அண்மையில், பப்பு நியூ கினியாவில் ஆஸ்திரேலியாவின் நித உதவியுடன் உருவாக்கப்பட்ட Bomana குடிவரவுத்தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 50 தஞ்சக்கோரிக்கையாளர்கள், தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டிருந்தால் மேலும் பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார் குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து சமீபத்தில் வெளியேறிய இவர், கடந்த 6 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு சென்றடைந்திருக்கிறார்.
“தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையான அழுத்தத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பப்பு நியூ கினியாவில் தஞ்சம் கோர மறுப்பதால் அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். அதனால் தான் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பலர் பட்டினி கிடக்கின்றனர். சாப்பிடாமல் இருப்பதால் பலருக்கு உடல் எடை குறைந்திருப்பதாக அறிகிறேன். இந்த நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டிருந்தால் பலர் உயிரிழிக்கக்கூடும்,” என கவலை தெரிவித்துள்ளார் பூச்சானி.
கடந்த 2013 முதல் இவ்வாறு 8 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்கள் ‘ஒரு போதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ எனக் கூறி வரும் அந்நாட்டு அரசு, 2013 காலக்கட்டத்தில் அவ்வாறு வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை கடல் கடந்த் தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தியுள்ளது.
“தஞ்சக்கோரிக்கையாளர்கள் தானாக முன்வந்து வெளியேற ஒப்புக்கொள்ள வைக்க இப்படி கொடூரமான நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்,” என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆஸ்திரேலிய இயக்குனர் எலைனி பியர்சன்.
இந்த சூழலில், இம்முகாமில் வைக்கப்பட்டிருந்த 6 பேர் நாடு திரும்ப ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
வழக்கறிஞர்களோடும் குடும்பத்தினரோடும் பேச தஞ்சக்கோரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள பியர்சன், இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டிருப்பத்ஹு பப்பு நியூ கினியா சட்டத்திற்கும் சர்வதேச சட்டத்திற்கும் புறம்பானது எனக் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal