ஆயிரத்து 178 வாக்கு எண்ணும் நிலையங்கள்!

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை நடைபெற வுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 1178 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.  அத்துடன் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக 371 வாக்கு எண்ணும் நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

 

நாளை காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபறெவுள்ளது. மாலை ஐந்து மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய  வாக்குப் பெட்டிகள்   அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும்  வாக்காளர் எண்ணிக்கைக்கு அமைய  வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்குகளை எணண நாடு முழுவதும் 371 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குருணாகல் மாவட்டத்திலேயே  அதிக தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி  தெரிவு செய்வதற்கான  எட்டாவது ஜனாதிபதி தேர்தலே நாளை நடைபெறவுள்ளது. இந்தத்  தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் ஜனாதிபதியை தெரிவு செய்ய 15992096 வாக்காளர்கள்   பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.