10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீனாவில் முகாம்களில் அடைப்பு!

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கசிந்த சீன அரசு ஆவணங்களை வைத்து தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐநா நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கூறும்போது, சீனாவின் மேற்கு சின் ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர், இது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கடும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

கசிந்த இந்த ஆவணங்களை சீன அரசியல் வட்டார உறுப்பினர் ஒருவரால் வெளியே கசிந்ததாக நியூயார்க்டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்களில் 2014ம் ஆண்டு அதிபர் ஜி ஜின்பிங் இப்பகுதிக்குச் சென்று அதிகாரிகளிடம் பேசிய போது, அதாவது ரயில் நிலையம் ஒன்றில் உய்குர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதையடுத்து அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரிகளை சந்தித்து சிலபல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அப்போது, “பயங்கரவாதம், பிரிவினை வாதம், ஊடுருவல் ஆகியவற்றுக்கு எதிராக எந்த வித கருணையுமின்றி, எதேச்சதிகாரத்தின் அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்துங்கள்” என்று அதிபர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆனால் 403 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் எப்படி சேகரிக்கப்பட்டன, எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பது தெரியவில்லை என்று அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சீன அயலுறவு அமைச்சகத்துக்கு பதில் கேட்டு அனுப்பிய ஃபேக்ஸ் செய்திக்கு இன்னும் பதில் வரவில்லை.

அப்பகுதியின் கட்சித் தலைவராக சென் குவாங்க்வோ 2016-ல் நியமிக்கப்பட்ட பிறகே தடுப்புக் காவல் முகாம்கள் விரிவாக்கம் பெற்றதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன, இதே குவாங்வோதான் திபெத்தில் நியமிக்கப்பட்டிருந்த போது கடும் அடக்குமுறை நடவடிக்கைகளை திபெத்தியர்களுக்கு எதிராகக் கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.