வாசுதேவவா? மைத்திரியா?

சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ, கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் நியமித்ததுடன், (15) வெள்ளிக்கிழமை 16 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கமொன்றையும் அமைத்திருந்தார்.    ஐ.தே.மு. வின் அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவராக சபாநாயகர் கருஜயசூரிய உள்ள நிலையில், புதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, புதிய சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் நம்பகரமாகத் தெரியவருகிறது.   எவ்வாறாயினும், பாராளுமன்றம் கூட்டப்படும்போது இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகுமெனவும் அறிய முடிகிறது.