எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினுள் தொடர்ந்தும் இழுபறியான நிலைமை நீடிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அணியினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு முன்மொழிந்து கடிதம் அனுப்பியுள்ள நிலையில் 45 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் சஜித் பிரேமதாஸவின் பெயரை அப்பதவிக்கு முன்மொழிந்து கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் அதன் செயலாளரால் முன்மொழியப்படுபவரே எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்படுவார். அவ்வாறான நிலையில் கட்சியின் தலைவர் என்ற வகையிலும், செயலாளரால் முன்மொழியப்பட்டுள்ளவர் என்ற வகையிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.
எனினும் முன்னைய சந்தர்ப்பத்தில் அநுர பண்டரநாயக்க அவர் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் சார்பில் அதிகளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தமையின் காரணத்தினாலேயே எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆகவே பாராளுமன்ற வரலாற்றில் அதிகளவு உறுப்பினர்களின் விருப்பிற்கு அமைவாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள முன்னுதாரணத்தினையும், ஹன்சாட் சான்றுகளையும் முன்னிலைப்படுத்தி சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று அழுத்தமளிப்பதற்கு அவரது அணியினர் திட்டமிட்டு வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இவ்வாறு ஏட்டிக்குப்போட்டியான நிலைமைகள் ஏற்பட்டுள்ள நிலையில் ,நாளை திங்கட்கிழமை ரணில், சஜித் அணியினர் தனித்தனியாக அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கூடி ஆராயவுள்ளதாக இருதரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க, சஜித் அணியினரின் கடந்த கால பாராளுமன்ற முன்னுதாரணத்தினை முன்னிலைப்படுத்தும் திட்டத்தினை அறிந்துகொண்டுள்ள நிலையில் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள்கொண்டு வருவதற்கு பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து தனக்கு நெருங்கிய தரப்பினருடன் ஆலோசித்துள்ளதாக அறிய முடிகின்றது.
சஜித் அணியினர் கட்டுக்குள் அடங்காது கட்சியைப் பிளவுபடுத்தும் எல்லைக்குச் செல்வார்களாயின், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சபாநாயகர் பதவியிலிருக்கும் கரு ஜயசூரியவை அப்பதவியிலிருந்து விலகச் செய்து ஐ.தே.க.வின் தலைமைப்பதவியை வழங்குவது பற்றியும் ஆராய்ந்திருக்கின்றார்.
அத்துடன் தற்போது வெற்றிடமாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர், தவிசாளர், தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளும் திரைமறைவில் எடுக்கப்பட்டுள்ளன.
இப்பதவிகளுக்கு நவீன் திஸாநாயக்க, தயா கமகே, ருவான் விஜேவர்த்தன போன்றவர்களை நியமிப்பது பற்றியும், சிறுபான்மை சமூகத்தினைச் சேர்ந்த ஒருவரை உள்ளீர்ப்பது பற்றியும் சிந்தித்து வருவதாகவும் மேலும் அறிய முடிகின்றது.