உலகில் முதன் முறையாக 3 பெற்றோர் இணைந்து உருவாக்கிய குழந்தை

உலகில் முதல் முறையாக 3 பெற்றோர் இணைந்து ஊருவாக்கிய குழந்தை மெக்சிகோவில் பிறந்தது.

பொதுவாக ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை என 2 பேர் பெற்றோராக உள்ளனர். ஆனால் தற்போது 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பெற்றோர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர்.

சிலருக்கு மரபணு (ஜீன்ஸ்) குறைபாடு காரணமாக குழந்தைகள் பிறப்பதில்லை. அப்படி உருவானாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது. தப்பி தவறி பிறந்தாலும் ஒரு விதமான வினோத நோயினால் பிறந்த குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இக்குறைபாட்டை போக்கவே 3 பெற்றோர் மூலம் கருத்தரிக்க செய்து ஒரு குழந்தை உருவாக்கப்படுகிறது.

அனைவரது உடலிலும் உள்ள செல்களில் மைட்டோ காண்ட்ரியாக்கள் உள்ளன. இவை ஒருசெல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு உணவை சக்தியாக மாற்றி எடுத்து செல்கின்றன. ஆனால் சில பெண்களுக்கு அந்த மைட்டோ காண்ட்ரியாக்களில் மரபணு குறைபாடுகள் உள்ளன.

அதனால் தான் குழந்தைகள் பிறப்பு தடுக்கப்படுகிறது. அதை போக்க நல்ல உடல் நலத்துடன் கூடிய மற்றொரு பெண்ணின் மைட்டோ காண்ட்ரியாவை கருவுற்ற பெண்ணின் கருமுட்டையுடன் இணைக்கின்றனர். அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் மரபணு நோயில் இருந்து காக்கப்படுகின்றன.

இது போன்ற குழந்தை சமீபத்தில் பிறந்துள்ளது. ஜோர்டானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்தது. அவருக்கு நல்ல உடல் நலத்துடன் கூடிய பெண்ணிடம் இருந்த மைட்டோ காண்ட்ரியா தானமாக பெற்று ஜோர்டான் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது.

பின்னர் ஜோர்டான் பெண்ணின் கணவர் விந்தணு கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு கருத்தரிக்கப்பட்டது. அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அது 5 மாத குழந்தையாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

இந்த முயற்சியில் அமெரிக்க டாக்டர்கள் குழு ஈடுபட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை மெக்சிகோவுக்கு வரவழைத்து உலகில் முதல்முறையாக 3 பெற்றோர் இணைந்து பெற்றெடுத்த குழந்தையை உருவாக்கியுள்ளனர். ஏனெனில் மெக்சிகோவில் இது போன்ற குழந்தை பெற தடை சட்டம் எதுவும்இல்லை.