ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் பப்பு நியூ கினியாவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய பாதிரியார் அங்குள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
“பப்பு நியூ கினியாவில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு இருக்கும் நிலையற்ற சூழல் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் சிலரை சந்தித்த பிறகு தான்ன், அவர்கள் மனிதத்தன்மையற்ற நிலைமைகளுக்குள் வாழ்வதை உணர்ந்து கொண்டேன்,” எனக் கூறியுள்ளார்.
வின்செண்ட் வான் லாங் என்னும் அப்பாதிரியார் குழந்தையாக இருந்த பொழுது ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்தவர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து 7 பேர் கொண்ட குழுவுடன் அகதிகளை சந்தித்ததாக கூறியுள்ள பாதிரியார் வான் லாங், “தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்தித்தது எங்களது ஆதரவு மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் பிரார்த்தனையை அவர்களிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பாக இருந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த நூற்றுக்கணக்கான அகதிகள் இன்றும் நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் இடையே கடுமையான மனநல நெருக்கடி நிலவுவதாகக் கூறப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal