செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா எனும் மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது செவ்வாய். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.
செவ்வாய் கிரகத்தை பற்றி வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பி கிரகத்தில் உள்ள தட்பவெப்ப நிலை, நீர், வாயுக்கள் மற்றும் புவியியல் பண்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றன.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் அமெரிக்கா, சோவியத் யூனியன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே வெற்றி கண்டுள்ளன. அதிலும் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் மட்டுமே தங்களது விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்குள் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன.
தற்போது அறிவியலாளர்கள் மேற்கொள்ளும் முயற்சி செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பதே. செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா ரஷியா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்தை வாழ்விடமாக்கும் திட்டங்கள் உள்ளதாக அறிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தை சுற்றும் ரோவர் மூலம் பூச்சிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பூச்சியியல் ஆய்வாளர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாள்பட்ட மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முற்பட்டால் முதல் பிரச்சினையாக இருப்பது சுகாதார குறைபாடுகள் தான். இவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், உலோகம், பிளாஸ்டிக் மற்றும் மனித தோல் வழியாக பயணிக்கும் திறன் கொண்ட அதிக அளவு கதிர்வீச்சு. அது புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.

புற்றுநோய்க்கு கதிர்வீச்சின் மூலம் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த டிம்னெசியா நோய் பாதிப்பு இருப்பதாக அமெரிக்க மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிமென்சியா என்பது மூளை நோய்கள் அல்லது பிற காயத்தால் ஏற்படும் மன செயல்முறைகளின் நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான கோளாறு ஆகும். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு இந்த செய்தி சாதகமானது அல்ல என கலிபோர்னியா மருத்துவ பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் பேராசிரியர் கூறியுள்ளார்.
பூமியின் இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில், செவ்வாய் கிரகத்தில் வாழமுடியுமா என ஆராய்வது மனித இனத்தின் முன்னேற்றமா அல்லது முட்டாள்தனமா என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் இயற்கை ஆர்வலர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்க இயலவில்லை.
Eelamurasu Australia Online News Portal