உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்காதான் தொடர்ந்து அறிவித்தும் நியமித்தும் வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இப்பதவிக்கான போட்டியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ந்கோஸி ஓக்கோஞோ-ல்வேலா என்பவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங் கிம் கடந்த 1-7-2012 அன்று பொறுப்பேற்றார். உலக வங்கியின் 12-வது தலைவராக பொறுப்பு வகித்துவரும் இவரது நான்காண்டு பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த நான்காண்டுகளுக்கும் இவரையே உலக வங்கியின் தலைவராக நியமிப்பதாக அமெரிக்கா தீர்மானித்தது.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் நிதித்துறை மற்றும் கருவூல செயலாளர் ஜேக்கல் லியூ வெளியிட்ட அறிக்கையில், ’உலக வங்கியின் தலைவராக தனது பதவிக்காலத்தில் தற்போது உலகை அச்சுறுத்தும் பல்வேறு சவால்களை திறம்பட சமாளித்தும், ஏழ்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கவும் தனது முதலாம் பதவிக்காலத்தில் சிறப்பாக செயலாற்றிய ஜிம் யாங் கிம்-ஐ மீண்டும் இப்பதவியில் நியமிப்பதன் மூலம் உலக வங்கி மேற்கொண்டுவந்த முக்கிய முன்முயற்சிகளையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்ற முடியும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பையடுத்து, இந்த முறை ஜிம் யாங் கிம்-ஐ எதிர்த்து போட்டியிட யாரும் முன்வராததால் உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் தலைமை பதவிக்கு ஆற்றல்மிக்க ஒருவர் தலைவராக வரவேண்டும் என இவ்வங்கியை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பணியாளர்கள் கருதிவரும் நிலையில், வரும் 2030-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிப்பது என்ற திட்டத்துடன் செயலாற்றிவரும் ஜிம் யாங் கிம், தனது பதவிக்காலத்தில் வங்கியின் நிர்வாக செலவினங்களில் சுமார் 40 கோடி டாலர் அளவில் மிச்சப்படுத்தியுள்ளதாக உலக வங்கியின் இயக்குனர்கள் குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal