடன் அந்தத் தேர்தலில் தோல்வியடையும் கட்சிக்குள் பாரிய நெருக்கடிகள் ஏற்படுவது வழமை. அதன் காரணமாக பிளவுகளும் ஏற்படும் அபாயம் தோன்றும்.

அதனடிப்படையிலேயே தற்போது ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் கட்சியின் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கட்சியின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து அடுத்தகட்டம் நோக்கி பயணிக்கவேண்டியது அவசியம்.

கடந்த 1994 ஆம் ஆண்டிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடி களைச் சந்தித்து வருகின்றது. இடைப்பட்ட காலத்தில் இரண்டு தடவைகள் கட்சியை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தது.

எனினும் மூன்று வருடங்களில் அந்த ஆட்சியை இழந்தது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சி வந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அதிகாரத்துடன் இருந்தது. எனினும் இக்காலப்பகுதியிலும் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அப்போது கிடைத்த சந்தர்ப்பமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றே தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தெரிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே சுதந்திரத்துக்கு பின்னர் இந்த நாட்டில் பல கூட்டணிகளை அமைத்து நாட்டை ஆண்டு வந்துள்ளன. ஆனால் இம்முறை இந்த இரண்டு பிரதான கட்சிகளுமே தேர்தலில் போட்டியிடவில்லை. எப்படியிருப்பினும் இன்னும் மூன்று மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதில் ஐக்கிய தேசியக் கட்சி தன்னை எவ்வாறு தயார்ப்படுத்துகின்றது என்பதனை பார்க்கலாம். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாறியதும் படிப்படியாக சுதந்திரக் கட்சி நெருக்கடியைச் சந்தித்தது. தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சி பிளவடையும் நிலையை அடைந்துள்ளதாகவே தெரிகின்றது.

ரொபட் அன்டனி