பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், புதிய கட்சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பதவியில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் புதிய முக பிரவேசமானது நாட்டைப் புதியதோர் அரசியல் நெறியில் வழிநடத்திச் செல்வதற்கு வழிவகுக்குமா என்பது பலருடைய ஆர்வமிக்க கேள்வியாக உள்ளது.
ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய அரசியல் பின்னணியைக் கொண்டவரல்ல. பாராளுமன்ற அரசியலில் அனுபவமுடையவருமல்ல. யுத்தச் செயற்பாட்டுப் பின்னணியைக் கொண்டதோர் அதிகார பலமுள்ள சிவில் அதிகாரியாகவே அவர் பிரபலம் பெற்றிருந்தார்.
ஒரு சிப்பாயாக இராணுவத்தில் பிரவேசித்து போர்க்கள அனுபவத்தின் பின்பே அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். முடிவின்றி தொடர்ந்த யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகச் செயலிழக்கச் செய்ய வேண்டும் அல்லது முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தீவிரப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மஹிந்த ராஜபக் ஷவுக்குத் தோளோடு தோள் கொடுத்து கோத்தபாய ராஜபக் ஷ உறுதுணையாகச் செயற்பட்டிருந்தார். சுதந்திரமாக முடிவெடுத்துச் செயற்படுவதற்கு அவருடைய மூத்த ஜனாதிபதியின் கூடப்பிறந்த சகோதரர் என்ற குடும்ப உறவு முறை அவருக்குப் பேருதவி புரிந்திருந்தது. சகோதரர்களின் எதிர்பார்ப்புக்கமைய வெற்றிகரமாக யுத்தம் முடிவடைந்தது.
யுத்தத்தில் கிடைத்த வெற்றி ஜனாதிபதி ராஜபக் ஷவை மட்டுமல்லாமல் அவருடைய சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு அரசியலில் ஒரு மேன்மை நிலைமையை அளித்திருந்தது.
யுத்த வெற்றியையே தனது அரசியல் மூலதனமாகப் பயன்படுத்திய மஹிந்த ராஜபக் ஷ மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்காக மேற்கொண்ட பேராசைமிக்க முயற்சி 2015 ஆம் ஆண்டு அவரைத் தோல்வியடையச் செய்திருந்தது. அரசியலில் அவரைப் பின்னடையவும் செய்துவிட்டது.
சர்வாதிகாரப் போக்கிற்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையிலான போராட்ட களமாகவே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும், பொதுத்தேர்தலும் அமைந்திருந்தன. இந்த அரசியல் போராட்டத்தில் ரணில்–- சந்திரிகா மற்றும் சம்பந்தன் இணைந்த கூட்டு அமைப்பு வெற்றியைத் தட்டிக்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேன –மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஜனாதிபதியாகத் தெரிவாகினார்.
அவப்பெயருக்கு ஆளாகிய அரசாங்கம்
வெல்லமுடியாத யுத்தமாகக் கருதப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்று அரசியலில் உச்சத்தை எட்டியிருந்த மஹிந்த ராஜபக் ஷ குழுவினர் இந்தத் தேர்தல் தோல்வியில் முதலில் துவண்டுபோனார்கள். இருப்பினும் அந்த அரசியல் சோர்வில் அவர்கள் தொடர்ந்து ஆழ்ந்து போயிருக்கவில்லை. மீண்டும் ஆட்சியைப் பிடித்து அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற உத்வேகத்துடன் வியூகங்களை வகுத்துச் செயற்படத் தொடங்கினர்.
முன்னர் 2010ஆம் தேர்தலிலும், பின்னர் 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் தமிழ் மக்கள் தங்களுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர் என்ற அரசியல் யதார்த்தத்தை அவர்கள் மிகத் தீவிரமாகக் கவனத்திற் கொண்டிருந்தார்கள்.
இனப்பிரச்சினைக்கு எதிர்ப்பரசியல் வழிமூலமாக அழுத்தத்தைப் பிரயோகித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்ட தமிழ்த்தேசியத்தை அவர்கள் ஏற்கத்தயாராக இல்லை. தனித்தாயகத் தேசியக் கொள்கையை எதிர்கொள்வதற்கு சிங்கள பௌத்த தேசிய கொள்கையையே அவர்கள் தீவிரமாகக் கையில் எடுத்தார்கள். ஓர் உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது. அதுபோலவே இந்த இரண்டு தேசியங்கள் இந்த நாட்டில் இருக்க முடியாது என்பதே அவர்களுடைய தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு.
அது மட்டுமல்லாமல் தொடர்ந்து எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு தங்களை அரசியல் ரீதியாகப் புறந்தள்ளி வருகின்ற சிறுபான்மை இன மக்களின் ஆதரவின்றி சிங்கள மக்களுடைய ஒத்துழைப்பை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அரசியல் வியூகத்தை வகுத்து அதற்கமைய அவர்கள் செயற்படத் தொடங்கினார்கள்.
இந்த நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகவே சமஷ்டி ஆட்சி முறையைப் புறந்தள்ளி ஒற்றையாட்சி முறையிலிருந்து வழுவிச் செல்ல முடியாது என்பதில் அவர்கள் தமது அரசியல் பிடிவாதத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். அந்த நிலையிலிருந்து அவர்கள் ஒருபோதுமே பின்வாங்கவில்லை. மாறாக அதில் மேலும் மேலும் பற்றுறுதியுடனேயே செயற்பட்டு வருவதைக் காண முடிகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கம் தனது தேர்தல் கால வாக்குறுதிகளைக் கைவிட்டு தங்களுக்குள்ளான அதிகாரப் போட்டியிலேயே அதிக கவனத்தைக் குவித்திருந்தனர். முன்னைய ஆட்சிக்காலத்து ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய புதிய அரசாங்கமே மோசமான ஊழல்களிலும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி என்ற குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளாகியது.
சிறுபான்மை இன மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தவர்கள் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை. அவர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுமில்லை. இதனால் நல்லாட்சி அரசாங்கம் பொல்லாத ஆட்சி என்ற அவப்பெயரைச் சம்பாதிக்க வேண்டியதாயிற்று.
வரலாற்றிலேயே இல்லாத வகையில் நாட்டின் அதி உயர் சட்டமாகிய அரசிய லமைப்புச் சட்டத்துக்கு விரோதமான முறை யில் பிரதமரைப் பதவி நீக்கம், யாரைப் பெரும் பகையாளியாகக் கருதியிருந்தாரோ அவரையே புதிய பிரதமராக நியமித்து, பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலுக்கு உத்தரவிட்ட கைங்கரியத்தைச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தலைமையாகக் கொண்டிருந்த அரசு என்ற பெயரைத் தட்டிக்கொண்டதும் இந்த நல்லாட்சி அரசாங்கமே.
ஆட்சி மாற்ற அரசியல் வியூகத்திற்கு கிடைத்த உற்சாகம்
நல்லாட்சி அரசின் ஆளுமையற்ற போக் கும், சிறுபான்மை இனத்தவர்கள் பக்கம் சாய்ந்திருந்த அரசியல் நிலைப்பாடும் ராஜபக் ஷவினருடைய அரசியல் வியூகத்திற்கு வலுவூட்டுவனவாக அமைந்துவிட்டன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களும் அந்த வியூகத்திற்கு உரம் சேர்த்து உதவியிருந்தன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த அரசியல் ரீதியான நெருக்கத்தை, யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை அரசு மீள் உருவாக்கம் செய்கின்றது என்றும் இராணுவத்தினர் உயிர்த்தியாகம் செய்து அடைந்த இராணுவ வெற்றியைக் காட்டிக்கொடுத்து விடுதலைப்புலிகளின் கொள்கைகளுக்கு அரசு உயிரூட்டுகின்றது என்றும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பிரசாரத்தை ராஜபக் ஷக்கள் முன்னெடுத்திருந்தனர்.
உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் பற்றிய முன்னறிவித் தல் உளவுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் தவறியிருந்ததைத் தீவிரக் குற்றமாகச் சுட்டிக்காட்டி அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைகளைச் செய்திருந்தனர்.
அது மட்டுமல்லாமல், முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு அரசு துணைபோயிருந்தது என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் சிங்கள மக்களிடம் முன்வைத்திருந்தனர். ஏற்கனவே முஸ்லிம்கள் சிங்கள பௌத்த தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற மனப்பதிவு உருவாக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் பயங்கரவாதத்திற்கு அரசு துணைபோயுள்ளது என்ற குற்றச்சாட்டு அவர்களுடைய மனங்களில் அரச தரப்பினர் மீது ஆழமான வெறுப்புணர்வை வளர்ப்பதற்கு உதவியிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி என்ற பதவி வழியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இழந்திருந்த மஹிந்த ராஜபக் ஷக்கள் அந்தக் கட்சியில் செல்வாக்கு இழந்திருந்தனர். கட்சி அரசியலில் இழந்த செல்வாக்கை ஈடு செய்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக இடையில் உருவாக்கப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தி அதனையே புதியதோர் அரசியல் கட்சியாக உருவாக்கி அதன் ஊடாக சிங்கள மக்களின் ஆதரவை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பிரமாண அம்சத்தை உள்ளடக்கிய தமது அரசியல் வியூகங்களை ராஜபக் ஷக்கள் மிகக் கச்சிதமாகச் செயற்படுத்தியிருந்தனர்.
அடிமட்டத்திலான பிரதேச சபையிலி ருந்து மக்கள் மத்தியில் அவர்கள் மிகக் காத்திரமான பிரசாரச் செயற்பாடுகளை முன்னெடுத்து பொதுஜன பெரமுனவுக்கான ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பி இருந்தனர். அவர்களுடைய இனவாத அரசியல் பரப்புரைச் செயற்பாடுகளின் திறம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருந்தது.
அதிகாரத்திலிருந்த அரச தரப்பினர் அந் தத் தேர்தலில் மோசமான பின்னடைவை யும் தோல்வியையும் தழுவியிருந்தனர். பொதுஜன பெரமுன சிங்கள மக்கள் மத்தியில் புத்தெழுச்சியுடன் முகிழ்த்து எழுந்திருந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ராஜபக் ஷக்களின் அரசியல் வியூகச் செயற்பாடுகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருந்தது.
பாராளுமன்றத்திலிருந்து கிராமிய மட்டம் வரையிலான அரசியல் செயற்பாடுகள்
இதனையடுத்து அவர்கள் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தமது அரசியல் பிரசாரங்களை சிங்கள மக்கள் மத்தியில் அடிமட்டத்திலிருந்து நன்கு திட்டமிட்ட வகையில் தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். இந்த அரசியல் செயற்பாடே கைமேல் பலனாக கோத்தபாய ராஜபக் ஷவை ஜனாதிபதி தேர்தலில் 13 லட்சம் மேலதிக வாக்குகளினால் வெற்றி பெறுவதற்கு வழி வகுத்திருந்தது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, கோத்தபாயவின் வெற்றி குறித்து கருத்துரைத்த அவருடைய பெறாமகனும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக் ஷ வெளியிட்ட கருத்து இதனை உறுதி செய்வதாக உள்ளது. மக்கள் விரும்பும் ஆட்சி முறையை உருவாக்குவதற்கு பாராளுமன்றம் தொடக்கம் கிராமிய மட்டம் வரையில் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றி பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனத்திற்குரியது.
பொதுஜன பெரமுனவை வளர்த்தெடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களைக் கட்சி மாறச் செய்வதில் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளையே பாராளுமன்றத்திலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான எண்ணக் கருத்துக்கள் மட்டுமல்ல. முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு இயலாத ஆட்சியாளர்கள் என்ற மனப்பதிவையும் ஏற்படுத்தி சிங்கள மக்களைத் தம் பக்கம் திருப்புவதில் ராஜபக் ஷக்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆளுமையற்ற அரசியல் தலைமைகள் குறித்த பிரசாரமும் அவர்களுக்கு சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு வழிவகுத்திருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிகண்ட அரசியல் ருசியைத் தொடர்ந்து, அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தல், பொதுத் தேர்தல் என்பனவற்றிலும் இதேபாணியிலான பிரசார நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக ராஜபக் ஷக்கள் மேற்கொண்டு முன்னோக்கி நகர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இராணுவ தொழில்முறை சார்ந்த மனப்பாங்கைக் கொண்டுள்ள கோத்தபாய ராஜபக் ஷ கட்டுக்கோப்பான நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார் என திடமாக நம்பலாம். தீர்மானங்கள் மேற்கொள்வதில் தயக்கம் காட்டாத அவருடைய போக்கு ஜனாதிபதி என்ற நிலைப்பாட்டில் பல துணிகரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பேருதவியாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதேவேளை, பாதுகாப்பு அமைச்சராக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகிய அவர் அந்தப் பதவிக்குரிய அதிகாரங்கள் வெட்டிக்குறைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பானவர் என்ற ரீதியில் அவர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயங்கமாட்டார். அரசியல் விடயங்களை தனது மூத்த சகோதரராகிய மஹிந்த ராஜபக் ஷ பார்த்துக் கொள்வார் என்பதை ஏற்கனவே அவர் வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார்.
கோத்தாவின் கூற்றிலுள்ள மறைபொருள்
சிங்கள மக்களே தனது வெற்றிக்குக் காரணமாக இருந்தார்கள் என்பதைத் தனது பதவியேற்பு நிகழ்வின்போது சுட்டிக்காட்டிய அவர், வடக்கு–கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறுபான்மை இன மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார். அதேவேளை அதற்காக அவர்களைத்தான் ஒதுக்கிவிடப்போவதில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் பங்களிப்பு தனக்குக் கிடைக்க வேண்டும் என விரும்பியிருந்ததாகவும், ஆனால் அது கிடைக்கவில்லை என்பதையும் எடுத்துரைத்து, நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு சிறுபான்மை இன மக்கள் தங்களுடன் இணைந்து பங்களிப்புச் செய்ய முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுப் பிரச்சினை குறித்தோ, முஸ்லிம் மக்களின் மத ரீதியான பாதுகாப்பு குறித்தோ அவர் மறந்தும்கூட தனது பதவியேற்பு வைபவ உரையில் எதனையும் குறிப்பிடவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது அரசியல் பிரச்சினையாக இருப்பதனால், அரசியல் விவகாரங்களைக் கவனிக்கவுள்ள மஹிந்த ராஜபக் ஷ அதைப்பற்றிய கருத்துக்களை வெளியிடுவார்தானே என்ற எண்ணத்தில் அவர் இருந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்களின் மத ரீதியான பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தபோதிலும், அது குறித்து அவர் வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாகவே தெரிகின்றது.
நாட்டை முன்னேற்றுவதற்கு சிறுபான்மை இன மக்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்த அவர் அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகக் கருத்துரைத்திருக்க வேண்டும் அல்லது அது குறித்த சமிக்ஞையையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அதனை அவருடைய உரையில் காணவில்லை.
சிறுபான்மை இன மக்கள் தங்களுடன் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கூற்றில் முக்கிய விடயம் பொதிந்திருக்கின்றது. அரசுடனான பங்களிப்பு என்பது சிறுபான்மை இன மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் அபிலாஷைகளை முதன்மைப்படுத்திய நிலையிலான செயற்பாடுகளுக்கு இடமில்லை என்பதையே அவர் தொனி செய்துள்ளார்.
சிங்கள பௌத்த தேசியத்தின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்களோ அந்த நிலைப்பாட்டை ஏற்று அதற்கு ஒத்துழைக்கும் வகையில் சிறுபான்மை இன மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதே அவருடைய கூற்றின் மறைபொருளாகும்.
அடுத்தது என்ன, சுவாரஸ்யமா அல்லது சோர்வு நிலையா?
மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பனவற்றுக்குப் பொறுப்பு கூறுகின்ற செயற்பாடுகளுக்கு தங்களிடம் இடமில்லை என்பதை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்பே கோத்தபாய தெளிவாகக் கூறியுள்ளார். இதே நிலைப்பாட்டையே இவருக்கு முன்னதாக மஹிந்த ராஜபக் ஷ தெளிவாகப் பல தடவைகள் எடுத்துரைத்திருந்தார் என்பதும், அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் இன்னும் மாறவில்லை என்பதும் நினைவுறுத்துவது முக்கியம்.
நாட்டில் அரசியல் ரீதியாகப் பிரச்சினைகள் இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகளே உள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் ஊடாக நாட்டில் நிரந்தரமான அமைதியையும் ஐக்கியத்தையும் உருவாக்க முடியும் என்பது ராஜபக் ஷக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையிலேயே அவர்கள் சிறுபான்மை இன மக்களின் பங்களிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள்.
அவர்களின் இந்த அரசியல் நம்பிக்கையே நாட்டை இன ரீதியாகப் பிளவுபடச் செய்திருக்கின்றது. இந்த பிளவு சரிசெய்யப்பட வேண்டுமானால் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ள கோத்தபாய ராஜபக் ஷ சிறுபான்மை மக்களுக்கும் தானே ஜனாதிபதி என்ற வகையில் அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இன்றைய அரசியல் யதார்த்தம் அத்தகையதொரு நகர்வுக்கு இடமில்லை என்பதையே மறைமுகமாக வெளிப்படுத்தி யிருக்கின்றது.
இந்த நிலையில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பைத் தேடிச் செல்லாத அரசியல் அணுகுமுறையைக் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடைய நிர்வாகத்தில் சிறுபான்மை இன மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் எத்தகைய அரசியல் அணுகுமுறையைக் கையாளப் போகின்றார்கள் என்பதே முக்கிய விடயமாகும்.
சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்களையும் அரவணைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறை படிப்படியாகக் கைவிடப்பட்டு, இப்போது அவர்களின் அனுசரணை இல்லாமல் சிங்கள மக்களுடைய ஆதரவில் மாத்திரமே அரச அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்த முடியும் என்ற புதிய அரசியல் வழித்தடம் இந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது, எத்தகைய அரசியல் அணுகுமுறையை அல்லது அரசியல் தந்தி ரோபாயத்தைக் கடைப்பிடிக்கப் போகின்றது என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. இது வரையிலான அரசியல் போக்கில் மாற்றங் கள் அவசியம் என்பதை இந்தத் தேர்தல் தெளிவாக உணர்த்தி இருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற் பது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமை ப்பு பரிசீலிக்க உள்ளதாக கூட்டமைப் பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரு மாகிய சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்தும் இந்த புதிய அரசியல் வழித்தடத்தின் அடை யாளமாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.
எதிர்ப்பரசியலைத் தீவிரமாகக் கடைப்பி டித்து, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் வரையில் அரச அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில்லை என்பதில் பிடிவாதமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது. இந்தக் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து மாறுவது பற்றி அது இப்போது சிந்திக்கத் தொடங்கியிருப்பது நாட்டு அரசியலின் தீவிரத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சாத்வீகப் போராட்டம் தொடக்கம் யுத்த மோதல்கள் அதனையடுத்த யுத்த முடிவு வரையில் அழித்தொழிக்கின்ற அரசியல் அணுகுமுறையே அரச தரப்பில் கடைப்பி டிக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இரண்டறக் கலக்கச் செய்கின்ற அரசியல் அணுகுமுறையில் சிங்கள பௌத்த தேசியம் தீவிர கவனத்தைச் செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில் எதிர்ப்பரசியலில் இருந்து அனுசரணை அரசியலுக்குத் தாவி யுள்ள தமிழ்த்தரப்பு அடுத்ததாக சரணாகதி அரசியலை நோக்கி நகர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதோ என்று எண் ணத் தோன்றுகின்றது.
இந்த நிலையில் அடுத்தடுத்த அரசியல் நிலைமைகள் சுவராஸ்யம் மிக்கதாக இருக்குமா அல்லது சோர்ந்து தளர்வதாக இருக்குமா என்பது தெரியவில்லை.
பி.மாணிக்கவாசகம்
Eelamurasu Australia Online News Portal