பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக சுமார் 20,000 டொலர்களுக்கு மேல் பணப்பரிசு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாக The Sunday Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.
மனுஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளரையும் பராமரிப்பதற்கு தலா 300,000 டொலர்கள் வரிப்பணம் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு 20,000 டொலர்கள் கொடுப்பது இலாபகரமானது என அரசு கருதுவதாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னதாக தமது தாய் நாடு திரும்புவதற்கு சம்மதிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 10,000 டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் தற்போது இத்தொகை 20,000 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி கூறுகின்றது.
இதுவரை அரசிடமிருந்து பணம் பெற்ற 500 க்கும் மேற்பட்ட மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாமிலிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது தாய்நாடு திரும்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு திரும்புவதற்கு ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் 20,000 டொலர்களுக்கு மேல் வழங்கப்படவுள்ள திட்டம் இரகசியமாக பேணப்படும் நிலையில் குடிவரவு அமைச்சர் Peter Dutton இது தொடர்பில் கருத்துக்கூற மறுத்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுஸ் தடுப்பு முகாம் மூடப்பட வேண்டுமென பப்புவாநியூகினி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அங்குள்ள 832 ஆண்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.