இலங்கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேரடியாக பல்வேறுபட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மற்றும் சமய சமூக பிரச்சினைகளை தோற்றுவித்தது. யுத்தத்தின் அதியுச்ச பாதிப்பை தன்னகத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தின் பின்னர் பாரிய அளவு இல்லாவிட்டாலும் ஒரு அளவிற்கு யுத்தத்தின் வடுக்களை குறைப்பதற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் இடம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள ரீதியான பாதிப்பு இதுவரை சரி செய்யப்பட முடியாததாகவே காணப்படுகின்றது.
மனிதர்களாகிய நாம் ஏதேனும் பிரச்சினைகளுக்கு அல்லது கசப்பான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கும் போது நாம் அனைவரும் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆளாகின்றோம். இருப்பினும் அதன் தாக்கங்கள் அல்லது வெளிப்பாடுகள் ஒருவருக்கொருவர் வேறுபட்டு காணப்படும். சிலர் அதனை மனதளவில் சகித்துக்கொள்வார்கள் மற்றும் சிலர் நெருங்கியவர்களின் உதவியை நாடிச் செல்வார்கள் இன்னும் சிலர் முறையான ஆலோசனைகள் மூலம் குறித்த வடுவிலிருந்து மீள முயற்சி செய்வார்கள்.
நேரடியாக யுத்தமும் பின்னர் உருவாக்கப்பட்ட சூழ்நிலையும் வட மாகாண பெண்கள் மத்தியில் பாரிய அளவிலான உளநல பாதிப்புக்கு வித்திட்டது என்பது உண்மையாகும். யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகுதியில் நிறைய பெண்கள் விதவைகளாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களாகவும் குடும்ப பொறுப்புக்களை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலான பெண்கள் நேரடியாக காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளை, கணவனை, சகோதரனை தேடி தேடி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து உள ரீதியில் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை பல கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டு செல்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க யுத்த பாதிப்பில் இருந்து தங்கள் குடும்பங்களை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் என அனேக பெண் தலைமைத்துவ குடும்ப பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் நேரடியாக கடனாளியாகி உள்ளனர். இவற்றுக்கு நேரடியாக நுண்நிதி கடன்வழங்கும் நிறுவனங்களை குறைகூற முடியாது. பல குடும்பங்கள் குறித்த நுண்நிதி கடன்களை பெற்று தமது வாழ்வாதாரத்தை முறையாக கையாண்டு முன்னேறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதே. ஆனால் இங்கு காணப்படும் பிரதான பிரச்சினை யாதெனின் குறித்த பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வந்தாலும் தேவையடிப்படையில் பட்டியலிடும் போது அவ்வகையான மேம்பாட்டு திட்டங்கள் தேவையினை விடவும் மிக குறைவாகவே காணப்படுகின்றன.
அதேபோல் அதிகமான குடும்பங்களின் வருமானத்தை விட அவர்களது செலவுகள் அதிகமாக காணப்படுவது, வீண்விரயம் மற்றும் வரவு செலவுகளை முறையாக கையாள முடியாமை போன்ற காரணங்களினாலும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் நுண்நிதி கடன்களை மேலதிக சுமைகளாக சுமக்கவேண்டிய நிலை உருவாகின்றது. இவ்வாறு அதிகளவான குடும்ப சுமை காரணமாக ஏற்படுகின்ற உளநல ரீதியான பிரச்சினைகளுக்கு முறையாக சிகிச்சைகள் பெறாவிடின் குறித்த உளநல பிரச்சினைகள் அவர்களை தற்கொலை போன்ற தவறான முடிவுகளை மேற்கொள்ள வழிவகுக்கின்றது. இவ்வாறான நிலையில் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தின் நிலைமை கேள்விக் குறியாகின்றது.
இவ்வாறான உளநல ரீதியான பிரச்சினைகளை வடக்கு கிழக்கு பெண்கள் அனுபவித்து வருகின்ற நிலையில் அரசாங்கம் முறையான ஒரு அரசியல் சமூக பொருளாதர சாசன செயற்றிட்டத்தினை மேற்கொள்கின்ற போது இவர்களுக்கான விசேட அவதானிப்புக்களை உள்ளடக்குவது பொருத்தமாக காணப்படும் என்பது உண்மையாகும்.
குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு என விசேட தொழில் பயிற்சிகள், சந்தைப்படுத்தல் வசதிகள் என அனைத்தும் உரிய முறையில் உருவாக்கப்பட வேண்டும். மேலும் வாழ்வாதார உதவிகள், அரசகடனுதவிகள் என்பன வழங்கப்படும் போது பெண்தலைமைத்துவ குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவதுடன் நுண்நிதி நிறுவனங்களின் கடன் சுமைக்குள் சிக்காது பாதுகாக்கப்படுவார்கள். அதே நேரத்தில் இளம் விதவைகள் விடயங்களில் அவர்களுக்கான அரச வேலைவாய்ப்புக்களை அல்லது மீள் வாழ்தல் நிலையை உருவாக்க வழி ஏற்படுத்தல் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கான கல்வி, பாதுகாப்பு மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வழிவகுத்தல் என்பன அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழிவகுக்கும் அதேவேளை அவர்களின் உளநல மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் அமையும்.
அதே நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர் விடயம், யுத்த விசாரணை, அங்கவீனம் உற்ற பெண்கள் விடயம் தொடர்பாக அரசாங்கம் உண்மையான பதிலை வழங்குவதே வடக்கு கிழக்கு பெண்களின் உளநல ரீதியான பிரச்சினைகளை குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.
ஓர் பிரச்சினை அல்லது மனவடு சார் அனுபவத்தினை எதிர்கொண்ட ஒருவரின் உளநலம் பாதிக்கப்படுவது இயல்பான விடயமாகும். அதனடிப்படையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்களின் உளநல மேம்பாட்டுக்காக உளநல ஆலோசகர்கள் மற்றும் உளவள உத்தியோகத்தர்கள் போதுமான அளவு பணியில் அமர்த்துதல் அவர்களுக்கான வாழக்கை மேம்பாட்டுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றேன்.
இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் ; (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ; (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
– ஜோசப் நயன் –
Eelamurasu Australia Online News Portal