கார்த்திகைப் பூச்சூடி மரநடுகைமாத மலர்க்கண்காட்சி!

வடக்கு மாகாண சபையின் பிரகடனத்துக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (20.11.2019) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்க் கண்காட்சி கார்த்திகைப் பூச்சூடி விருந்தினர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணியின் தலைவர் த.யுகேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம் மலர்க்கண்காட்சித் தொடக்க விழாவில் பிரதம விருந்தினராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா அவர்களும், கௌரவ விருந்தினராகத் தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந் நிகழ்ச்சியில் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்களும், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஐயசூரிய அவர்களும் சிறப்புரைகளை ஆற்றியிருந்தனர்.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்த இவ்விழாவில் தொன்மம் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியும் நீர்வை பொன்சக்தி கலாகேந்திரா நிறுவனத்தின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இவ் விழாவில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழுகின்ற 50 மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கின் தாவர உற்பத்தியாளர்கள் காட்சிக் கூடங்களை அமைத்துள்ள இம் மலர்க்கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும், கண்காட்சியைப் பார்வையிட வருகின்ற மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி வைக்கப்படுமெனவும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.