தமிழ் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்

 

சினிமா பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை நேற்று (27) மாரடைப்பால் காலமானார். திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை, சினிமாவில் பாடல் எழுத வரும் முன் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். எம்பில் முடித்தவர், பிஎச்டி ஆய்வுப் பட்டத்துக்கான முயற்சியிலும் இருந்தார்.

சித்திரப் பாவை டிவி தொடருக்குதான் முதலில் பாடல் எழுதினார். தொடர்ந்து 15 தொடர்களுக்கு பாடல்கள் எழுதினார்.

புதுவயல் என்ற படத்தில் 1992-ல் தனது முதல் பாடலை எழுதினார் அண்ணாமலை. அதன் பிறகு கும்மாளம், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் உள்பட ஏராளமான படங்களுக்கு எழுதினார். விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் வந்த ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல்தான் இவரைப் பிரபலப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து 50 படங்களுக்கு எழுதி இருக்கிறார். தற்போது 20 படங்களில் எழுதி வந்தார். ரஜினியின் பிறந்த நாளுக்காக இவர் எழுதிய ‘ரசிகன்’ பாடல் மூலம் ரஜினி ரசிகர்களிடமும் அவர் பிரபலமாகத் திகழ்ந்தார். நேற்று (27) மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அண்ணாமலைக்கு வயது 49. மனைவி பெயர் சுகந்தி. 5 வயதில் ஒரு மகள் (ரித்விகா) இருக்கிறார்.