சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் பெருமளவிற்கு அமைதியானதாகவும், நம்பகத்தன்மை மிகுந்ததாகவும் இருந்த அதேவேளை இலங்கை சமூகத்தில் ஒன்றிணைவும், சகல தரப்பினரையும் அரவணைக்கும் போக்கும் இல்லாமை விசனத்துக்குரியதாக இருக்கின்றது என்று ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கு வந்திருந்த பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரிவித்திருக்கிறார்.
கானா நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரான பாணி தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டனர்.
இறுதியறிக்கை பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கம், அரசியல் கட்சிகள், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மக்களுக்கு அந்த அறிக்கை கிடைக்கச் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பூர்வாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு நாடு பூராகவும் தேர்தல் செயன்முறைகளை மிகவும் நேர்த்தியான முறையிலும், செயற்றிறனுடனும் முன்னெடுத்திருந்தது. சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட தேர்தல் செயன்முறைகள் மூலம் தேர்தல்களை முறையாக நடத்துவதில் இலங்கையில் காணப்படும் நீண்டகாலப் பாரம்பரியம் வெளிப்படையாகத் தெரிந்தது. வாக்காளர்களில் 84 சதவீதமானவர்கள் தேர்தலில் பங்கேற்றார்கள். இது மிகவும் கவனத்தைத் தூண்டுவதாக இருக்கின்றது. இலங்கையின் பிரஜைகள் ஜனநாயகம் மற்றும் பொதுநலவாயத்தின் அடிப்படை விழுமியங்கள் தொடர்பில் தெளிவானதொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.
என்றாலும் இந்தத் தேர்தல் தீர்வு காணப்படவேண்டிய சில முக்கிய பிரச்சினைகளையும் கிளப்பியிருக்கிறது.
ஒரு நம்பகமான ஜனநாயக செயன்முறை என்பது இலங்கையின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும், பத்திரமாகவும் வாக்களிப்பில் பங்கேற்பதற்கான உரிமையை உத்தரவாதப்படுத்துகின்ற, சகலருக்கும் இடம்தருகின்ற ஒன்றாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இலங்கை சமூகத்தின் சகல பிரிவினரையும் அரவணைக்கக்கூடிய முறையில் தேர்தல்களை நடத்தக்கூடியதாக மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று இலங்கை மக்களையும், அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கையின் செழிப்பான கலாசார மற்றும் பன்மைத்துவம் மதிக்கப்பட வேண்டும். கொண்டாடப்பட வேண்டும். சமூக ஒன்றிணைவிற்கும், சகல தரப்பினரையும் அரவணைக்கும் போக்கிற்கும் முன்னுரிமை அளிக்குமாறு சகல அரசியல் தலைவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
தேர்தலுக்கு முன்னரான நாட்களில் இன மற்றும் மத பதற்ற நிலையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. சில குழுக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானதையும் நாங்கள் அவதானித்தோம். ஐக்கியத்துக்கு முன்னுரிமை கொடுக்குமாறும், அரசியல் வாழ்வில் மதிப்பு மற்றும் சகிப்புத்தன்மை பண்புகளை வெளிக்காட்டுமாறும் அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களையும், சகல பிரஜைகளையும் கோருகின்றோம்.
தனியார் ஊடகங்கள் ஊடாகவும், சமூக ஊடகத்தளங்கள் மூலமும் வெறுப்புப் பேச்சுகள் ஊக்கப்படுத்தப்பட்டமை விசனத்திற்குரிய மற்றொரு அம்சமாகும். பிரசாரங்கள் முடிவடைந்த பின்னரான 48 மணித்தியால நேரத்திற்குள்ளும் கூட இந்த வெறுப்புணர்வுப் பிரசாரங்கள் தொடர்ந்ததைக் காண முடிந்தது.
ஒரு தொகுதி ஊடக வழிகாட்டல்கள் ஊடாக அரசாங்க ஊடகங்களை ஒழுங்கமைப்பதற்கான அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு கொண்டுள்ளது. ஆனால் தனியார் ஊடகங்கள் பெருமளவிற்கு ஒழுங்கமைக்கப்படாதிருப்பதாகவே தோன்றுகின்றது. அடுத்த தேர்தலுக்கு முன்னதாக ஒரு சட்டரீதியான கட்டமைப்பின் ஊடாக தனியார் மற்றும் அரசாங்க ஊடகங்கள் சுயாதீனமாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இது குறித்து எமது இறுதி அறிக்கையில் விரிவாகக் கூறுவோம்.
இலங்கையின் அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் ஒருவர் மாத்திரமே பெண் வேட்பாளராவார். உள்ளூராட்சி மட்டத்தில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் அரசியலில் பெண்களின் பங்கேற்பு விடயத்தில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. தேசிய மட்டத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும்.
இந்தத் தேர்தலின் ஊடாக இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை பொதுநலவாயத்தின் அடிப்படை ஜனநாயகப் பண்புகள் மீதான தங்களது பற்றுறுதியை வெளிக்காட்டியிருக்கிறார்கள். இந்தப் பண்புகளை சகல பிரஜைகளுக்குமாக மேலும் மேம்படுத்திப் பாதுகாக்குமாறு நாம் இலங்கையின் புதிய தலைமைத்துவத்தை வலியுறுத்திக் கேட்கின்றோம்.