விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் நாயகியாக நடித்துள்ள பனிடா சந்து, தனது காதலன் அப்படி இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ’ஆதித்ய வர்மா’. ஈ4 எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம், தனது மகன் துருவ்வை நாயகனாக அறிமுகம் செய்கிறார். ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசாய்யா ’ஆதித்ய வர்மா’வின் இயக்குநரானார். ’அக்டோபர்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பனிடா சாந்து என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.
வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தின் காதலை போல நிஜத்தில் நடக்குமா என்ற கேள்விக்கு பதில் சொன்ன நாயகி பனிடா சாந்து, “என்னால் பொதுவாகப் பேச முடியாது. ஆனால் இதுபோன்ற ஒரு காதல் என் வாழ்க்கையில் இருக்க நான் விரும்பவில்லை. ஆதித்ய வர்மா மோசமானவன், குறைகள் இருப்பவன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற காதல் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

சினிமா என்பது இது போன்ற கதைகளைச் சொல்லத்தான். ஆனால் அதை வெறுமனே காட்டுவதற்கும், போற்றுவதற்கும் மெல்லிய வித்தியாசம் உள்ளது. நாங்கள் போற்றவில்லை என்று நம்புகிறேன். இதுவரை நான் பார்த்ததை வைத்துச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் சரியாகவே எடுத்திருக்கிறோம். நாயகனின் கோபத்தாலும், நடத்தையாலும் வரும் வலி, வேதனையைக் காட்டியிருக்கிறோமே தவிர, இதோ பாருங்கள், கோபமான இளைஞர் பைக் ஓட்டிச் செல்கிறான் என்பது போலக் காட்டவில்லை” என்று கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal