வடகொரியாவில் விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார்.
கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வடகொரியாவின் விமானப்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.
நேற்று விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், “வடகொரியாவின் ராணுவத்தை வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்குவதற்கும், போருக்கு தயார் நிலையில் இருப்பதற்கும் இப்படி அறிவிப்பு இல்லாமல் ஒரு பயிற்சியை மேற்கொள்வது அவசியம்” என கூறினார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியா விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் “கிம் ஜாங் அன், நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என குறிப்பிட்டார்.