தியாகி திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவுநாள் கலைமாலை நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேர்னில் கடந்த 29ம் திகதி உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
விக்டோரிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கொடியேற்றல் நிகழ்வுடன் மாலை ஆறு மணிக்குத் தொடங்கியது. பின்னர் ஈகச்சுடரேற்றலும் மலர் வணக்கமும் இடம்பெற்றது.
மலர் வணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் வணக்கப் பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. பாடலுக்கான நடனத்தை சுதர்சனன் அவர்கள் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து “தியாகச்சுடர் திலீபன்” என்ற காணொளி காண்பிக்கப்பட்டது. “தியாகி திலீபனின் கோரிக்கைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன, மக்கள் புரட்சி வெடிக்கட்டுமென்ற அவரின் கனவின் வெளிப்பாடுதான் அண்மையில் நிகழ்ந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்களின் பேராதரவு வெளிப்பாடு என்பது.
தாயக மக்களின் இந்த உறுதியான விடுதலை அவாவை வலுப்படுத்தும் விதமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து இக்காணொளி அமைந்திருந்தது.
அடுத்த நிகழ்வாக தாயகத்தில் நிகழ்ந்த மாகாணசபைத் தேர்தலை மையமாக வைத்து ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாகாணசபைத் தேர்தல் பெறுபேறுகள் மூலம் தமிழ் மக்கள் சாதித்தவை என்ன, எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்ற தலைப்புக்களில் முறையே தெய்வீகன், வசந்தன் ஆகியோர் கலந்துரையாடலை நிகழ்த்தினர்.
இறுதியில் இந்தப் பெறுபேறுகள் புலம்பெயர்ந்த மக்களுக்குக் கூறி நிற்கும் செய்தி என்ன என்ற கருப்பொருளில் முடிவுரை நிகழ்த்தப்பட்டது.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து சுதர்சனனின் நெறியாள்கையில் ஒரு நாட்டிய நடனம் நிகழ்ந்தது. தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கை அன்னியரால் கலவரப்படுத்தப்படுவதும், அடக்குமுறைக்கெதிரான போராட்டம் வெடிப்பதும், வீழ்வதும் எழுவதுமாகத் தொடரும் போராட்டம் இறுதி இலக்குவரை தொடர்ந்து இறுதி வெற்றியைப் பெறுவது என்ற கருப்பொருளில் இந்நாட்டிய நடனம் இடம்பெற்றது. இதில் சுதர்சனனோடு இணைந்து சுயன் நாட்டியத்தில் பங்கேற்றிருந்தார்.
நாட்டிய நிகழ்வின் பின்னர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் கரன் அவர்களின் உரை இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகளின் நிலை என்ன, அவர்கள் தொடர்பில் தமிழ்ச் சமூகத்தின் செயற்பாடு எந்தளவில் உள்ளது என்பன தொடர்பில் அமைந்த இந்த உரை, “அகதிகள் விவகாரமென்பது தமிழ்ச் சமூகம் கவனம் எடுத்துச் செயற்பட வேண்டிய வேலைத்திட்டம் எனவும் நாங்கள் ஏன் எமது நாட்டில் இருந்து வெளியேறினோம் என்ற நியாயத்தை மற்றைய சமூகங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்ற கருத்து இவ்வுரையில் இடம்பெற்றது.
கரன் அவர்களின் உரையைத் தொடர்ந்து கொடியிறக்கல் நிகழ்வு இடம்பெற்றது. இறுதியாக உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.
Eelamurasu Australia Online News Portal



