காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாக ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், நிலம் பாலைவனமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு(யுஎன்சிசிடி), ஈஷா அறக்கட்டளைக்கு சர்வதேச அங்கீகாரத்தை சமீபத்தில் வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஜெர்மனி நாட்டின் பான் நகரில் உள்ள யுஎன்சிசிடி தலைமையகத்துக்கு நவம்பர் 18ம் திகதி சென்றார். அவருக்கு ஐ.நா. அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, பூமியின் இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக யுஎன்சிசிடி அமைப்பின் நிர்வாக செயலாளர் இப்ராஹீம் தியாவ்வுடன் சத்குரு கலந்துரையாடினார். குறிப்பாக, நிலம் மற்றும் நீரை பாதுகாப்பதில் மனிதகுலத்தின் பொறுப்பு பற்றி இருவரும் பேசினார்கள். இந்நிகழ்ச்சி ட்விட்டரில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
இதில் தென்னிந்தியான உயிர்நாடியாக காவேரி நதிக்கு புத்துயிரூட்ட தொடங்கப்பட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கம் தொடர்பாக சத்குரு பேசுகையில், “காவேரி கூக்குரல் திட்டமானது அடிப்படையில், கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியுறும் காவேரி வடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு பொருளாதார தீர்வாக அமையும். மேலும், சூழலியல் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒவ்வொருவரும் அடுத்த 12 ஆண்டுகளில் 2 மரங்கள் நட உறுதியேற்றால் 242 கோடி மரங்கள் நடும் இலக்கை அடைந்துவிடலாம்… நம் பிரச்சினைகளும் தீர்வுகளும் தனித்தனியல்ல. அதன் ஒரு அம்சத்தை நாம் பயன்படுத்திக்கொண்டால் அது தீர்வாகிவிடும். அதை நாம் பயன்படுத்தாமல் விட்டால் பிரச்சனையாகிவிடும். தற்போது நமது மிகப்பெரிய பிரச்சனை மக்கள்தொகை. இதனை தீர்வுக்காக நாம் பயன்படுத்தபோகிறோமா இல்லையா என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வி?” என்றார்.
இப்ராஹீம் தியாவ் பேசுகையில், “ நம் உணவு மற்றும் உடைகளில் நாம் செய்யும் தேர்வுகள், நிலத்தை நேரடியாக பாதிக்கின்றன. நம்மில் ஒவ்வொருவரும் நிலம்மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நிலம் புனிதமானது என்பதை அனைத்து மதங்களும் அங்கீகரிக்கின்றன. ஆகையால், அவரவர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தக்கூடிய மதத்தலைவர்கள் அனைவரும் நிலச் சீரழிவு பிரச்சனையை சீர்செய்யும் முயற்சியில் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
இந்த கலந்துரையாடலுக்கு பிறகு, 100-க்கும் மேற்பட்ட ஐ.நா அதிகாரிகள் மத்தியில் சத்குரு சிறப்புரையாற்றினார்.