ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவர் கைது!

கஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்து ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவரை காவல் துறையினர்  கைது செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதி மட்டும் இன்றி புதர் மண்டிய பகுதிகளிலும் தீ பற்றி எரிகிறது. வறண்ட வானிலை காரணமாக தீ கட்டுக்குள் அடங்காமல் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுதீயில் இதுவரை 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

10 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இந்த நிலையில் 51 வயதான நபர் ஒருவர் தான் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்ததும், அதன் மூலமே காட்டுத்தீ பரவியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல் துறை  அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வேண்டுமென்றே காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.